விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அமைச்சர் பதவியா? இம்முறையுடன் அதற்கு முற்றுப்புள்ளி
கிழக்கு, சப்ரகமுவ, மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான முதலமைச்சர்கள், அமைச்சர் களுக்கு, சத்தியப் பிரமாணம் வழங்கி வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அமைச்சர் பதவிகளை வழங்கும் நடவடிக்கைக்கு இம்முறையோடு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும், இம்மறையினால் ஏற்படும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இனிவரும் தேர்தல்களில் இதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாராளுமன்றத் தேர்தல் போன்று தொகுதி முறைமையைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், தேசிய, சர்வதேச ரீதியில் நாட்டிற்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கும் வகையில் செயற்படத்தயாராகுமாறும், குரோதத்தைக் கைவிட்டு ஒற்றுமையாகச் செயற்படுமாறும், பிளவுபடுத்தவும் பிரச்சினை குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிப்போர் விடயத்தில் அவதானமாகச் செயற்படுமாறும், சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட முதலமைச்சர்கள், மற்றும் அமைச்சர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.
அத்துடன், வாக்களித்த மக்களுக்கான சேவையில் சகல அவதானத்தையும் செலுத்த வேண்டும் எனவும், தேர்தலில் அமைச்சர்களாக பதவியேற்றோர் மட்டுமன்றி, வெற்றி பெற்ற சகல உறுப்பினர்களும் பிரதேசத்திற்குச் சேவை செய்ய வேண்டும் எனவும், தெரிவித்துள்ளார்
மேலும் தேர்தல் வெற்றியையடுத்து எதுவித விரும்பாத செயற்பாடுகளும் சட்ட விரோத செயற்பாடுகளும் இடம்பெறாமல் இருக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும், அத்தகையோர் தொடர்பில் கடுமையான சட்டங்களைப் பிரயோகிக்குமாறு நான் பொலிஸாருக்குப் பணித்துள்ளேன் எனவும், அத்தகையோர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு கடும் தண்டனைக்கு உட்பத்தப்படுவர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment