Wednesday, October 3, 2012

கிழக்கு மாகாண சபையில் தமிழர்களுக்கு ஏன் பதவி எதுவும் கிடைக்கவில்லை? விளக்குகின்றார் துரை

தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானித்துள்ளார்கள்!

முதலமைச்சர் சந்திரகாந்தன் செய்த மிகப் பெரிய தவறு.........
.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் ஏழு பதவிகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதன் காரணமாகவே தமிழர்களுக்கு பதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என முன்னாள் கிழக்கு மாகாண கால் நடை அபிவிருத்தி, விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் துரையப்பா நவரெட்னராஜா கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2008 மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் தெரிவான இவர் இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

போனஸ் ஆசனம் ஊடாக மீண்டும் மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள அவரிடம் மாகாண அமைச்சர்களில் தமிழர்கள் எவரும் இம்முறை இடம்பெறாமை குறித்து கேட்ட போது இவ்வாறு அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஏழு பதவிகளும் முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் பகிரப்பட்டதனால் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் எதுவும் கிடைக்கவில்லை.

2008 ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு மாகாண சபையில் கால் நடை அபிவிருத்தி விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராகப் பதவி வகித்தேன். அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராகப் போட்டியிட தமிழர்கள் எவரும் முன்வராத காரணத்தினாலே நான் போட்டியிட்டேன். திருகோணமலை மாவட்டத்திற்கும் எனக்கும் தொடர்பு உள்ளது நான் கங்குவேலி கிராமத்தை சேர்ந்தவன்.

திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை அபிவிருத்தி உட்பட சகல துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தது. கடந்த மாகாண சபையில் கூட ஆளும் கட்சியில் தமிழர்கள் எவரும் பிரதிநிதிகளாகத் தெரிவாகவில்லை.

இத்தேர்தலில் திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நான் போட்டியிட்டாலும் தமிழ் மக்கள் தங்களுக்கு அபிவிருத்தி, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அரசாங்க பிரதிநிதித்துவம் தேவையில்லை என அவற்றை நிராகரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கினார்கள். இதன் காரணமாக நான் தோல்வியடைந்தேன் எனக்கு கிடைத்த வாக்கு 933 வாக்குகள் மட்டும் தான்.

கடந்த மாகாண சபையில் அமைச்சர் பதவி வகித்த நான் மூவின மக்களுக்கும் சேவையாற்றியுள்ளேன். இதன் காரணமாக மக்கள் எனக்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. இதன் காரணமாக கூடுதலான வாக்குள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன் ஆனால் தமிழ் பிரதிநிதித்துவம் அரசாங்கத்திற்குள் தேவையில்லை என ஒட்டுமொத்த தமிழ் மக்களும் என்னை நிராகரித்தார்கள். இதற்காக மக்கள் மீது நான் ஆத்திரப்படவில்லை கோபப்படவில்லை மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக நான் ஏற்றுக்கொண்டேன்.

இந்த தேர்தல் முடிவைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானித்துள்ளார்கள் என்று தான் நான் கூறுவேன். தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியை தாங்களே எழுதியுள்ளார்கள் எதிர்காலத்தில் இதனால் வரும் நன்மையும் தீமைகளையும் அவர்களால் தேர்ந்தெடுக்கபட்டவை.

தமிழ் மக்கள் என்னைத் தூக்கியெறிந்தாலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போனஸ் ஆசனம் ஒன்றை வழங்கி என்னைத் தாங்கிப் பிடித்துள்ளார்கள். இதன் மூலம் எனது கௌரவத்தையும் பாதுகாத்தனர்.

இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் வழங்கிய சேவைக்காக இந்த கௌரவம் எனக்கு வழங்கப்பட்டது இதற்காக நான் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றியுடையவனாக இருப்பேன்.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் முதலமைச்சர் பதவி நான்கு அமைச்சர் பதவி சபைத் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் ஆகிய ஏழு பதவிகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். இந்த ஏழு பதவிகளும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பகிரப்பட்டதனால் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய பதவிகள் எதுவும் கிடைக்கவில்லை.

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனக்கு கிடைக்க வேண்டிய சுகாதார அமைச்சர் பதவி உதறி தள்ளினார். தனக்கு அப்பதவி தேவையில்லை தான் ஒரு சாதாரண உறுப்பினராக இருக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் விட்ட தவறு தனக்கு அந்த பதவி தேவையில்லாவிட்டாலும் தனது கட்சில் போட்டியிட்ட ஒருவருக்கு கிடைக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. அவரும் வேறு ஒரு கட்சிக்கு அந்த பதவியைக் கொடுத்திருக்க வேண்டும் என கூறினாரோ தெரியவில்லை. அந்த வகையில் தமிழ் மக்களுக்குரிய பதவி கைநழுவிப் போயுள்ளது.

இருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம்; காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் வருங்கால அரசியலை நிதானமாகச் சிந்தித்திருக்க வேண்டும் தமிழ் மக்களும் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளார்கள் தெரிந்திருக்க வேண்டும். இந்த மூன்று மாவட்டங்களிலும் அரசாங்கத்திற்கு வாக்களித்த தமிழ் மக்களை அரசாங்கம் உதறித்தள்ளியுள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது.

இந்நிலையில் இந்த கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு ஒரு பதவியாவது வழங்கியிருக்க வேண்டும் என்ற ஆதங்கம் பொதுவாக அரசியல் ஆய்வாளர்கள் மத்தியிலே பொதுவாக உள்ளது. ஆகவே இந்த பதவிப் பகிர்வுகளில் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்திற்கு வாக்களித்த தமிழர்கள் கூட விசனப்படுமளவிற்கு இந்த பதவிப் பகிர்வு இடம்பெற்றுள்ளது.

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போனஸ் பிரதிநிதித்துவத்தை வழங்கியது போல் அமைச்சு பதவியொன்றை வழங்கி தமிழ் மக்களைக் கௌரவித்திருக்க வேண்டும் என அரசுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பலரும் தங்கள் எதிர்பார்ப்பை என்னிடம் தெரிவித்தனர்.

ஆனால் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் தங்களுக்குள் பேரம் பேசி பதவிகளைப் பகிர்ந்து கொண்டார்களே தவிர தமிழ் மக்களை ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை. தங்களுடைய இனத்தை மையப்படுத்தி தங்களுடைய அரசியலை முன்னெடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ் மக்களை அவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

கடந்த 30 வருடகால யுத்தத்திற்கு முகம் கொடுத்து பாரிய இன்னல்களையும் துன்பங்களை பல இழப்புகளைச் சந்தித்த தமிழ் மக்களுக்கு ஒரு பதவியையாவது கொடுத்து அவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு வரவில்லை. ஆனால் தமிழ் மக்கள் அக் கட்சிகளுக்கு தான் இல்லா விட்டாலும் ஜனாதிபதிக்கு கூட இருக்க வில்லை என குறைபட்டும் கூறுகிறார்கள் ஆனால் இதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் அவ்வாறான குறைகளை நான் கூற வில்லை.

ஆனால் நான் கவலையுடன் கூறிக்கொள்வது என்னவென்றால் முஸ்லிம் கட்சிகள் ஒரு பதவியையாவது ஆகக் குறைந்து பிரதி தவிசாளர் பதவியையாவது தமிழ் மக்களுக்கு வழங்கி திருப்திப்படுத்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.

நான் இது தொடர்பாக இந்த கட்சிகளுடனோ அல்லது வேறு தரப்பினரிடமோ நேரடியாகப் பேசவில்லை காரணம் எனக்கு அரசியல் பின்புலம் இல்லை. நான் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரின் கவனத்திற்கு இதனைச் சுட்டிக்காட்டினேன். தேர்தலில் தோல்வியடைந்த எனக்கு பதவிகள் தேவையில்லை என்பதையும் அவரிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர்களுடைய மனங்களில் என்ன இருந்தது என்பதை என்னால் அறிய முடியவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com