இந்திய ஜனாதிபதி, பிரதமரின் வீடுகள் உட்பட 460 இடங்களிற்கு பயங்கரவாதிகள் இலக்கு!
இந்திய ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் வீடுகள் உட்பட டில்லியில் முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என வெளிவந்துள்ள தகவலால் டில்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகள் குறிவைத்துள்ளதாக கூறப்படும் 460 இடங்களின் பட்டியலை டில்லி பொலிஸார் வெளியிட் டுள்ளனர்.
இதனையடுத்து, தலைநகரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. புனேயில் கடந்த ஓகஸ்ட் 1ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களோடு தொடர்புடைய சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே இந்த தகவல் கசிந்துள்ளது.
தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தீபாவளியை முன்னிட்டே இந்த தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்தே பொலிஸார் தீவிரவாதிகளால் தாக்குதலால் நடத்தக்ககூடும் என சந்தேகிக்கப்படும் இடங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் வீடுகள், இந்தியா கேட், சரோஜினி நகர், ரயில் நிலையங்கள், பொலிஸ் நிலையங்கள், சிபிஐ உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், சத்தர்பூர் மந்தீர், அக்ஷர்தாம், ஜும்மா மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் என பல முக்கிய இடங்கள் இந்த பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த பகுதிகளில் இருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கு இதுதொடர்பான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப் பொருட்களின் விற்பனை யையும் பொலிஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தியன் முஜாகிதீன் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். எனவே, எந்த ஒரு தகவலையும் அலட்சியம் செய்ய முடியாது. மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர் குழுவை கொண்டு சோதனை நடத்தி வருகிறோம் என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
புனே தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆசாத்கான், இம்ரான்கான், பெரோஸ், இம்ரான் முஸ்தபா ஆகிய 4 பேரை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment