அமெரிக்காவை அச்சுறுத்தும் சாண்டி புயல்: 3000 விமான சேவை ரத்து- 4 லட்சம் பேர் வெளியேற்றம்
கரீபியன் கடல் பகுதியில் சமீபத்தில் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளி புயல் உருவானது. அந்த சூறாவளி புயலுக்கு சாண்டி என்று பெயரிடப்பட்டுள்ளது.
சாண்டி புயல் கடந்த 2 தினங்களாக ஜமைக்கா, கியூபா, தெற்கு ஹைதி நாடுகளை துவம்சம் செய்தபடி கடந்தது. இதில் அந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பேர் பலியானார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
என்றாலும் சாண்டி புயலின் கோரத்தாண்டவம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நேற்று சாண்டி புயல் மேலும் வலுப்பெற்று அமெரிக்காவை நெருங்கியது.
இதனால் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர மாகாணங்களில் வசிக்கும் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
சாண்டி புயல் இன்றிரவு அல்லது நாளை அதிகாலை அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் 8 மாகாணங்களில் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் அனைத்துக்கும் திங்கள், செவ்வாய் இரு நாட்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள்.
அமெரிக்க கடலோரத்தை சாண்டி புயல் மிக, மிக நெருங்கி வந்துவிட்டதால் நியூயார்க். வாஷிங்டன், வெர்ஜினியா உள்பட 8 மாகாணங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.
தெருக்களில் மழை தண்ணீர் வெள்ளம் போல ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பலத்த மழை, காற்று காரணமாக 8 மாகாணங்களிலும் பஸ், ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சூறாவளி அமெரிக்காவை தாக்கும்போது மின் சப்ளை துண்டிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு உதவ நிவரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சாண்டி புயல் அச்சுறுத்தல் காரணமாக ஒபாமா, மிட்ரோம்னி இருவரும் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளனர். அமெரிக்காவில் சுமார் 8 ஆயிரம் உள்ளூர் விமானம் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் 3 ஆயிரம் சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சாண்டி புயல் பாதிப்பு கடுமையாக இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு நியூயார்க் பங்கு சந்தை திங்கள், செவ்வாய் இரு நாட்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தீவிரவாதிகள் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு தற்போதுதான் முதன் முதலாக பங்கு சந்தை மூடப்பட்டுள்ளது.
சாண்டி புயல் தாக்கும்போது தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் அதிகரித்து விடும் என்று வானிலை இலாகா கூறியது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய நகரங்களில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமைதான் 8 மாகாணங்களிலும் சாதாரண வாழ்க்கை திரும்பும் என்று தெரிகிறது.
0 comments :
Post a Comment