இந்திய விமானப்படைக்கு இத்தாலி ஹெலிகாப்டர் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல்?
இந்திய விமானப்படைக்கு இத்தாலியில் இருந்து வாங்க உத்தேசிக்கப்பட்ட ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில், ஊழல் எதுவும் நடந்துள்ளதா என்பது குறித்த அறிய, இது குறித்த தகவல்களை அளிக்கும்படி, அந்நாட்டை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய விமானப்படையில் தற்போது பயன்பாட்டில் உள்ள சேதக் ரக ஹெலிகாப்டர்கள் மிகவும் பழமையானவை என்பதால் அவற்றிற்கு பதிலாக புதிதாக 197 ஹெலிகாப்டர்களை இத்தாலியின் பின்மெக்கானிகா நிறுவனத்திடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. இத்துடன், இந்திய வி.ஐ.பி.,க்களின் பயன்பாட்டிற்காக பின்மெக்கானிகாவின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு கடந்த 2010ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 720 மில்லியன் டாலர் ஆகும்.
இந்நிலையில், இத்தாலியின் பின்மெக்கானிகா நிறுவனம், உலகளவில் இது போன்ற டெண்டர்களை பெற கோடிக்கணக்கில் லஞ்சம் அளிப்பதாக சமீபத்தில் நடந்த விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இந்திய விமானப்படைக்கு வாங்கப்படவிருந்த ஹெலிகாப்டர் டீலிலும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த இந்திய பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக இத்தாலி நடத்திய விசாரணையின் தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி, அந்நாட்டை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இத்தாலி ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில், ஹெலிகாப்டர்களை பரிசோதித்த இந்திய விமானப்படை பிரிகேடியர் ஒருவர் 5 மில்லியன் டாலர் வரை லஞ்சம் பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இத்தாலியுடனான டீல் கிடப்பில் போடப்பட்டு, தற்போது ரஷ்யாவின் கமோவ் மற்றும் ஐரோப்பாவின் யூரோகாப்டர் ரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
0 comments :
Post a Comment