கலைக்கப்பட்ட வட மாகாண சபையின் ஆளுநருக்கு அதிகாரம் உண்டா? உச்ச நீதிமன்றம் சொல்லும்
கலைக்கப்பட்ட மாகாண சபை ஒன்றின் சார்பில் அதன் கருத்து நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அதிகாரம் குறிப்பிட்ட அம்மாகாண சபையின் ஆளுநருக்கு உண்டா, என்பதைத் தீர்மானிக்கும் விடயம் தொடர்பில், அரசமைப்பின் ஏற்பாடுகளுக்கு பொறுப்பு கூறும் சட்ட அதிகாரம், நாட்டின் சிரேஷ்ட நீதிமன்றமான உச்ச நீதி மன்றத்துக்கு மட்டுமே உரியது என்பதால் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முடிவு செய்தது.
வடக்கு மாகாண சபையில் திவிநெகும சட்டமூலம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறியை எதிர்மனுதாரராகக் குறிப்பிட்டு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தாக்கல் செய்திருந்த ரிட் (ஆணைகோர்) மனுவை நேற்று பரிசீலனைக்கு எடுத்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்மானத்துக்கு வந்தது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டிருந்த திவிநெகும சட்டமூலத்தை ஒட்டியே இந்த மனுவை மாவை சேனாதிராஜா தாக்கல் செய்திருந்தார்.
திவிநெகும வாழ்வெழுச்சி சட்டமூலத்தில் குறிப்பிடப் பட்டுள்ள விவகாரங்கள் அரசமைப்பின் 13 ஆவது திருத்தப்படி மாகாண சபைக்குரிய பட்டியலில் அடங்குபவை என்பதால் அரசமைப்பின் 154 (எ)3 ஆம் பிரிவின் கீழ் அந்தச் சட்டமூலத்தை மாகாண சபைகளின் கருத்துக்கு ஜனாதிபதி சமர்ப்பிக்காத நிலையில் அதனைச் சட்டமாக்க முடியாது என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.
வடக்கு மாகாண சபை தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் இவ்விடயத்தில் அந்தச் சபையின் கருத்து நிலைப்பாடு இதுதான் என்பதை ஜனாதிபதியால் வடக்கு மாகாண சபை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜி. ஏ. சந்திரசிறி வெளிப்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக மாவை தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
0 comments :
Post a Comment