இளவரசியுடன் கை குலுக்க மறுத்த ஈரானிய வீரர்! அவமானமா என்றும் சர்ச்சை!
பிரித்தானியாவில் நடைபெறும் பராலிம்பிக்ஸ் விழளையாட்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர், பதக்கம் வழங்கிய இளவரசி கேட்டின் கைகளை தொட்டுக் குலுக்க மறுத்த விவகாரம்தான், இப்போது பிரிட்டனில் "ஹாட் டாபிக்". பிரித்தானிய பத்திரிகைகளில் இருந்து, டி.வி. சேனல்கள் வரை இது பற்றியே பேச்சுத்தான்.
வெள்ளிப் பதக்கம் வென்றவர், ஈரானிய விளையாட்டு வீரர் மெஹ்ர்டாட் கரம் ஸாடீ 80,000 பார்வையாளர்கள் முன்னிலையில், குறிப்பிட்ட இளவரசியை அவமானப்படுத்தி விட்டார் என்ற கோணத்தில் கூட விவாதங்கள் நடக்கின்றன.
போட்டியில் ஜெயித்தவர்களுக்கு இளவரசி கேட் பதக்கங்களை அணிவிக்க வந்தபோது, இவர் தனது கழுத்தில் பதக்கத்தை அணிவிக்க அனுமதித்தார். ஆனால், பதக்கம் அணிவித்தவுடன் சம்பிரதாயமாக கை குலுக்கும் சந்தர்ப்பத்தை இளவரசிக்கு கொடுக்காமல், தமது கைகளை உடலோடு கட்டியபடி நின்றிருந்தார்.
இதே போட்டியில் அவருடன் பதக்கம் வென்ற பிரிட்டிஷ் வீரர் அலெட் டேவிஸ், சீன வீரர் லெஸ்ஹெங் வாங் ஆகியோருக்கு இளவரசி பதக்கம் அணிவித்த பின், இருவரும் இளவரசியுடன் கை குலுக்கிக் கொண்டனர்.
ஈரானுக்கும், பிரிட்டனுக்கும் சமீப காலமாக அரசியல் ரீதியாக உரசல்கள் உள்ள போதிலும், இந்த புறக்கணிப்பு அரசியல் ரீதியானது அல்ல என்றே கூறப்படுகிறது. ஈரானிய மத கோட்பாட்டின்படி, ஒரு ஆண், உறவினர் இல்லாத பெண்ணின் கைகளை தொடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
ஈரானிய விளையாட்டுக் குழுவின் பேச்சாளர், 'இதில் அரசியல் ஏதுமில்லை. பதக்கம் அணிவித்தது இளவரசியாக இல்லாமல், ஒரு ஆணாக இருந்தால், ஈரானிய விளையாட்டு வீரர் மெஹ்ர்டாட் கரம் ஸாடீ நிச்சயமாக கை குலுக்கியிருப்பார். அதேபோல, பெண்கள் விளையாட்டுப் போட்டி ஒன்றில் ஈரானிய வீராங்கனை ஒருவர் ஜெயித்து, அவருக்கு இளவரசி பதக்கம் அணிவித்திருந்தால், அந்த வீராங்கனையும் கை குலுக்கியிருப்பார்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்திலுள்ள மிகப்பெரிய தமாஷ் என்னவென்றால், ஈரானிய வீரர் நடந்து கொண்ட முறை சரியல்ல என்று, ஈரானிய மீடியாக்கள், அரசு மீடியா உட்பட, கருத்து தெரிவித்துள்ளன.
இளவரசியின் பேச்சாளர், 'இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் ஆண் விளையாட்டு வீரர்கள், பெண்களுடன் கை குலுக்குவதில்லை என்பது இளவரசிக்கு நன்றாகவே தெரியும். அதனால், இதை புறக்கணிப்பாக அவர் எடுத்துக் கொள்ளவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment