சென்னையில் புயலை சமாளிக்க தயார் நிலையில் 1,300 வீரர்கள்
நீலம் புயல் தாக்கினால் அதனை சமாளித்து எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து விதமான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது. தீயணைப்பு வீரர்கள், போலீசார் அடங்கிய மீட்பு படையினர் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளனர்.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் விட்டு விட்டு பெய்த மழை இரவில் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது சென்னையில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் தாக்கினால் அதனை எதிர்கொள்வதற்காக சென்னையில் தீயணைப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
33 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் 1,300 வீரர்களும் பணயில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விடுமுறையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
புயலால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய சென்னை மாநகர போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், அனைத்து உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீஸ்காரர் வரை அனைவரும் 24 மணி நேரமும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசாரும் பைபர் படகுகளுடன் மீட்பு பணியில் ஈடுபட காத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் எந்த பகுதியில் புயல் பாதிப்புகள் ஏற்பட்டாலும் பொது மக்கள் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையான 100-க்கு போன் செய்யலாம். போலீசார் மீட்பு படையினருடன் உடனடியாக அங்கு விரைந்து சென்று உதவி செய்வார்கள்.
மேலும் முறிந்து விழும் நிலையில் இருக்கும் மரங்கள், மின் கம்பங்கள் பற்றியும், பொதுமக்கள் தகவல் அளிக்கவேண்டும். அப்போதுதான் உயிர் சேதங்கள் போன்ற பாதிப்புகளை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இப்படி அனைத்து முன் எச்சரிக்கை ஏற்பாடுகளும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும். புயலின் தாக்கம் எப்படி இருக்குமோ? என குடிசைகளில் வசிக்கும் மக்கள் இப்போதே ஏங்கத் தொடங்கியுள்ளனர்.
0 comments :
Post a Comment