பொன்சேகா மீது தற்கொலை தாக்குதல் நடத்த உதவியவருக்கு 35 வருட சிறை
முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் வழக்கின் பிரதான சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட கேகாலை மேல் நீதிமன்றம் அவருக்கு 35 வருடகால சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.
கொழும்பு இராணுவ தலைமையகத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை கொலை செய்வதற்காக உதவி செய்ததாகக் கூறப்படும் வழக்கின் தீர்ப்பை இன்று 23ஆம் திகதி வழங்குவதற்கு கேகாலை மேல் நீதிமன்றம் கடந்த 17 ஆம் திகதி தீர்மானித்திருந்தது.
சண்முகலிங்கம் சூரியகுமாருக்கு எதிரான இந்த வழக்கில் சாட்சி குறுக்கு விசாரணை நிறைவடைந்ததை அடுத்தே கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர, வழக்கின் தீர்ப்பை இன்று 23ஆம் திகதி வழங்க தீர்மானித்தார்.
மஞ்சுளா என்ற தற்கொலைக் குண்டுதாரியை வவுனியாவிலிருந்து அழைத்து வந்து தங்குமிட வசதியளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சூரியகுமாருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலும் தான் நிரபராதி என தனது சாட்சியின் போது தெரிவித்துள்ள சூரியகுமார், தன்னையும் தனது மனைவியையும் அச்சுறுத்தி பல்வேறு ஆவணங்களில் கைச்சாத்து பெறப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் அன்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி அவருக்கு 35 வருடகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
0 comments :
Post a Comment