கருணாநிதிக்கு நிம்மதியே போச்சாம் - அவரே காரணம் கூறுகிறார்!
"ஊரிடத்துப் பகை என்றால் உறவிடத்துப் போயுரைப்பேன், உறவிடத்தே பகை என்றால், யாரிடத்துப் போயுரைப்பேன்?'' என்ற நிலையில் நான் நிம்மதி இழந்திருக்கிறேன்'' என்று டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம் மோதல் குறித்து இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி வேதனையுடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள வேதனை அறிக்கையில், நான் அடிக்கடி ஒன்றை சொல்லியிருக்கிறேன். தந்தை பெரியார் வலியுறுத்தி சொல்வார் என்று குறிப்பிட்டே அதை சொல்லியிருக்கிறேன். அதுதான் கழகத்தின் தாரக மந்திரங்களான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றுள் "கட்டுப்பாடு''தான் முக்கியம்.
திராவிட முன்னேற்ற கழகம் பல முறை தேர்தலில் தோற்றிருக்கலாம். பல முறை வெற்றி பெற்றிருக்கலாம். வெற்றி, தோல்வி பற்றி நாம் எந்தக்காலத்திலும் முறையே வெறியாட்டம் போட்டதோ, வீழ்ந்து பட்டதாக நினைத்ததோ இல்லை. ஆனால் கட்டுப்பாடு குலைந்தாலோ-சேதாரம் ஏற்பட்டாலோ பிறகு கழகத்தை காப்பாற்ற முடியாது.
என்னுடைய வயது 89, பேராசிரியரின் வயது 90. நாங்கள் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தால் எங்களை கேட்பவர்கள் யாரும் இல்லை. இருந்தாலும் காலையிலும், மாலையிலும் கழக அலுவலகத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறோம். தமிழகத்தில் கடந்த ஆண்டு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாம் எதிர்க்கட்சியாக கூட வர முடியாத அளவிற்கு தோல்வியை கண்டு விட்டோம்.
நான் அதற்காக துவண்டா போய் விட்டேன்? கழகப் பணி ஆற்றாமல் இருந்து விட்டேனா?. என்னை சந்திக்க வருகிற நமது இயக்க முன்னோடிகள் மாத்திரமல்ல, தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் மின்வெட்டின் காரணமாக மக்கள் எந்த அளவிற்கு கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும் விளக்கி, என்னிடம் எடுத்துக் கூறும்போது, என் மனதிலே ஆளுங்கட்சிக்கு மக்களின் எதிர்ப்பு பெருகுகிறது என்ற செய்தியைவிட, இரண்டு கழக முன்னோடிகள் ஒருவரோடொருவர் குழு சேர்த்துக்கொண்டு இந்த மாவட்டத்திலே மோதிக்கொள்கிறார்கள். அந்த வருத்தம், என்னை உண்ண விடாமலும், இரவு முழுவதும் தூங்க விடாமலும் செய்து விடுகிறது.
நேற்று மாலையில் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் அளித்த பேட்டி பற்றி அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும், தம்பி முரசொலி செல்வமும் என்னிடம் வந்து கூறியவுடன், "இன்றிரவு என் தூக்கம் போச்சு'' என்றுதான் கூறினேன்.
இன்று (நேற்று) காலை திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி என்னிடம் நேரடியாக பேசுவதற்கு தயங்கிய நிலையில், என் செயலாளரிடம் மன வேதனையையெல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறார். "நம் கழகத்தில் இப்படியெல்லாம் கிடையாதே, இதென்ன புதுப்பழக்கம்'' என்று பதறியிருக்கிறார்.
அண்ணா சொன்னாரே "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை'' என்று அதெல்லாம் மறந்து போய் விட்டதா? என்னுடைய குணம் முக தாட்சண்யம். சில கட்சிகளின் தலைமையை போல எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், கட்சிக்காக உழைத்தவர்களாக இருந்தாலும், மூத்தவர்களாக இருந்தாலும் கணநேரத்தில் "கட்டம் கட்டி'' விடுகிறார்கள்? என்னால் அப்படி-இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் - இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, கடினமாக இருக்க முடிவதில்லை. அதையே காரணமாகக் கொண்டு, தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கருதினால் பிறகு நான் என்ன தான் செய்ய முடியும்?
இரண்டு நாட்களுக்கு முன்பு பழனிமாணிக்கம் என்னை சந்தித்தார். அவருடைய தொகுதியிலே நடைபெறுவதை பற்றியெல்லாம் என்னிடம் கூறினார். பொறுத்திருங்கள், தலைமைக்கழகத்திற்கு புகாராக எழுதிக்கொடுங்கள் என்று சொன்னேன். அதற்குள் என்ன அவசரம்? எதற்காக இந்தப் பேட்டி? நான் அனைவருடனும் எளிதில் கலந்து, அன்போடு பழகுகிறேன் என்பதற்காகவே - அதையே பலவீனமாக எடுத்துக் கொண்டு, எது வேண்டுமென்றாலும் செய்வதா? "மறப்போம் மன்னிப்போம்'' என்று அண்ணா சொன்னபடி, நான் எல்லாவற்றையும் மன்னித்து விடுகிறேன், மறந்து விடுகிறேன் என்பதற்காக எதையும் செய்ய துணிவதா?
பழனிமாணிக்கம் தஞ்சையிலே பேட்டி கொடுத்து விட்டு, அவரது மனச்சாட்சியே உறுத்திய காரணத்தால் நேற்றிரவே அவசர அவசரமாக சென்னை வந்து என்னை சந்தித்து என்ன காரணத்தால் அந்த பேட்டியை கொடுக்க நேரிட்டது என்பதை என்னிடமும், துணை பொதுச்செயலாளர் துரைமுருகனிடமும், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடமும் விளக்கினார்.
"ஊரிடத்துப் பகை என்றால் உறவிடத்துப் போயுரைப்பேன், உறவிடத்தே பகை என்றால், யாரிடத்துப் போயுரைப்பேன்?'' என்ற நிலையில் நான் நிம்மதி இழந்திருக்கிறேன். பாலுவிற்காக பழனிமாணிக்கம் அல்ல - பழனிமாணிக்கத்தை தாக்குவதற்கு அங்கே யார் முற்பட்டிருந்தாலும், பழனிமாணிக்கத்தை விட வேகமாக ஓடி வந்து பாதுகாக்க கூடியவர் தான் டி.ஆர்.பாலு. என்ன செய்வது? அதைத்தான் அண்ணா "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை'' என்றார்.
"நீர் இடித்து நீர் விலகாது'' என்பது முதுமொழி அல்லவா? மறந்து விடாமல் அதை நினைப்போம்; மறந்திருந்தாலும் மீண்டும் அதை நினைப்போம்! கட்டுப்பாடு போற்றி, கழகத்தை உயிரெனக் காப்போம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment