நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலாளரின் முகத்தை இலக்கு வைத்து தாக்குதல்!
தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்க - ஜனாதிபதி
நீதிச்சேவை ஆணைக்குழுச் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீது இனந்தெரியாத குழுவினர் இன்று காலை கல்கிஸை பகுதியில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதல் காரணமாக திலகரத்னவின் முகம், கை விரல்கள் காயமடைந்துள்ளன என்றும், தாக்குதல் நடத்திய நபர்கள் அவருடைய கையடக்கத் தொலைபேசியையும் பறித்துச் சென்றுள்ளனர் என்று, பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரும், கல்கிஸை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தாக்குதல் சம்பவத்தை அரசாங்கம் கண்டித்துள்ளது எனவும், அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாட்டிலுள்ள சகல நீதவான் கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் நாளை திங்கட்கிழமை முதல் நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித் துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment