மலையக மக்கள் நிலஉரிமை தொடரில் பாதிப்பு மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பி. சிவப்பிரகாசம்
இலங்கையில் பெருந்தோட்டத்துறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் நிலம் பற்றிய பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது என குறிப்பிடப்படுகின்றது. இலங்கையின் சுதேசிகளின் நிலங்கள் பெருந்தோட்டத்துறைக்காக பறிக்க ப்பட்டன எனவும் அதனூடாக சுதேசிகளின் வாழ்வுரிமை, உணவு விவசாயம், கால்நடை விவசாயம், ஆயுர்வேத மருத்துவம், காட்டுத்தொழில் என்பன பாதிக்கப்பட்டதுடன், மத்திய மலைநாட்டின் சுற்றுப்புற சூழல், காலநிலை தட்பவெப்பநிலை என்பவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டன என பல்வேறு ஆய்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனூடாக சுதேச சிங்களவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன என்ற வாதங்கள் முன்வைக்கப்படுவதுடன், அதனால் நிலமற்றவர்களாக்கப்பட்ட கிராமிய மக்களுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற வாதம் மேலெலுந்து வருகின்றது.
மேற்படி கூற்றுக்கள் பல்வேறு வரலாற்று, சூழலியல், பொருளாதார ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாரலாற்று காரணிகளினால் கிராமிய சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அதே சந்தர்ப்பத்தில், நேரடியாகவும் மறைமுகமாகவும் இதனால் வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூதாயமாக மலையக பெருந்தோட்டத்துறை அல்லது இந்தியவம்சாவழி பெருந்தோட்டத்துறை மக்களும் காணப்படுகின்றனர் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய அம்சமாகும்.
நிலவுரிமை பற்றிய மேற்படி கூற்றுக்களுக்கான மறுதளிப்பு பற்றி உணர்வு பூர்வமான கருத்துக்கள் மலையகயகத்தை சார்ந்தவர்களால் வெளியிடப்படுவது ஒர் தகவல் பாரிமாற்றமாக இருக்கும் அல்லது விழிப்புணர்வூட்ட உதவியாக இருக்கலாம். ஆனால் தர்க ரீதியான கல்வியியல் சார்ந்த ஆய்வுகள் கொள்கை திட்டம் வகுப்பதற்கும் திர்மானம் எடுப்பதற்கும் காரணிகளாக அமையும் என்பதை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும்.
இவ்வடிப்படையில் இன்று ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்ற மலையக மக்களின் நிலம் மற்றும் வீட்டுரிமைப்பற்றி மலையகம் சார்ந்த கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும். வளர்ந்து வருகின்ற ஒரு சமூகம் தன்னுடைய வரலாற்று, அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார கருத்தியல்களை தர்க்கரீதியாக மற்றும் ஆய்வு ரீதியாக நிலைநிறுத்த வேண்டிய தேவை முக்கியமானதாகும். இதிலிருந்து தவறுகின்ற ஒரு சமூகம் ஒரு நாட்டிலே உயிர் வாழலாம், ஆனால் உரிமை ரீதியாக தன்னை நிலைநிறுத்திகொள்ள முடியாது என்பதற்கு உலகில் பல்வேறு உதாரணங்கள் காணப்படுகின்றன.
இன்று மலையக பெருந்தோட்ட மக்களின் நில மற்றும் வீட்டு உரிமை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. பெருந்தோட்டத்துறை வரலாற்றில் நில உரிமைப்பிற்றிய கீழ்வரும் விடயங்கள் முக்கியமானவையாகும்.
• காலணத்துவ ஆட்சியுடன் சுதேசிகளின் நிலங்கள் குறிப்பாக கரையோர பிரதேசம் (டுழற ஊழரவெசல) மற்றும், இடைநிலை பிரதேசம் (ஆனை ஊழரவெசல) என்பவற்றிலிருந்து பறிக்கப்பட்டன.
• தரிசுநில சட்டம் 1840
• கோயில் நில பதிவு சட்டம் 1856
• முடிக்குறிய காணி சட்டம் 1897
• நில சீர்த்திருத்த சட்டம் 1972, 1975
• நட்சா திட்டம் 1977
• தோட்டங்கள் தனியார்மயம் 1982, 1992
• அபிவிருத்தி திட்டங்களுக்காக காணிசுவீகரிப்பு (உ.ம் மேல் கொத்மலைத்திட்டம்)
• தோட்ட பயன்படாத மற்றும் தரிசு நிலங்களை (37,000 ஹெக்டயர்) சிறு உற்பத்தியாளர்க்கு பகிர்ந்தளித்தல் 2011, 2012 பாதீட்டு அறிக்கை.
மேற்படி சம்பவங்களுடன் ஏனைய நிகழ்வுகளும் இணைந்து காணி மற்றும் வீட்டுவுரிமை சம்பந்தமாக இன்று பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
மலையக பெருந்தோட்ட மக்களின் வீட்டுரிமை பற்றி நோக்கும் போது இன்றுவரையும் 56 வீதமானவர்கள் ஏறக்குறைய ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட லயனகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஏனைய 44 வீதத்தினரும் ஒன்றில் கடன் மூலம் கட்டப்பட்ட தனிவீடுகள் அல்லது இணைந்த வீடுகள் அல்லது மாடிவீடு அல்லது தாங்களே அமைத்து கொண்ட வீடுகளில் வாழ்கின்றனர்.
வீட்டு உரிமை என்பது நில உரிமையுடன் ஒருங்கிணைந்த விடயமாகும். பெருந்தோட்ட மக்களை பொருத்தளவில் அவர்கள் நாட்சம்பளம் பெரும் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர். அவர்கள் பாரிய பெருந்தோட்டங்களில் தங்களை ஈடுப்படுத்தி கொண்டாலும், உழைப்பு என்ற ஒரு உற்பத்தி காரணிக்கு சொந்தமான தொழிலாளர் வர்க்கமாக காணப்படுகின்றனர்.
ஆனால் நிலம், மூலதனம் மற்றும் முகாமை அல்லது தொழிநுட்பம் போன்ற உற்பத்தி காரணிகள் இவர்களிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு காணப்படுகின்றன. இந்த பின்னணியில் விவசாயிகள் போன்று நில உரிமையை முதன்மைப்படுத்த வேண்டிய தேவைகள் அருகியே காணப்பட்டன.
மற்றவர்களுடைய நிலத்தில் தங்களுடைய தொழிலை வழங்கி, அவர்களின் மூலதனத்திற்கு பெருமதி சேர்ப்பவர்களாகவே இருந்து வந்தனர். ஆகவே நில சொந்தம் என்பது அந்நியப்பட்ட ஒரு விடயமாக இருந்தது. என்றாலும் கூட தாங்கள் வாழும் அல்லது தொழில் செய்யும் பெருந்தோட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்றே வந்துள்ளன.
1942 ஆண்டுகளில் கேகாலை மாவட்ட வெற்றிலையூர், உருலவள்ளி தோட்ட போராட்டம், அதேபோல் 1977 ஆம் ஆண்டுகளில் தலவாக்கலை டெவன் தோட்ட சிவன்லெச்சமனனின் போராட்டம் போன்றவை சில உதாரணங்களாகும்.
மேற்படி உருலவள்ளி போராட்டத்தில் 300க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சிறைவைக்கப்பட்டனர். இந்த பின்னணியில் எறக்குறைய 100 வருடங்களுக்கு மேலாக தோட்ட லயன்களில் இம்மக்கள் வாழ்ந்து வந்தாலும் கூட இந்த லய அறை அல்லது அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமானதாக காணப்படவில்லை.
அதேபோல் ஜனவசம (JEDB), பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் (SLSPC) போன்ற நிறுவனங்களின் கீழ் அமைக்கப்பட்ட தோட்ட தனிவீடுகளுக்கும் சரி, 1992 தனியார் மயப்படுத்தலின் பின்பு அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்ட வீடுகளுக்கும் சரி இன்று வரையும் அந்த வீட்டுநில உரிமைக்கான எந்த வித உறுதிப்பாடுகளும் வழங்கப்படவில்லை.
இது இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற நில உரிமைப்பற்றிய முரனானதாக காணப்படுகின்றது. நில உரிமை பற்றிய போராட்டத்தில், வாழ்வாதாரத்திற்கான நில கோரிக்கையை விட, தாங்கள் வாழும் வீட்டுக்கான கோரிக்கையை முதலாவதாக முன்வைப்பதே சாதுரியமானதாக காணப்படும். ஏனெனில் இன்றுவரையும் மூத்தப்பரம்பரையினர் தொழில் என்ற உற்பத்தி காரணியை வழங்குகின்றவர்களாக மட்டுமே காணப்படுகின்றனர்.
ஆனால் தற்போதைய காணி சுவீகரிப்பு, அபகரிப்பு, அபிவிருத்தி திட்டங்கள் பாரிய நீர் மின்வழு திட்டங்கள், உல்லாசபயணத்துறை விருத்தி போன்ற பல்வேறு காரணங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பனவாக இருப்பதுடன், சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த கூடியனவாக காணப்படுகின்றன. எனவே ஒன்றில் அந்த நிலங்களை பாதுகாக்க வேண்டும். அல்லது காணியற்றவர்களுக்கு நிலங்கள் வழங்கப்படுமானால் அவற்றிலே தங்களுடைய பங்கையும் பெற்றுகொள்ள வேண்டும்.
மனித அபிவிருத்தி தாபனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் படி, தோட்டங்களில் 100 வீதமானவர்களும் காணி அல்லது வீட்டு உரிமையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களில் ஏறக்குறை 51 வீதமானவர்கள் பெருந்தோட்ட மனித வள நிதியத்தின் மூலமாக தங்களுடைய கடன் நிதியின் மூலம் வீடு கட்டி கொண்டவர்களாக, அல்லது காய்கரித்தோட்டங்களில் சொந்தமாக வீடு கட்டி கொண்டவர்களாக அல்லது தாங்களாகவே லயன் வீடுகளை புணர்நிர்மானம் செய்தவர்களாக அல்லது மாடி வீட்டை (இது 0.4 வீதத்தினர் மாத்திரமே) பெற்றவர்களாக இருக்கின்றனர்.
இவர்களில் ஏறக்குறைய 80 வீதத்தினர் தங்களுடைய குறிப்பிட்ட வீடு அல்லது அதனுடன் ஒத்த நிலத்திற்கு காணி உறுதி பெற்றுக்ககொள்ள வேண்டும் என்ற விபரமே தெரியாதவர்களாக இருக்கின்றனர். மற்றைய 20 வீதத்தினர் கூட காணி வீட்டுரிமை பற்றி தெரிந்திருந்தாலும் கூட அவற்றைப் பெற்றுகொள்வதில் பாரிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை.
மறுபக்கமாக கள ஆய்விலே நுவரெலியா மாட்ட தகவலாளர்கள் தங்களுடைய உரிமைகளுக்காக தொழிற்சங்க அரசியல் கட்சிகளை பூரணமாக தங்கியிருப்பதுடன் அவர்கள் பெற்று தருவார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் அதற்கு மறுபக்கமாக கண்டி, பதுளை போன்ற மாவட்டங்களில் தங்களுடைய உரிமைகளை பெற்றகொள்வதற்காக தாங்களே முயற்சி செய்ய வேண்டும் என்ற சுயநம்பிக்கையில் இருப்பது வெளிப்படுத்தப்பட்டது. ஆக வீடு அல்லது காணி உரிமை பெற்றுக்கொள்வது பற்றி கிராமிய சிங்கள அல்லது ஏனைய சமூகத்தினர்களை விட மலையக பெருந்தோட்ட சமூகம் மிகப் பின்தள்ளப்பட்ட நிலைமையில் இருப்பது தெரியவருகின்றது.
ஏற்கனவே வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்ட 7, 10, 20 பேர்ச்சஸ் காணிகள் பற்றி இன்றுவரையும் தெளிவில்லாமலேயே காணப்படுகின்றன. 10, 15 வருடங்களுக்குள் அதாவது வீடமைப்பு கடன் செலுத்தி முடிந்த பின்பு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், கடன் பணம் முழுவதும் செலத்தி முடிக்கப்பட்டவர்களுக்கும் கூட காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை.
ஆனால் பெரும்பாலும் 7 பேர்ச்சஸ் அல்லது அதைவிட குறைந்த காணியே வீடமைப்பு திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவருகின்றது. கடன் 25,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை கடன் பெற்றுள்ளனர். இதை மாதாந்தம் 400 ரூபாவிலிருந்து 1,000 ரூபா வரையாக ஏறக்குறைய கடந்த 10 வருடங்களாக பலர் செலுத்தி வருகின்றனர். ஏறக்குறைய 3 வீதத்தினர் காய்கரித்தோட்டங்களில் சொந்தமாக வீடமைத்துள்ளனர்.
ஆனால் இவர்களில் யாருமே நில உரிமை ஆவணங்களை கொண்டவர்களாக காணப்படவில்லை. லயத்திலே வாழ்கின்றவர்களில் 72 வீதமானவர்கள் லய வாழ்க்கையை விருபமற்றவர்களாக காணப்படுவதுடன் சொந்தமான நிலத்தில் சொந்தமாக வீடமைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். மற்றய 28 வீதத்தினரும் வயது சென்ற தங்கள் வாழ்க்கையை லயத்திலேயே கழிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள்.
எவ்வாறெனினும் இலங்கையில் கொண்டு வரப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஊடாகவும் பெருந்தோட்ட மக்கள் தங்களில் காணி உரிமையையும் வாழ்வாதார உரிமைகளையும் இழந்து வருகின்றனர். மகாவலித்திட்டம் முதல் மேல்கொத்மலை திட்டம் வரையும் 1942 உருலவள்ளி போராட்டம் முதல் 1977 சிவன்லெச்மனன் போராட்டம் வரையும் மற்றும் 1972 காணி சீர்த்திருத்த திட்டம் முதல் 1977 நட்சா. 1992 தோட்ட தனியார் மயம் உள்ளிட்ட அண்மைகால குடியேற்றத்திட்டங்கள் பாதைவிருத்தி, உல்லாச பயணத்துறை விருத்தி, காணி அபகரிப்பு, விமானநிலையம் அமைப்பு. இராணுவத்தளங்கள் அமைக்கப்புடுகின்றமை போன்ற பல்வேறு விடயங்கள் காணி உரிமைப்பற்றிய கேள்வியை எழுப்பி வருகின்றது.
அண்மைகால தகவல்களின் படி முழுத்தோட்ட காணி 250,320 ஹேக்டயர்களாகவும் பயிர்ச்செய்யப்படும் 178,092 ஹேக்டயர்களாகவும் காணப்படுகின்றன. இதேவேளை ஏறக்குறைய 74,000 ஹேக்டயர்கள் பயிர் செய்யப்படாத அல்லது தரிசு நிலங்களாக அல்லது மானிடத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட நிலங்களாக காணப்படுகின்றது.
இந்நிலங்களில் பெரும் பகுதி JEDB, SLSPC தோட்டங்களுக்கு உட்பட்டவையாக காணப்படுகின்றன. இது கிட்டத்தட்ட 60,000 ஹேக்டயர்கள் என ஒரு ஆய்வு குறிப்பிடுகின்றது. இது கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை, நுவரெலியா, மொணறாகலை போன்ற மாவட்டங்களில் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அதேவேளை 2011, 2012 பாதீட்டு அறிக்கையின் படி 37000 ஹெக்டயர்கள் பயிரிடப்படாத அல்லது பயன்படுத்தப்படாத நிலம் சிறுத்தோட்ட உற்பத்தியாளர்களுக்கு 2 ஏக்கர் அடிப்படையில் பிரித்து கொடுப்பதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படகின்றது.
ஆகவே மலையகம் சார் அரசியல்வாதிகள், தொழிற்சங்க அமைப்பகள், சிவில் சமூகத்தினர், கல்வியியலாளர்கள் நிதானமாக செயலாற்ற வேண்டிய காலகட்டம் இதுவாகும். காணியற்ற கிராமிய மக்களின் தற்சார் பொருளாதார அபிவிருத்தியை மையமாக கொண்டு காணி வழங்கள் என்பது காலத்தின் தேவையாகும். எனேனில் காணி உரிமை என்பது அனைவருக்கும் சமனானதாகும். அதேவேளை காணியற்றவர்களின் அவ்வுரிமை நிலைநாட்டப்பட வேண்டியது அரசின் பொறுப்பாகும். அந்தவகையில் காணியற்ற கிராமிய மக்களுக்கு காணி வழங்குவது தடுக்கப்பட முடியாததொன்றாகும்.
எனேனில் தற்போதைய அரசியல் நிலைமை மலையக சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பலவீனம் சலுகைகளுக்காக தங்கள் அரசியலை மேற்கொள்வது என்ற அடிப்படையில் மலையக மக்கள் காணி வீட்டு உரிமையை பெற்றுகொள்வதென்பது மாபெரும் சவாலாகும்.
அதேவேளை மலையக புதிய தலைமுறையினரின் தேவைகளையும் கோரிக்கைகளையும் அடிப்படையாக கொண்டு காணி உரிமைக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். வீட்டுரிமையை அடிப்படையாக எடத்துகொண்டால் கூட இன்று பெருந்தோட்ட பகுதியின் ஏறக்கறைய இரண்டு இலட்சம் குடும்பத்தினர் காணப்படுகின்றனர். இவர்களுக்கு குடும்பத்திற்கு வாழிடத்திற்காக 20 பேர்ச்சஸ் என்ற அடிப்படையில் கணிப்பீட்டை செய்தால் மொத்தமாக 40 இலட்சம் பேர்ச்சஸ் காணிகளே தேவையாகும். இது ஏறக்குறைய 10 ஆயிரம் ஹேக்டயர்களாகும். அதாவது எற்கனவே இருக்கும் 74 ஆயிரம் பயிரிடப்படாத காணியில் 1/7 மாத்திரமேயாகும். அல்லது தற்போது அடையாளம் காணப்பட்டிருக்கும் 37000 ஹேக்டயர்களில் 1/3 ஆகும்.
ஆகவே எமது வாதாடல் அல்லது நியாயப்பிரச்சாரம் தர்க்கரீதியாக முன்வைக்கப்படுமானால் மக்களின் நிலம் மற்றும் வீட்டுரிமை சாத்தியப்படகூடியதாகும். அதேவேளை மறுபக்கமாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள 37000 ஹேக்டயர்கள் அபிவிருத்தி கருதியும் ஏற்கனவே தேயிலை, இறப்பர் தொழில், மரக்கரி விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் தேர்ச்சி பெற்றுள்ள தோட்ட தொழிலாளர்களுக்கும் ஒரு பங்கு வழங்கப்படுமானால் மகிந்த சிந்தனை அடிப்படையில் இந்த நிலங்கள் உற்பத்தி திறன் உள்ள சிறந்த பயன்பாட்டு நிலமாக மாற்ற முடியும்.
ஆகவே காணி நிலம்மற்ற கிராம மக்களுக்கும் அதேவேளை தோட்டத்திலுள்ள மக்களுக்கும் இக்காணிகள் வழங்கப்படுமானால் அதுவும் கூட்டுறவு அடிப்படையில் செயற்படுவதற்கான ஓர் நிலையான திட்டத்துடன் இக்காணி திட்டம் நடைமுறைக்கு வந்தால் பொருளாதார விருத்தி, சமூக ஒருங்கிணைப்பு, சமூக மேம்பாடு, ஒன்று சேர்ந்த அபிவிருத்தி என்பவற்றை காணக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இக்பால் அலி
1 comments :
அருமையான கட்டுரை கட்டுரையாளரை தொடர்பு கொள்வது எப்படி
Post a Comment