Wednesday, October 3, 2012

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் தென்மாகாண சபைகளில் திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றம்

திவிநெகும சட்டமூல நிறைவேற்றத் தின் மூலம் சிறுபான்மையினருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இச் சட்டமூலத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதி காரங்கள் மீறப்படமாட்டாது-ஹாபீஸ்

திவிநெகும சட்டமூலத்திற்கு சப்ரகமுவ, தென் மாகாண மற்றும் கிழக்கு மாகாண சபைகள் பூரண அங்கீகாரம் வழங்கியுள்ளன. கிழக்கு மாகாண சபையில் 6 மேலதிக வாக்குகளால் நேற்று திவிநெகும சட்டம் நிறைவேற்றப்பட்ட அதேவேளை, சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளில் இன்று 15 மேலதிக வாக்குகளால் திவிநெகும சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியவதி கலப்பத்தியின் தலைமையில் ஆரம்பமானது. கிழக்கு மாகாண முதலமைச்சர் இது தொடர்பிலான பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார். இதனையடுத்து திவிநெகும சட்ட மூலம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆளும் தரப்பு, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்ட மூலத்திற்கு ஆதரவாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐ.தே.க. உறுப்பினர்கள் சட்ட மூலத்திற்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்தனர். விவாத முடிவில் சட்ட மூலம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் ஐ.தே.க. குழுத் தலைவர் தயா கமகே ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இதன் பிரகாரம் வாக்கெடுப்பு இடம் பெற்றதோடு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரும் ஆளும் தரப்புடன் இணைந்து சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்படி திவிநெகும சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் 6 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளில் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 27 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் பிரகாரம் சப்ரகமுவ மாகாணத்தில் மேலதிக 15 வாக்குகளால் திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை திவிநெகும சட்டமூல நிறைவேற்றத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை எனவும், இதனைக் கருத்தில் கொண்டே திவிநெகும சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாக வாக்கு அளித்தது என கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திவிநெகும சட்டமூலத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மீறப்பட மாட்டாது என மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

திவிநெகும சட்ட மூலம் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது அதற்கு மாகாண சபைகளின் அங்கீகாரம் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com