Thursday, October 11, 2012

போட்டிக்காக கரப்பான் பூச்சியை விழுங்கியவர் துடி துடித்து மரணம்

அமெரிக்காவில் உயிருள்ள பூச்சிகளை சாப்பிடும் வினோத போட்டி ஒன்று நடந்தது. அப்போட்டியில் கலந்து கொண்டு பெரிய கரப்பான் பூச்சிகளை சாப்பிட்டு வெற்றி பெற்ற ஒருவர் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து துடி துடித்து இறந்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உயிருள்ள பூச்சி, புழுக்களை சாப்பிடும் வினோத போட்டி நடந்தது. இதில் 30 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். எட்வர்ட் ஆர்ச்போல்ட் (32) என்ற வாலிபரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்.

12 பெரிய கரப்பான் பூச்சிகளை அடுத்தடுத்து வாய்க்குள் போட்டு விழுங்கியதால் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். முதல் பரிசு வாங்கிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். ஆனால் சந்தோஷம் சில நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை. திடீரென அவருக்கு கடுமையான வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டது. வயிற்றை பிடித்தபடி சுருண்டு கீழே விழுந்தார்.

இதை பார்த்ததும் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எட்வர்ட்டை தூக்கிக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்றார்கள் அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தப் போது அவர் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது இதை கேட்டு மற்ற போட்டியாளர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில் கரப்பான் பூச்சிகளில் விஷத்தன்மை கிடையாது. ஆனாலும் அவை பாக்டீரியா அல்லது கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை சாப்பிடுவது ஆபத்தானது. மேலும் சிலருக்கு கரப்பான் பூச்சி அலர்ஜியை ஏற்படுத்தும். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருளை சாப்பிடும்போது இதுபோல நடக்கும். போட்டியாளர்களில் எட்வர்டுக்கு மட்டுமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com