மலேசியக் கப்பலை தடுத்துவைக்க நீதிமன்று உத்தரவு.
கொழும்பு துறைமுகத்தில், மலேஷிய கொடி தாங்கிய கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி, எம்.டி.சாக் சீரியஸ் என்ற கப்பல், கொழும்பு துறைமுக அதிகாரிகளால், இலங்கையில் இருந்து வெளியேறாதபடி தடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத காரணத்தால், கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளது. கப்பலில் பணிபுரிந்த 15 மாலுமிகளின் சார்பில் கனகசபை பூபாலசிங்கம் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 'கப்பலின் உரிமையாளர்கள் தற்போதைய ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டு உள்ளனர். அத்துடன் கப்பலின் தற்போதைய ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியப் பாக்கியை செட்டில் செய்யாமல், கப்பலை இலங்கை கடல் பகுதிக்கு வெளியே கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த விவகாரங்கள் ஒரு முடிவுக்கு வரும்வரை, கப்பல் இலங்கையை விட்டு வெளியேற கூடாது என உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஜயதிலக, கப்பலை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தும்படி உத்தரவு பிறப்பித்தார்.
0 comments :
Post a Comment