இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவுடன் உள்ளது -அசோக்
இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று இலங்கைக் கான இந்தியத் தூதர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப் படும் நலத் திட்டங்கள் குறித்து கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியி லேயே அதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையுடனான இந்தியாவின் உறவு வரலாறு, கலாசார ரீதியாக வலுப்பெற்று வந்துள்ளது. அந்நாட்டில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு, மீள் குடியேற்றம், கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது போன்றவற்றில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அத்துடன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புல்மோடையில் அவசரகால மருத்துவமனை அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாணிக் ஃபார்ம்ஸ் என்ற இடத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மறுவாழ்வு உதவிகளை இந்தியா வழங்கி வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், முதல் கட்டமாக வீட்டு வசதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது இரண்டாவது கட்டமாக 43 ஆயிரம் பேருக்கு வீடுகளைக் கட்டித்தர இந்தியா நிதியுதவி செய்கிறது. இந்த நிதி பயனாளிகளுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள் கட்டித் தருவது மட்டுமின்றி பொருளாதார ரீதியாக அங்கு வாழும் மக்கள் ஏற்றம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
அதுமாத்தரமன்றி வடக்கு மாகாணத்தில் 43 ஆயிரம் வீடுகள், 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்திருந்தார். அதில் முதல் கட்டமாக 1,000 வீடுகள் கட்டும் பணி கடந்த ஏப்ரலில் தொடங்கியது. இரண்டாவது கட்டமாக 43 ஆயிரம் வீடுகள் வடக்கு மாகாணத்தில் கட்டப்படும். இதற்கென கடந்த ஜனவரியில் இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொண்டன. மீதமுள்ள 6,000 வீடுகள் ஒப்பந்த அடிப்படையில் சில ஏஜென்சிகள் மூலம் கட்டப்படும். அதில், 4,000 வீடுகள் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள மத்திய மாகாணப் பகுதியில்(மலையகப் பகுதிகளில்) கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் கல்வி மேம்பாட்டுக்காக 79 பாடசாலைகள் மறுசீரமைக்கப்பட்டன. பொறியியல் மற்றும் கலாசார மையங்கள் அமைக்கப்பட்டன. கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சேவா புராஜெக்ட் என்ற அரசு சாரா அமைப்பு மூலம் மகளிருக்கு அதிகாரம் வழங்கும் பணிகளையும் நிறைவேற்றி வருகிறோம். அச்சுவேலியில் ரூ. 10 கோடி மதிப்பில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித் துள்ளார்.
அத்துடன், காங்கேசன்துறை துறைமுகத்தில் போராலும் நிஷா புயலாலும் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீர்செய்யப்பட்டுள்ளன. அங்கு அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு படகு, கப்பல் போக்குவரத்துக்கான வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. விமானப்படைக் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி விமான தளத்தை சிவில் விமான நிலையமாக மாற்ற இந்தியா தயாராக உள்ளது. ஆனால், அதற்கு இலங்கை அரசுதான் விருப்பம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது. அதற்கு காரணம் சரியான திட்டமிடல் இன்றி தொடங்கப்பட்ட சேவைதான். 1,100 பயணிகள் செல்லும் வகையில் சொகுசு கப்பல் சேவை அறிமுகமானது. அதற்கு பொது மக்களிடையே வரவேற்பு இல்லை. அதனால் சிறிய வடிவில் 400 பயணிகள் செல்லும் வகையில் கப்பல் சேவை இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என மத்திய அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. அது குறித்து புதிய சேவையாளர்களை ஈர்ப்பதற்காக சில நிறுவனங்களுடன் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை பேச்சு நடத்தி வருகிறது எனவும்,தலைமன்னார் வரை ரயில் சேவை, கொழும்பில் இருந்து தலைமன்னார்வரை ரயில் போக்குவரத்து சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் 2013ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ராமேசுவரத்தையும் தலைமன்னாரையும் கப்பல் சேவை மூலம் இணைத்து இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவுப்பாலத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவுடன் உள்ளது. தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைப் பயணிகளுக்கு எதிராக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றது துரதிருஷ்ட வசமானது. இரு நாடுகளிடையிலான உறவுகளை உள்விவகாரங்களை வைத்து ஒப்பிடக் கூடாது. இந்த விஷயத்தில் தெளிவான பார்வையுடன் விரிவான முறையில் இந்தியா பார்க்கிறது. அதனால், வரும் காலங்களிலும் இலங்கையுடனான பாதுகாப்பு நல்லுறவு தொடரும் என அசோக் காந்தா தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment