பல மர்மங்களுடன் கொலை செய்யப்பட்ட இராணுவ வீரரின் உடலை உரிமை கோரிய இரு மனைவியர்
அம்பேபுஸ்ஸ அரச விவசாய பண்ணையருகில் எரித்து கொலை செய்யப்பட்ட இராணுவ வீரரின் சடலத்தை பெற இரு மனைவிமார் உரிமை கோரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோமகம பெருகொடியவில் வசித்துவந்த கொலை செய்யப்பட்ட 39 வயதுடைய விபுல ரோஹன திசாநாயக்க என்ற இராணுவ வீரர், இராணுவ சேவையிலிருந்து விலகி பல விதமான வியாபார வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், வட்டிக்கு பணம் கொடுத்து பெரும் தொகையை சம்பாதித்து வந்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது. இன்நிலையில், கொலை செய்யப்பட்ட இவரது சடலத்தை பெற இரு மனைவிகள் மீரிகமை பொலிஸ் நிலையத்திற்கு வந்ததை யடுத்து குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட குறித்த நபர்தான் தனது கணவர் எனக் கூறி ஹோமகமை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய ஒரு பெண் பொலிஸ் நிலையத்தில் தொரிவித்துக் கொண்டிருந்த வேளையில், கொஸ்கமையைச் சேர்ந்த இன்னொரு பெண் தனது இரண்டு மகள்களுடன் வந்து, இறந்தர் எனது கணவர் என்றும், தன்னை 1994 ஆம் ஆண்டில் திருமணம் செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் இராணுவ வீராங்கணை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து உசாராகிய பொலிஸார் இரு பெண்களையும் விசாரணை செய்தார். அதனையடுத்து கொஸ்கமையைச் சேர்ந்த குறித்த பெண் இறந்தவரின் முதல் மனைவியென்றும், தனது முதல் மனைவியிடம் இருந்து பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்த குறித்த இராணுவ வீரர், ஹோமகமையை சேர்ந்த பெண்ணுடன் வாழ்ந்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்ததுள்ளது. அத்துடன் கொலை செய்யப்பட்ட குறித்த நபருக்கு பல பெண்களுடன் தொடர்பிருந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இறந்த இராணுவ வீரர் திசாநாயக்க தன் நண்பரொருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் விளக்க மறியலிலிருந்து ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கொலை செய்யப்பட்ட திசாநாயக்கவை கொலை செய்ய அப்பகுதியின் பாதாள உலக தலைவரை ஒருவரை பத்து இலட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தியதாகவும், கடந்த நான்கு மாதங்களாக பல்ட் பிரதீப் என்று அழைக்கப்படும் பாதாள உலக தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இறந்த திசாநாயக்க சில நாட்களுக்கு முன் வத்தளை பிரதேசத்தில் வாகனம் ஒன்றை வாடகைக்கு பெற்றுள்ளார். சபுகஸ்கந்தை கொட்டுன்ன நதியருகில் காணப்பட்ட இவ் வாகனத்தில் இரத்தக் கறைகள் படிந்திருந்தன. வாகனத்தில் எரிபொருள் தீர்ந்ததும் வாகனத்தை அவ்விடத்தில் விட்டுச் சென்றுள்ளார். வாகனத்தில் போடப்பட்டுள்ள இறப்பர் விரிப்பும் சடலம் எரிந்த நிலையில் காணப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இறந்த திசாநாயக்க 25ம் திகதி சனிக்கிழமை காலை இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும்போது பகல் உணவுக்கு வீடு திரும்புவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் இவர் பகல், இரவு இரண்டு வேளையிலும் வீடு திரும்பாததால் மனைவி 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந் நிலையில் இறந்தவர் அன்றைய தினம் பகல் வேளையில் ஹோமகமையில் மாலையில் கிரிந்திவெலை பிரதேசத்தில் காணப்பட்டதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இறந்தவர் அன்றைய தினம் பனாகொடையிலுள்ள இராணுவ முகாமிற்கு செல்வதாக கூறிய தகவலும் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
பொலிஸ் நிலையம் வந்த இரு மனைவிமாரின் வாக்கு மூலத்தையும் பதிவுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டதையடுத்து கம்பஹா பெரிய ஆஸ்பத்திரியில் மரண விசாரணைகள் நடைபெற்றன. சட்டரீதியான மனைவிக்கு பூதவுடலை கையளிக்குமாறு அத்தனகல்லை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த புஷ்பகுமார, மீரிகமை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.சேனாநாயக்கவுக்கு பணிப்புரை வழங்கினார்.
0 comments :
Post a Comment