மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றி தகவல் கொடுத்தால் 6 கோடி ரூபாய் வெகுமதி
அமைதிக்காக சேவையாற்றிய பள்ளி மாணவி மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு, பாகிஸ்தான் அரசு 6 கோடி ரூபாய் வெகுமதி தருவதாக அறிவித்துள்ளது. மலாலா யூசுப்சாய் பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாவட்டத்தின் மிங்கோரா நகரை சேர்ந்தவர், அமைதி குறித்து பல்வேறு பேச்சுப் போட்டிகளிலும், தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற குறித்த சிறுமி, கடந்த வாரம் பேருந்தில் வீட்டுக்கு செல்ல காத்திருந்த போது, அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள், மலாலாவை இரண்டு முறை சுட்டனர்.
இதில், தலை மற்றும் கழுத்தில் குண்டுகள் பாய்ந்தன. பலத்த காயமடைந்த மலாலா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அறுவை சிகிச்சை மூலம், இரண்டு குண்டுகள் அகற்றப் பட்டன. இருப்பினும் மலாலாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக குறித்த சிறுமி நேற்று முன்தினம், லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பது, பாதுகாப்பு காரணங்களையொட்டி, ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.
"மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியது நாங்கள் தான்" என தலிபான்கள் அறிவித்துள்ளனர். எனவே, பாகிஸ்தானின் தலிபான் தலைவரை பற்றி, தகவல் கொடுப்போருக்கு 6 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment