Sunday, October 28, 2012

5 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா: ராகுலுக்கு பெரிய பொறுப்பு காத்திருக்கு

புதுடில்லி: மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை நடக்கவுள்ள நிலையில், 5 அமைச்சர்கள் இதுவரை தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆட்சியில் மட்டுமில்லாமல், கட்சியிலும் பெரும் மாற்றத்தை கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றம் இன்று காலை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அமைச்சரவை மாற்றத்திற்கு வழிவிடும் வகையில், இதுவரை 5 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆட்சியில் மட்டுமில்லாமல், கட்சியிலும் பெரும் மாற்றத்தை கொண்டுவர காங்கிரஸ் தயாராகி வருகிறது. குறிப்பாக, ராகுலுக்கு மிகப்பெரிய பொறுப்பு காங்கிரசில் காத்திருக்கிறது. அவருக்கு காங்கிரஸ் செயல் தலைவர் பதவி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றத்தையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இன்று முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளித்தார். அவருடன், சுற்றுலாத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், சுபோத்காந்த் சகாய் மற்றும் மகாதேவ் காண்டேலா ஆகியோரும் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். தனது பதவியை ராஜினாமா செய்த பின் பேசிய கிருஷ்ணா, இளைஞர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது என குறிப்பிட்டார்.

இவரது பதவியை பிடிக்க தற்போது வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே கிருஷ்ணா குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ், கர்நாடக காங்கிரஸ் கட்சி விவகாரங்களை வழிநடத்த கிருஷ்ணா தேவை என தெரிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத், பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பதவிக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல், இளைய அமைச்சர்களான சச்சின் பைலட், ஜோதிர்ஆதித்யா சிந்தியா ஆகியோர் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவியை பெறவுள்ளனர். ஆந்திராவில் காங்கிரஸ் அரசை காப்பாற்ற உதவியை, சிரஞ்சீவிக்கு இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது உரிய பலனை செலுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அகதா சங்மாவின் விலகலையடுத்து, அவரின் பதவிக்கு தாரிக் அன்வரை தேசியவாத காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ளது. திரிணமுல் காங்கிரஸ் விட்டுச் சென்ற 6 அமைச்சர்கள் பதவிகள் தற்போது காலியாக உள்ளன. நீண்ட நாட்களாக கோமாவில் இருக்கும் பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷிக்கு பதிலாக அவரது மனைவி தீபா தாஸ்முன்ஷி அமைச்சரவையில் சேர்க்கப்படலாம். தி.மு.க., அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த பதவிக்கு வேறு யாரையும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பரிந்துரை செய்யவில்லை.

அதே போல், விலாஸ்ராவ் மரணத்தையடுத்து அவர் வகித்து வந்த பதவி, மகாராஷ்டிராவின் விலாஸ் ராவ் மட்டம்வாருக்கு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com