Friday, October 26, 2012

யாழ்ப்பாணம் தனியார் காணிகளில் இருந்து பொலிஸார் விரைவில் வெளியேறுவர்

யாழ். மாவட்டத்தில் தனியார் காணிகளிலில் நிலைகொண்டுள்ள பொலிஸார் விரைவில் வெளியேறுவர் என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று (26) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் தனியார் காணிகளில் மற்றும் தனிமனிதனுடைய வீடுகளில் பொலிஸாரின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு பொலிஸார் பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.

தனியார் வீடுகளைப் பயன்படுத்தும் பொலிஸார் அந்த வீடுகளுக்குரிய வாடகைகளையும் வீட்டின் உரிமையாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

அரச காணிகளில் பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் தனியார் காணிகளில் இருந்து பொலிஸார் வெளியேறி அரச காணிகளில் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகளை செய்வர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சில மறைவான இடங்களில் கலாச்சராச சீரழிவுகள் நடைபெற்று வருகின்றதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த கலாச்சார சீரழிவுகள் நடைபெறும் இடங்களில் அதனைத் தடுப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். கோட்டைப் பகுதி, புல்லுக்குளப்பகுதி, யாழ்.வைரவர் கோயிலடி ஆகிய பகுதிகளில் கலாச்சார சீரழிவுகள் நடைபெற்று வருகின்றன. ஆட்டோவிலும் இது போன்ற சீரழிவுகள் நடைபெறுகின்றன. இதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டோவில் நடைபெறும் கலாச்சர சீரழிவுகள் தொடர்பாக பொதுமக்கள் அல்லது நலன்விரும்பிகள் அந்த ஆட்டோ இலக்கத்தை இரகசியமான முறையில் எமக்குத் தெரிவிக்கலாம்.

இதேவேளை, வீதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் இலஞ்சமாக 1000 ரூபா வாங்கிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

வீதி விபத்துக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகளிடம் வீதி ஒழுங்கை மீறிச் செயற்படுபவர்களிடம் இலஞ்சம் வாங்கியது தொடர்பாக புலன் விசாரணை செய்யப்பட்ட நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யார் குற்றம் செய்தாலும் சட்டம் தண்டிக்கும். குறித்த நபர் செய்த முறைப்பாட்டை யாழில் ஊடகங்கள் ஆதாரபூர்வமாக வெளியிட்டன.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றவாளியாக பொலிஸ் உத்தியோகத்தர் இனங்காணப்பாட்டார். இதனால் அவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு எரிக் பெரேரா தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com