Wednesday, October 31, 2012

தொல்லை தரும் தொலைபேசி அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி: 5-ந் தேதி முதல் புதிய விதிமுறை அமல்

தொல்லை தரும் தொலைபேசி அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வரும் 5-ந்தேதி புதிய தீர்வுகளை வெளியிட உள்ளது.

செல்போன்களுக்கு வரும் தொல்லை தரும் அழைப்புகளை தடுக்க வேண்டும் என்று, பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, ‘டிராய்’ என்று சொல்லப்படும் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம், சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.

டெலி-மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனங்கள், இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை வர்த்தகம் தொடர்பாக அழைப்புகளை மேற்கொள்ள கூடாது என்றும், எஸ்.எம்.எஸ். அனுப்ப கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.

இந்த விதிமுறைகளை மீறும் ‘டெலி மார்க்கெட்டிங்’ நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.

ஆனால், இந்த விதிமுறைகளால் தொல்லை தரும் அழைப்புகளையும் எஸ்.எம்.எஸ்.களையும் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை. தொல்லை தரும் அழைப்புகளும் தேவையில்லாத குறுந்தகவல்களும் செல்போன்களுக்கு வந்த வண்ணம் உள்ளன.

இந்த தொல்லை பொது மக்களோடு நின்று விடவில்லை. தொலைத் தொடர்பு மந்திரிக்கும் நிறைய அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்.களும் வந்துள்ளன. இதுபற்றி கபில் சிபல் கூறுகையில், 'நானும் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன்.

இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை இதுபோன்ற தேவையற்ற எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன' என்றார்.

இவருக்கு மட்டுமல்ல; பிரணாப் முகர்ஜியும் இது போன்ற பிரச்சினைகளை சந்தித்துள்ளார். அவர் நிதி மந்திரியாக இருந்த போது, நிறைய தொல்லை தரும் அழைப்புகள் வந்துள்ளன. அவர் முக்கியமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது, செல்போனுக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வரும்.

முக்கியமான அழைப்பாக இருக்கலாம் என்று நினைத்து பேசினால், எதிர் முறையில் இருந்து, சார்... உங்களுக்கு வங்கி கடன் வேண்டுமா? இந்த 'பேங்க்'கில் பேசுகிறோம். உடனடியாக தரஏற்பாடு செய்கிறோம்' என்ற தகவல் வரும்.

இதனால், பலமுறை அவர் நொந்து போய் உள்ளார். இதை தடுக்கும் படி, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அவரும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, புதிய தீர்வுகளை டிராய் அறிவிக்க உள்ளது.

இதுபற்றி, டிராய் தலைவர் ராகுல் குல்லார் கூறியதாவது:-

செல்போன்களுக்கு வரும் தேவையற்ற வர்த்தக அழைப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மனுக்கள் வந்தன.

இந்த பிரச்சினைக்கு, தொல்லைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், கடுமையான விதிகளை உள்ளடக்கிய புதிய தீர்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வர்த்தக அழைப்புகள், பதிவு செய்யப்பட்ட டெலி மார்க்கெட்டாளர்கள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தொல்லை தரும் தொலைபேசி அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய தீர்வுகள் வரும் 5-ந்தேதி, பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com