மட்டக்களப்பில் 414 வாக்களிப்பு நிலையங்கள் 38 வாக்கெண்ணும் நிலையங்கள்.
கிழக்கு மாகாண சபை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்களிப்பு பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள் வினியோகம் மட்டக்களப்பில் இன்று பகல் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக 414 வாக்களிப்பு நிலையங்களும், 38 வாக்கெண்ணும் நிலையங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில், 3,47,099 பேர் வாக்களித் தகுதி பெற்றுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியில் 100,616 வாக்காளர்களும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 162,451 வாக்காளர்களும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 84,032 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
2011ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்க தெரிவித்தார்.
இதே நேரம், வாக்கெடுப்பு நிலையங்களில் சுமார் 3000 உத்தியோகத்தர்களும், வாக்கெண்ணும் நிலையங்களில் சுமார் 2000 உத்தியோகத்தர்களும் கடமையாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி கல்குடா தொகுதியில் 115 வாக்களிப்பு நிலையங்களும், மட்டக்களப்பு தொகுதியில் 199 வாக்களிப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 100 வாக்களிப்பு நிலையங்களும் அமையவுள்ளன.
இதே நேரம், அம்பாறை மாவட்டத்தில் 14 பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய 464 வாக்களிப்பு நிலையங்களில் 441287 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 10 பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய 285 வாக்களிப்பு நிலையங்களில் 245363 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
கடந்த 2008 தேர்தலின் பின்னர் இடம்பெறும் 2 வது தேர்தல் இதுவாகும். இதில் முதற்தடவையாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சபையில், மொத்தமாக போனஸ் 2 ஆசனங்களுடன் 37 உறுப்பினர்களைத் தெரிவுசெய்யவேண்டிய இத்தேர்தலில் ஆளும் ஜ.ம.சு.கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன முக்கிய கட்சிகளாகப் போட்டியிடுகின்றன.
கிழக்கு, வடமத்திய மற்றம் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நாளை நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதற்கு 33 இலட்சத்து 36,415 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
வடமத்திய மாகாண சபைக்கு இரு மாவட்டங்களிலும் உள்ள மொத்த வாக்காளர் தொகை 9,00,872 ஆகும். சப்ரகமுவ மாகாண சபைக்கு இரு மாவட்டங்களிலும் உள்ள மொத்த வாக்காளர் தொகை 14,01,794 பேர்களாகும். கிழக்கு மாகாண சபைக்கு மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 10,33,749 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வடமத்திய மாகாண சபைக்கு 31 உறுப்பினர்களும், சப்ரகமுவ மாகாண சபைக்கு 42 உறுப்பினர்களும், கிழக்கு மாகாண சபைக்கு 35 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்தத் தேர்தலின் போது 108 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 25 ம், சுயேட்சைக் குழுகள் 86 ம் போட்டியிடுகின்றன. இதில் 3,073 பேர் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
வடமத்திய மாகாண சபைக்கு 544 வேட்பாளர்களும் , சப்ரகமுவ மாகாண சபைக்கு 1059 பேரும், கிழக்கு மாகாண சபைக்கு 1470 பேரும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வடமத்திய மாகாண சபைக்கு 895 தேர்தல் வாக்களிப்பு மத்திய நிலையங்களும், சப்ரகமுவ மாகாண சபைக்கு 1189 தேர்தல் வாக்களிப்பு மத்திய நிலையங்களும் கிழக்கு மாகாண சபைக்கு 1163 தேர்தல் வாக்களிப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்களிப்பு நிலையங்கள் 3247 அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலின் போது வாக்களிப்பதற்காக 2011 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பதிவின்படி வாக்களிக்க தேர்தல் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 27.28 தினங்களின் போது நடைபெற்ற தபால் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,00818 ஆகும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment