Saturday, October 20, 2012

'ஃபிடல் காஸ்ட்ரோ இன்னும் சில வாரங்களே உயிருடன் இருப்பார்'

கியூபாவின் புரட்சிகர அதிபர் பிடல் காஸ்ட்ரோவை மிகப்பெரிய 'ஸ்ட்ரோக்' தாக்கியுள்ளது என்றும் அவர் இன்னும் சில வாரங்களே உயிருடன் இருப்பார் என்றும் வெனிசூலா மருத்துவர் ஒருவர் கூறியதாக எழுந்துள்ள வதந்திகளை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள காஸ்ட்ரோவின் உறவினர்கள் மற்றும் கியூபாவில் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தச் செய்திகளை மறுத்து அறிக்கை விட்டபின்பும் இந்த வதந்திகள் அடங்குவதாக இல்லை.

அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் இது குறித்த செய்தி ஒன்றில் ஜோஸ் ரஃபேல் மார்கினா என்ற மருத்துவர் 86 வயதான பிடல் காஸ்ட்ரோ, மிகப்பெரிய ஸ்ட்ரோக் வந்ததால் அசைவின்றி இருக்கிறார் என்றும் ஆனாலும் உயிர்காப்பு அமைப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை என்று செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும் காஸ்ட்ரோவின் நண்பரும் கருத்தியல் சகாவுமான வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் உடனடியாக மேற்கு ஹவானாவுக்கு சென்றுள்ளார் என்றும் அதே பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் எந்த ஒரு கூற்றும் ஐயமற தெளிவு பெறவில்லை. ஏனெனில் ஃபிடல் காஸ்ட்ரோ இறந்து விட்டார், அவர் கோமாவுக்குச் சென்று விட்டார் என்றெல்லாம் தொடர்ந்து ஊடகங்கள் வதந்தியில் ஈடுபட்டுவந்துள்ளதால் தற்போதைய இந்த செய்தியும் அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளது போல் ஒரு வதந்தியாகவே இருக்கும் என்று தெரிகிறது.

சாவேஸ் மீண்டும் வெனிசூலா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிடல் காஸ்ட்ரோ தரப்பில் எந்த வித அறிக்கையும் வெளியிடப்படாததால் காஸ்ட்ரோவின் உடல் நிலை குறித்த சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.

14ஆம் போப்பை அவர் கடந்த மார்ச்சில் சந்தித்ததோடு சரி அதன் பிறகு அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்பதும் அவரது உடல் நிலை குறித்த ஐயத்தைக் கிளப்பியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com