"சாண்டி' புயல் எதிரொலி: ஒபாமா பிரசாரம் ரத்து
நியூயார்க்: அமெரிக்காவை மையம் கொண்டுள்ள, "சாண்டி' புயலால், ஐ.நா., சபை, பங்கு சந்தை உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. அதிபர் தேர்தலுக்குரிய பிரசாரத்தை, ஒபாமா ரத்து செய்துள்ளார். கரிபியன் கடலில் தோன்றிய, "சாண்டி' புயல், கடந்த வாரம், பகாமாஸ் தீவுகளையும், கியூபா, ஹய்தி ஆகிய நாடுகளையும் தாக்கியது. தற்போது இந்த புயல், அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களை மையம் கொண்டுள்ளது.
இந்த புயலின் காரணமாக, 30 செ.மீ., வரை பலத்த மழை பெய்யும் என்பதால், பல மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள நான்கு லட்சம் மக்கள், வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள், பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாகாணங்களில், சூறாவளி பிரசாரம் மேற்கொண்டிருந்த அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியும் தங்கள் பிரசாரத்தை ரத்து செய்துள்ளனர்.
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையும் மூடப்பட்டுள்ளது. நியூயார்க்கில் இரட்டை கோபுரம், விமானம் மூலம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட போது, அமெரிக்க பங்கு சந்தை மூடப்பட்டது.அதற்கு பிறகு தற்போது நியூயார்க்கில், புயல் காரணமாக, பங்கு சந்தை மூன்று நாட்களாக ரத்தாகியுள்ளது.
பலத்த சூறைக்காற்று வீசுவதால், 6,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பூமிக்கு அடியில் ஓடும் ரயில் மற்றும் பஸ் சேவையும் நிறுத்தப்பட்டு விட்டது. கடும் புயல் வீசுவதால், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment