சிறுமி மலாலாவை சுட்டவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தீவிரவாதி என பரபரப்பு தகவல்
பாகிஸ்தானின் உயரிய விருதை பெற்ற சிறுமி மலாலாவை துப்பாக்கியால் சுட்ட தலிபான் தீவிரவாதி ஏற்கனவே, ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் வசிப்பவள் மலாலா (14). தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த இந்த பகுதியில், பெண்கள் பள்ளிக்கு செல்ல கூடாது, பொது இடங்களுக்கு ஆண்கள் துணை இல்லாமல் செல்ல கூடாது, உடல் முழுக்க மறைக்கும் உடை அணிய வேண்டும் என்பது உள்பட பல நிபந்தனைகளை விதித்தனர். இதை எதிர்த்து தனது 11வது வயதில் இணையத்தளங்களில் பல கட்டுரைகளை மலாலா எழுதினார் பிபிசியிலும் உரை நிகழ்த்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த 9ம் தேதி மலாலா மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தற்போது சிறுமிக்கு இங்கிலாந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்திய 2 தீவிரவாதிகளில் ஒருவர் அட்டாவுல்லா. இவரை 2009ம் ஆண்டே பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால், பின்னாளில் விடுவிக்கப்பட்டார் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் இங்கிலாந்தில் உள்ள குயின் எலிசபெத் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மலாலா, அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், கை, கால்களை அசைப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், சிறுமிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment