Tuesday, October 2, 2012

மன்னாரில் இந்திய அரசின் உதவியுடன் புதிய வீடமைப்பு திட்டம் இன்று ஆரம்பம்!

குறித்த 6000 வீடுகளும் நான்கு மாத காலத்திற்குள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பூரணப்படுத்தப் பட்டு மக்களிடம் கையளிக்கப்படவு ள்ளது

இலங்கை தமிழ் மக்களுக்கான வீடமை ப்பு திட்டமொன்றை ஆரம்பிக்க இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது இதற்கமைய யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாகவே புதிய வீடமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இத்திட்டத்திற்கிணங்க முதற்கட்டமாக 6 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் மன்னார் மற்றும் வவுனியா கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய இன்று காலை 10 மணிக்கு மன்னார் பெரிய மடு வித்தியாலயத்தில் வீடமைப்பு நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. மேலும் வடக்கில் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களிலும் குறித்த வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ள 6 ஆயிரம் வீடுகளை அமைக்கும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர்களான பெஷில் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, குணரத்ன வீரகோன் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த 6 ஆயிரம் வீடுகளும் நான்கு மாதகாலத்திற்குள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பூரணப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. திட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், பகுதியளவில் சேதமடைந்த வீட்டிற்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் இந்திய அரசினால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com