மட்டக்களப்பு விமான நிலையத்தை நிர்மானிக்கும் பணிகள் ஆரம்பம்
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, சீனன்குடா, மட்டக்களப்பு ஆகிய மூன்று இடங்களில் உள்ளூர் விமான நிலையங்கள் நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய, மட்டக்களப்பு விமான நிலையத்தை நிர்மானிக்கும் செயற்திட்டத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் உள்ளூர் விமான நிலையங்களை அமைக்கும் முயற்சிகளைப் மேற்கொள்ளாதிருந்தன. எனினும், தற்போதைய அரசாங்கத்தின் உள்ளூர் விமான சேவையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள 10 உள்ளூர் விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 800 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு விமான நிலையத்தினை நிர்மாணிக்கவுள்ளதாகவும், அடுத்த வருடம் மார்ச் ஏப்ரல் மாத காலப்பகுதியில் மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையத்தின் ஓடுபாதை மற்றும் பொதுக்கட்டடம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் நிறைவுசெய்யப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, சி.பி. ரட்ணாயக்க, சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பி முத்து, விமானப்படைத் தளபதி ஹர்ஷ அபேவர்த்தன மற்றும் நான்கு மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment