இலங்கை அப்பாவித் தமிழ் மக்கள் கடந்த 60 வருட காலமாக அனுபவித்து வரும் துன்ப, துயரங்களுக்கு இன்னும் தான் விடிவைக் காணவில்லை. இங்குள்ள சிங்களவர்களாலோ அல்லது முஸ்லிம்களாலோ தமிழர்கள் இன்னல்களை அனுபவித்ததை விட தமிழன் தமிழனாலே அழிக்கப்பட்டதும், அழிந்ததுமே வரலாறாகும்.
அன்றிருந்த தமிழ் தலைமைகள் விட்ட தவறுகளே இன்று தமிழனை இந்தளவிற்கு நிர்க்கதியாக்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்கென போராடப் புறப்பட்ட இயக்கங்களும், அதற்கு தலைமை தாங்கிய இயக்கத் தலைவர்களும் தமக்குள்ளே அடிபட்டு செத்ததுதான் மிச்சமாகும்.
மக்களைச் சூடேற்றி வீர வசனம் பேசி தமது பதவிகளையும் அரசியல் இருப்பையும் தக்கவைத்துக் கொண்டு பூச்சாண்டி அரசியல் காட்டிக் கொண்டிருக்கின்ற சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ளவர்கள் தொடக்கம் டக்லஸ் , கருணா, பிள்ளையான் வரை மக்களின் பெயரால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாரர்கள். இவர்களுக்கு காடுகளிலும், மேடுகளிலும் வாழும் அடிமட்ட மக்களின் உணர்வுகள் பற்றித் தெரியாது.
இன்று நாட்டில் கிழக்கு, சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குரிய தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இவற்றில் அரசாங்கம் இரண்டு மாகாணங்களிலும் அமோக ஆதரவைப் பெற்று வென்றுள்ளது. கிழக்கில் அதிகூடிய 14 ஆசனங்களை அரசாங்கம் கைப்பற்றிய போதிலும் ஆட்சியமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பாண்மை இல்லாது திண்டாடிக் கொண்டிருக்கிறது.
கிழக்கு மாகாண சபைக்கான மொத்த உறுப்பினர்கள் 37 பேர். இவர்களில் 35 பேர் நேரடியாக தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இருவர் போனஸ் ஆசனங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது வழமையாகும்.
இம்முறை நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு போனஸ் ஆசனங்களுடன் சேர்த்து 14 ஆசனங்களும், இலங்கை தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னனி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளமை அனைவரும் அறிந்த விடயமாகும்.
தற்போது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் 16 பேர் முஸ்லிம்கள், 12 தமிழர்கள் ,07 சிங்களவர்கள் அடங்குகின்றனர். அரசுக்கு கிடைத்துள்ள மேலதிக இரு ஆசனங்களையும் யார் யாரை நியமிக்கப்போகிறது என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது ஆளும் கட்சியின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தவிர வேறெந்த தமிழரும் தெரிவாகவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ்சே கிழக்கில் யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது. இவர்களின் கைவசம் இருக்கும் 07 ஆசனங்களுமே தற்போது துருப்புச் சீட்டாக மாறியுள்ளது. இதனால் முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைவர் ஹக்கீமும் கிங்மேக்கராக மாறியுள்ளார். எந்தக் கட்சியுடன் போனாலும் ஒரு பலமிக்க பேரம்பேசும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் மாறியுள்ளமை அவர்களைப் பொறுத்தவரை வெற்றியான விடயமாகும்.
இங்கு அரசாங்கத்தையோ முஸ்லிம் காங்கிரசையோ விமர்சிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. கிழக்கு மாகாண சபையில் நிச்சயம் ஆட்சியமைக்கப்போவது அரசாங்கம்தான். இவர்களோடு கூட்டுச் சேரப்போவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆரசாங்கம் கிழக்கில் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அவ் ஆட்சியின் பிரதான பங்குதாரராக முஸ்லிம் அரசியல் வாதிகளே இருக்கப்போகிறார்கள். கிழக்கில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 15 முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் அரசோடு சேர்ந்தே இருக்கப்போகிறார்கள். இந்நிலையில் ஒரேயொரு தமிழனாக அரசின் அச்சபையில் தனது கருத்துக்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்க எவரும் அற்ற அநாதையாக முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் இருக்கப் போகிறார்.
இந்நிலையில் தமிழ் மக்களின் அபிவிருத்தி என்பது கேள்விக்குறியாகவே போகப் போகிறது. இன்று முஸ்லிம்கள் தங்களுடைய மக்களின் நலன்கருதி அவர்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கும், தன் சமூகத்தை கல்வி, கலாச்சார ரீதியில் உயர்த்துவதற்கும்; திட்டமிட்டு அரசோடு சேர்ந்து பெறவேண்டியதைப் பெற்று, தம்முடைய சமூகத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் அரசியல் சாமர்த்தியம் ஏன் நம்முடைய தமிழ் அரசியல் வாதிகளுக்கு வரவில்லை? முஸ்லிம் சமூகத்தைப் பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பதைத் தவிர இத் தமிழ் தலைமைகளால் இனிவரும் காலங்களில் எதுவுமே செய்யமுடியாது.
தமிழ் மக்கள் மத்தியில் தாயகம், வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணயம் என்கின்ற தோற்றுப்போன கொள்கையுடன் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவதைத் தவிர இக்கூட்டமைப்பில் உள்ளோரால் எதுவும் செய்துவிட முடியாது. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிப்பிழைக்கும் கூத்தமைப்பாகவே மாறியுள்ளது. அவர்களும், அவர்களது பிள்ளைகளும் சொகுசாக வாழவேண்டும். அடிமட்ட சனம் இருந்ததைப் போலவே இருக்கவேண்டும் என்கின்ற அசையாத கொள்கையிலே இக்கூட்டமைப்பு உள்ளது.
இத்தனை வருடகாலம் நாம் எதிர்ப்பு அரசியல் செய்து சாதித்தது என்ன? என்பதை ஏன் இவர்கள் சிந்திக்க மறுக்கின்றார்கள். இன்னும் இன்னும் சர்வதேசம் வரும், எமக்கு ஈழம் தரும் என பகல் கனவு கண்டுகொண்டு தமிழ் மக்களை அச்சிந்தனைக்குள் கட்டிப்போடும் நிலையையே இக்கூத்தமைப்பு கடைப்பிடிக்கின்றது. இதனால் எமது தமிழ் மக்களே பாதிக்கப்பட போகின்றனர்.
இவர்கள் மேடைகளில் முழங்குவதைப் போல இந்தியாவோ. அமெரிக்காவோ அல்லது நவநீதம் பிள்ளையோ இலங்கையரசின் இறமையில் தலையிடமுடியாது. ஒரு நாட்டில் பெரும் பாண்மையாக வாழும் மக்களின் விருப்பம் இன்றி சிறுபாண்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டப்போவதில்லை.
இந்நாட்டிலுள்ள பெரும்பாண்மை சமூகத்தைப் பகைத்துக்கொண்டு சிறுபாண்மைச் சமூகத்தால் எதையும் சாதிக்க முடியாது. இதை கடந்த கால அனுவங்கள் எமக்கு கற்றுத் தந்திருக்கின்றன.
கடந்த 60 வருட காலமாக தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் கொஞ்சநஞ்சமல்ல. இதனால் கல்வி, பொருளாதாரம், சமூக, அரசியல் ரீதியாக 60 வருட காலமாக பின்தங்கிய சமூகமாகவே நாம் மாறிவிட்டோம். இந்நாட்டிலுள்ள மற்றொரு சிறுபாண்மை இனமான முஸ்லிம்கள் பல வழிகளிலும் முன்னேறிவிட்டார்கள். ஆனால் தமிழர்கள் தம் தலைமைகளால் அதாள பாளத்தை நோக்கியே கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
எமது அப்பாவித் தமிழ் மக்களது நலனைக் கருத்தில் கொண்டு இன்றைய நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 11 ஆசனங்ளைப் பெற்றக்கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சி அரசாங்கத்தோடு சேர்ந்து ஏன் ஆட்சியமைக்க முடியாது? இதனால் அவர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்படப்போகிறது? இது நல்லதொரு சந்தர்ப்பம் அல்லவா? தமிழ் மக்கள் இழந்து நிற்கும் பொருளாதார ரீதியான இழப்புக்களை ஈடுசெய்வதற்கு கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பை ஏன் இந்தக் கூட்டமைப்பினர் பயன்படுத்தக் கூடாது? என்பதே அப்பாவித் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தாயகம், உரிமை சுயஆட்சி என்று ஏமாற்றி மக்களை பலிக்கடாவாக்கியது போதும். சர்வதேசம் தமிழரின் பிரச்சினையைத் தீர்க்கும் என இலவு காத்த கிளிபோல் இனியும் நம்பி ஏமாற வேண்டாம். இந்நாட்டிலுள்ள பலமிக்க அரசாங்கமாக இருக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவின் ஆட்சியோடு ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் விடிவுக்கு வித்திட அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும் சிந்திக்க வேண்டும், செயலாற்ற வேண்டும். இல்லாது விட்டால் தந்தை செல்வா சொன்னதைப் போன்று தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது போய்விடும்.
No comments:
Post a Comment