Monday, October 8, 2012

செப்டம்பர் 8, ஒரு சோக வரலாற்றின் திறவுகோல். - சஹாப்தீன் நாநா -

செப் 8ல் நடந்தது உகது யுத்தமுமல்ல, இந்த உலக மகா யோக்கியர்கள் செய்தது, உதைபியா உடன்படிக்கையுமல்ல.

நம்மளுக்கு ஒரு நண்பர் இருக்கின்றார். உலக மகா அறுவை. உட்கார விடமாட்டார். ஏதாவது ஒரு ராமாயண, மகாபாரத கதை சொல்லி அறுத்துக் கொண்டே இருப்பார். நம்மளுக்கும் வேறு வழி இல்ல, அவரவிட்டால் வேறு நண்பர்களுமில்ல. இப்படித்தான் பல நாட்கள் தூக்கமில்லாமலே கழிந்திருக்கின்றது. ஒரு நாளைக்கு மகா பாரதத்தில வாற சக்கர வியுகத்த எடுத்துப் போட்டு, அடுத்த ரெண்டு மாதத்துக்குள்ள, புலி ஆணையிறவுக்குள்ளால அப்படியே ஒரு வளை, வளைத்து சிறிலங்கா ராணுவத்துக்கு ஒரு அடி அடிப்பான் பாருங்க, இத நம்மடவன் ரவுண்டு கட்டி அடிக்கிறது என்பானுகள். ஆனால் இது மகாபாரதத்தில சொல்லப்பட்ட சக்கர வியுக தாக்குதல் என்பார். அவர் சொன்னமாதிரி, அல்லது ஒரு மூன்றுமாதம் பிந்தி ஆனையிறவுல சவக்கள அடிக்கும்.

அப்புறம் ஒரு ஆறுமாதத்துக்கு பிறகு, இன்னொரு கதை சொல்லுவார், நாகபாம்பு இருக்கின்றதே, இந்த நாக பாம்பு, அது ஒரு வகையான ராஜ தந்திரி. எதிரிய என்ன பண்ணுமென்றால், அப்படியே தன்ர வாலால ஒரு சுத்து சுத்தி, தன்னுடைய தலைய ஒரு தூக்கு, தூக்கி, எதிரிட உச்சந்தலையில நச்சென ஒரு கொத்து கொத்தும், எதிரி சல்லடை ஆயிடுவான். அதுக்கு பெயர் நாகவியூகம். இன்னம் ஒரு அஞ்சாறு மாதத்துக்குள்ள புலி ஒரு நாக வியூகதாக்குதல் ஒன்று நடத்துவான் பாருங்க என்பார். அடுத்த ஒரு வருடத்துக்குள் அது நடக்கும். ஆனால் புலிக்கும், அவருக்கும் பாம்புக்கும் கீரிக்கும் உள்ள தொடர்புதான். இவர கண்ட இடத்தில புலி போடும், புலிய கண்ட இடத்தில இவர் போடுவார். ஆனால் மனுசன் இன்னமும் உயிரோட இருக்கார். மனுசன் ஒரு சூனியக்கிழவிமாதிரி ஒட்கார்ந்த இடத்தில இருந்து கொண்டு, மருந்துக்கும் நோகாம, புண்ணுக்கும் வலிக்காம கதை சொல்லுவார். இதெல்லாம் 1998லிருந்து 2007 வரையுள்ள காலத்தில் நடந்தவைகள்.

அப்புறம், 2008, 2009களில் சக்கர வியுகம், நாகவியூகத்துக்கெல்லாம் விளக்கம் அளிக்கக் கூடிய வேடுவர்கள் வவுனியாவுக்குள்ளால உளுபட்டு, நந்திக்கடலையும் தாண்டி டகோபா கட்டினார்கள். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து பார்க்கின்றேன். எவ்வளவு உயிர்ச்சேதம், எவ்வளவு பணச்சேதம், கண்ணிழந்தவன், காலிழந்தவன், கையிழந்தவன், சொத்திழந்தவன், சகோதரனை, சகோதரியை, மனைவியை, குழந்தையை, உற்றார், உறவினர்களை இழந்தவர்கள், இரவை, பகலை, தூக்கத்தை, வீட்டை, வயலை, வரம்பை எப்படியான வரலாற்று சோகமது. கிட்டத்தட்ட ஒரு 25 வருட ரத்த சரித்திரம். தமிழர்களின் ஆதரவைப் பெற புலி செய்த சாகசங்களும், சிங்கள மக்களின் ஆதரவைப் பெற சிங்கள அரசுகள் செய்த, தண்டிக்கப்பட்ட நியாயங்களையும்தான் இங்கு கூற வருகின்றோம்.

இந்த மக்கள் என்ற மாசமுத்திரத்தின் மனிதாபிமானத்தையும், ஆதரவையும், வோட்டுக்களாக மாற்றிப் பெறுவதற்காக அந்த இரு சமுதாய தலைவர்களும் செய்த சாதனைகளும், சோதனைகளும் ஏராளம், ஏராளம். ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்கள், ஆர்ப்பரிப்புகள் எதுவுமே இல்லாமல், வெள்ளைத் தொப்பி ஒன்றை மட்டும் போட்டுக் கொண்டு, நோன்பு கஞ்சியையும் வாகாக குடித்து கொண்டு,

“அரசு ஒரு பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து, தற்போது தேர்தல் எனும் பயங்கரவாதத்தை அரங்கேற்றிக் கொண்டு வருகின்றது. இந்த தேர்தல் நாட்டு மக்கள் விரும்பும் தேர்தல் அல்ல, இவ்வாறு முன்கூட்டி நடாத்துவதன் ஊடாக நாட்டு மக்கள் தன்னோடு இருப்பதாக அரசு சர்வதேசத்துக்கு காட்ட முனைகின்றது. அந்த வியூகம் தோல்வி அடையப் போகின்றது. முஸ்லீம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை இந்த அரசாங்கம் கணக்கில் எடுக்காமல், கடந்த ஒன்றறை வருட காலத்தில் நான் பட்ட அவஸ்தைகளுக்கு இத் தேர்தலின் மூலம் முடிவுகட்டலாம். எனவே சமூகத்தின் இருப்பையும், பலத்தையும் உலகுக்கு காட்டுவோம்’’. என்ற ஒரே ஒரு வசனத்தையும் மூலதனமாக வைத்துக் கொண்டு மொத்த சோனவனின் வாக்குகளையும் கொள்ளையடித்த ராஜதந்திரத்தை வியந்து உலகமே மூக்கில் விரல்வைக்கிறது. கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமின்றி ஒரு டபுள்கேம். ரியல் புரூடா. கண்ணைத் திறந்துகொண்டிருக்கும் போதே முழிகளை புடுங்கிய உலக மகா யோக்கியத்தனம்.

இந்த அரசு மீது தனிப்பட்ட ரீதியில் எமது மக்களுக்கு, குறிப்பாக முஸ்லீம் மக்ககளுக்கு எந்த கோபமும் கிடையாது. எங்கெங்கு வத்தி வைக்க வேண்டுமோ, அங்கங்கு வத்தி வைத்து, ஊருக்கொரு முஸ்லீம் தலைவர்களை உருவாக்கி, அவர்களுக்கு மந்திரி பதவிகளும் கொடுத்து, அவர்கள் கேட்கின்ற கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி ( வீதி அபிவிருத்தி, பாடசாலை, வைத்தியசாலை அபிவிருத்தி, அவர்களது ஆதரவாளர்களுக்கு உத்தியோகங்கள், கோட்டாக்கள் ), அவர்களை அந்த ஊரின் குட்டி ராஜாக்களாக்கிவிட்டு, அவர்களை விட்டால் அந்த ஊருக்கு இனி நாதியே கிடையாது, என்ற ஒரு கிறுகிறுப்பை உருவாக்கி வைத்துள்ளதையிட்டு அனைத்து முஸ்லீம்களுக்கும் மகிழ்ச்சிதான்.

இப்படி இருந்தும் வடகிழக்கு மக்கள் கடந்த ஓரிருவருடங்களாக அரசுடன் கோபமாக இருக்கின்றார்கள். இது என்ன கோபமென்று யாருக்குமே புரியல. ஆனால் இது ஒரு தார்மீக கோபம். புலிகள நந்திக் கடல்ல வாட்டி எடுத்ததற்கா அல்லது கிழக்குல பிள்ளையான் என்கின்ற சந்திரகாந்தன் என்கின்ற வெள்ளையும் சொள்ளையுமான கரைவேட்டி மாப்பிள்ளயை வைத்துக் கொண்டு அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள மக்களையும் அப்பகுதியில் விதைத்ததற்கா அல்லது தம்புள்ள முஸ்லீம்களின் பள்ளிவாசலில் நடந்த விரும்பத்தகாத நிகழ்ச்சிகளுக்கா அல்லது முஸ்லீம்களின் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் ஏற்படுத்தப்படும் தடங்கல்களுக்கா, தமிழ் பிரதேசங்களுக்கு சிங்களத்தில் கடிதம் அனுப்புவதற்கா அல்லது காத்தான்குடி வாகே கல்பனா கறண்ட எபா ஹரித ( காத்தான்குடி மாதிரி மற்ற முஸ்லீம் பகுதிகளிலும் செய்யலாம் என நினைக்க வேண்டாம்.சரியா ) என்று மிரட்டுவதற்கா அல்லது மூதூர் கரிமலையுற்று பிரச்சனைக்கா அல்லது அஸ்ரப் நகர் நுரைச்சோலை வீட்டு பிரச்சனைக்கா இப்படி இப்படியாக நிறைய அல்லதுகளை போட்டுக்கொண்டே போற அளவுக்கு நிறைய காரணங்கள் தினமும் காற்றுவாக்கிலும், நேரடியாகவும் எம்மை தாக்கத்துக்குள்ளாக்குவதால், அரசின் மீது ஒரு இனம் புரியாத கோபம். ஒரு குட்டி ஒரசல், ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மை. சம்திங் ரோங் புறம் சம்வெயார்.

கம் ஓ கோ, இந்த மொத்த கோபத்தையும், செப்டம்பர் 8ல் காட்டிவிடுவதென பெரும்பான்மையான முஸ்லீம்கள் தீர்மானிக்கின்றனர். இதை நாடிபிடித்த அரசு நம்ம கோட் சூட் போட்ட ராசாக்களை கூப்பிட்டு, இந்த மண்ணாங்கட்டி கோட்டு சூட்ட கொஞ்ச நாளைக்கு களத்தி வச்சுப்புட்டு, தொப்பிய போடுங்க, எங்களுக்கு திட்டுங்க, ரொம்ப சந்தோஷமாக திட்டுங்க, இந்த புலிப்பினாமிகளும், கேபி அண்ணாக்களும் எங்களுக்கு திட்டாத திட்டுக்களா, சந்தோஷமா திட்டுங்க, குர்ஆன், ஹதிசுகள உதாரணமா காட்டுங்க, கட்டாயமாக கட்சி அங்கத்தவர்களுக்கிட்ட ஒரு பய்யத்து ( உறுதிமொழி ) எடுத்துடுங்க, ஆனா ஒரு விடயத்த மட்டும் மறந்திடாதீங்க, எங்களுக்கெதிரான அவ்வளவு வோட்டையும் அப்படியே அள்ளிக்கிட்டு வரணும்.

ஆம் அப்படியே அள்ளிக் கொண்டு போய் மகிந்த மகராசனின் காலில் 8ம் திகதி இரவு போட்டு, நம்ம ராசாதி ராச, ராச குலோத்துங்க பய்யத்து மன்னர்கள் பய்யத்து எடுத்தார்கள். கனம், மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே, நீங்கள் கேட்டுக் கொண்டபடி அறுவடை செய்துட்டம், இனி நீங்கள் தரவேண்டியதை தந்து, வெட்ட வேண்டியதை வெட்டினால்........அடுத்த தேர்தலுக்கு எங்களை நாங்கள் தயார் பண்ணிக் கொள்வோம்.

இப்போது கதை சொல்லுகின்றார்கள். இரண்டரை வருடத்தில் முதலமைச்சர் பதவி, வெகுவிரைவில் அப்படியே கல்முனைக்குள்ளால சாய்ந்தமருது, நிந்தவூர், அக்கரைப்பற்றை ஊடறுத்தபடி ஒரு கரையோர அலகு, இன்னும் நிறைய அரசுடன் செய்திருக்கின்றோம். இப்போது அவைகளை சொன்னால் நாட்டுல பெரிய கலவரமே வந்துவிடும். அதனால் அடக்கி வாசிக்கின்றோம் என்கின்றார்கள். அட்ரா சக்கை என்டானாம். உலகப் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுகின்ற பாலஸ்தீன பிஎல்ஓ கொரில்லாக்கள், ஹிஸ்புல்லா அமைப்புகள், தமிழ் தீவிரவாதிகள், புலிகள் என ஆனானாப்பட்ட கொம்பர்கள் எல்லாம் செய்த, காம் டேவிட் ஒப்பந்தம், ஜெனிவா ஒப்பந்தம், திம்பு பேச்சுவார்த்தை எல்லாமே அடுத்த நிமிடமே, அடுத்த கணமே உலகச்செய்திகளில் அடிபடத் தொடங்கிவிட்டன. உலகையே ஆட்டிப்படைத்த எலிசபத் மகாராணியின்ட பேரன், யாரோ ஒருத்திக்கு கிஸ்சடித்த “உலகின் டொப்” சீக்கிரட்டே அடுத்தநாள் பத்திரிகைகளில் பல்லிளிக்கின்றது, ஆனால் இந்த அதிமகா சூனியக்காரர்கள் செப்டம்பர் 8 தேர்தல் முடிந்த கையோடு கொழும்பில் இருந்துகொண்டு, தங்கள் வயிற்றை மட்டுமே நிரப்பச் செய்த ஒப்பந்தங்களை வாக்களித்த மக்களுக்கு காட்ட முடியாதாம்.

யாரோ ஒருவர் சொன்னதுபோல், வாழ்க்கை கவிதை வாசிப்போம், வானமளவு யோசிப்போம். முயற்சி என்ற ஒன்றை மட்டும், மூச்சைப் போல சுவாசிப்போம். இல்லையானால், இவர்கள் எல்லாம் மொத்தமாக நமது வாக்குரிமையை விலைபேசி விற்றுவிடுவார்கள்.

shabdeensl@ymail.com

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com