இலங்கையில் கால் பதிக்கின்றது ஐக்கிய அரபு இராச்சியம்
இலங்கையில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் முன்வந்துள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் சமாதான சூழ்நிலை, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நிலைமை முதலீட் டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் புதிய தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பதாஹ் அல் முல்லா அமைச்சர் றிசாட் பதியூதீனை சந்தித்து உரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பெறுமானம் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. குறித்த பெறுமானம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமென தூதுவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள தனியார் முதலீட்டாளர்களும் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர்.
இதனால் இரு தரப்பு முதலீட்டு காப்புறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் ஆர்வத்துடன் இருப்பதாக இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். டுபாய்க்கும் கொழும்புக்குமிடையில் ஒரு வாரத்திற்கு 58 விமான சேவைகள் இடம்பெறுகின்றன. இது இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய தொடர்பை வெளிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்தின் தனியார் முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை முதலீட்டு துறையின் தரத்தை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு செயற்படுவதாகவும் அமைச்சர் றிசாட் பதியூதீன் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment