காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு 2-ம் இடம்: சோனியா வெள்ளிக்கிழமை அறிவிக்கிறார்
மத்திய மந்திரி சபையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியான போதே, காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல் காந்திக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று நம்பப்பட்டது. ஏற்கனவே இரண்டுக்கு மேற்பட்ட தடவை மந்திரி பதவி தன்னை தேடி வந்த போதும், அதை ராகுல் காந்தி நிராகரித்து விட்டார்.
தற்போது காங்கிரஸ் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி தவித்து வரும் நிலையில், ராகு காந்தி முக்கிய மந்திரியானால், கட்சியை நெருக்கடியில் இருந்து காப்பாற்றி விடலாம் என்று மூத்த தலைவர்கள் கணக்குப் போட்டனர். ஆனால், இந்த முறையும் மந்திரி பதவியை ஏற்க ராகுல் காந்தி மறுத்து விட்டார்.
இதையடுத்து, கட்சியில் முக்கிய இடம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக நம்பர்-1 இடத்தில் சோனியா காந்தி உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் யாரை அமர்த்துவது என்ற கேள்விக்கு, மூத்த தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்துள்ளனர்.
அவருக்கு கட்சியில் பொதுச் செயலாளர் அல்லது செயல் தலைவர் பதவி அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சோனியா காந்தி வெளியிடுகிறார். ராகுல் காந்தி தற்போது இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக உள்ளார்.
கட்சியில் பொதுச் செயலாளர் அல்லது செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்ட உடன், காங்கிரஸ் கட்சியின் அன்றாட நிர்வாகத்தை ராகுல் காந்தி கையாளுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சியில் ராகுல் காந்திக்கு பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பது பற்றி, மூத்த தலைவர் ஜனார்தன் திவேதி கூறியதாவது:-
கட்சியில் ராகுல் காந்தி 2-வது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் தலைவருக்கு அடுத்த நிலையில் இவர் இருக்கிறார். இது மறைக்கப்பட்ட உண்மை அல்ல. எதிர்கால தலைவர் ராகுல் காந்தி என்று பிரதமரே பாராட்டி உள்ளார். ராகுலுக்காக சில பொறுப்புகள் காத்திருக்கின்றன. அவை என்ன என்பது விரைவில் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments :
Post a Comment