Friday, September 21, 2012

மாலக்கவின் விடயத்தில் பெல்டி அடித்த மேஜரிடம் நீதவான் கேள்விக்கணைகளை தொடுத்தார்!

மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவும், அவரது சகாவான ரெஹான் விஜேரட்னவும், தன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து, அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்த இராணுவ மேஜர், பின்னர் மாலக்க சில்வாவும், அவரது சகாவும் தன்னை தாக்கவில்லை என பெல்டி அடித்தார்.

இது சம்பந்தமான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நீதவான் சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதியளித்ததுடன், குறித்த இராணுவ மேஜர் தொடர்பில் அறிக்கையை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கில் தனக்கு தனிப்பட்ட ஈடுபாடு எதுவும் கிடையாது என தெரிவித்த நீதவான், எவ்வாறாயினும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது என்றும், தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த இராணுவ மேஜரிடம் நீதவான் சில கேள்விகளை கேட்டார்.

நீதவான் கேள்வி - நீங்கள் எங்கே கடமையாற்றுகிறீர்கள்?

மேஜர் பதில் - இராணுவ புலனாய்வுப் பிரிவின் தென் பிராந்தியத்தில் கடமையாற்றுகின்றேன்

நீதவான் கேள்வி - வேறு பகுதிகளிலும் கடமையாற்றியுள்ளீர்களா?

மேஜர் பதில் - ஆம், யுத்த காலத்தில் திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் கடமையாற்றியுள்ளேன்

நீதவான் கேள்வி - சந்தேகநபர்கள் உங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என ஏற்கனவே தெரிவித்தீர்களா?

மேஜர் பதில் - ஆம்.

நீதவான் கேள்வி - தாக்குதல் நடத்தவில்லை என்று பின்னர் ஏன் தெரிவித்தீர்கள்?

மேஜர் பதில் - அதிர்ச்சி காரணமாக தெரிவித்தேன்

நீதவான் கேள்வி - யுத்த காலத்தில் சேவையாற்றிய ஒருவருக்கு இப்படியான் சம்பவங்களின் போது அதிர்ச்சியைத் தவிர வேறு விதங்களில் முகங்கொடுக்க முடியாதா?

மேஜர் பதில் - எனக்கு அதிகளவில் உயர் குருதியமுக்கம் இருந்தது

இதனையடுத்து இவர் பொய் சாட்சி கூறுகிறாரா இல்லையா என்பது குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என நீதவான் கொம்பனிவீதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com