புலம்பெயர் சமூகத்திடம் பிச்சை கேட்கவில்லை. உதவ முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதீர்!
அண்மையில் புலம்பெயர் தேசத்தி லிருந்து இங்குவந்து பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உதவ முற்பட்ட நபர்கள் 22 பேர் தொடர்பாக தமிழ் ஊடகங்கள் செயற்பட்ட முறையில் ஏற்பட்ட தாக்கங்களால் மனமுடைந்த பயனாளிகளில் ஒருவரான முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் புலம்பெயர் மக்களை நோக்கி பகிரங்க மடல் ஒன்றை வரைந்துள்ளார்.
அம்மடலில் ..
அன்பும் பண்புமுள்ள எனதருமை புலம்பெயர் தேசத்து மக்களே!
முன்னாள் போராளிகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கபட்ட தமிழருக்காக குரல் கொடுக்கிறோம் என்று கூறிச்செயல்படும் பல ஊடகங்கள் இன்று எமது வேதனையில் இன்பம் காணுகிறார்கள். எமது வேதனை அவர்களின் ஊடகத்திற்கு ஒரு செய்தி ,அதை போட்டி போட்டு வாசிக்க ஆயிரம் புலம் பெயர் வாசகர்கள். இந்தசெய்திகள் எமக்குதரும் மரணவலியை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.
கணவனை இழந்த முன்னாள் போராளியின் மனைவி தன் குடும்பத்தை காப்பாற்ற விபச்சாரம் செய்வதை செய்தியாக போடும் தமிழ் ஊடகங்கள் இன்றுவரை அந்த பெண்ணின் அவலத்தை நீக்க முன்வரவில்லை என்பதே உண்மை. ஒருவேளே இந்த அவலம் நீங்கினால் இவர்களிற்கு கிடைக்கும் இந்த செய்தி இல்லாமல் போய்விடும் என்று இவர்கள் நினைக்கிறார்களோ தெரியாது.
ஆனால் இதுதான் உண்மைபோல் எமக்கு தெரிகிறது. பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்ற நிலையே இன்றைய எமது நிலை. புலம் பெயர் நாட்டில் புலிக்கொடி பறந்த செய்தியை வீரத்துடன் இந்த ஊடகங்கள் செய்தியாக போட்ட அடுத்த நிமிடம் எங்கள் வீட்டுக் கதவுகள் புலனாய்வுதுறையினரால் தட்டப்படுவது இவர்களிற்கு ஒரு ஆனந்தமான செய்தி. ஆனால் எங்களிக்கு அது ஒரு சீவன் போய்வரும் நிகழ்வு என்பது இவர்களிற்கு தெரியாதா? அல்லது தெரியதது போல் நடிக்கிறார்களா? புலம்பெயர் மக்கள் தம் பொழுது போக சனி ஞாயிறு கிழமைகளில் புலிக்கொடியுடன் போராட்டம் செய்ய, நாங்கள் இங்கு வாரம் முழுவதுமே கண்காணிக்கப்படுவதன் அவலம் இவர்களிற்குபுரியாது.
கால் இழந்து, கை இழந்து, மனைவி இழந்து, கணவனை இழந்து பிள்ளையை தாயை தந்தையை இழந்து அனாதைகளாக நாம் செய்வதறியாத நிற்கிறோம். வறுமைவாட்டி எடுக்கிறது. வேலை இல்லை. குழந்தைகளிற்கு தரமான கல்வி இல்லை. கல்வி கற்பிக்க ஆசான் இல்லை. இரவு வந்தால் பயம் நம்மை வாட்டி எடுக்கிறது. பகலில் பட்டினி நம்மை வதைக்கிறது. இது புலம்பெயர் மக்களிற்கு நல்ல செய்திதானே. ஆதனால் தான் நமக்கு உதவ முன்வருபவர்களையும் தடுத்து துரத்திஅடிக்கிறார்களா?
அண்மையில் புலம் பெயர் மண்ணில் இருந்து கருணை உள்ளம் கொண்ட சிலர் வந்து நம்மை பார்த்து உதவிசெய்து சென்றது எமக்கு ஒரு சிறு அறுதலாக இருந்தது. ஆனால் அதையும் இந்த சுயநலம் பிடித்த புலம் பெயர் ஊடகங்கள் விட்டுவைக்கவில்லை. உங்களது விறுவிறுப்பு செய்திக்காக எமது பட்டினிக்கும், அறிவிற்கும், தொழிலுக்கும் உதவ முன்வருபவர்களை ஏன் விரட்டுகிறீர்கள்? அவர்கள் யரரை சந்தித்தார்கள் எந்தப் பாதையால் வந்தார்கள் எப்படி வந்தார்கள் என்பது எல்லாம் எமக்கு வேண்டாதவை. அவர்கள் எங்களை மதித்து நேரம் ஒதுக்கி வந்து பார்த்து ஒரு பெரும் ஆறுதலை தந்தது.
எமது எதிர்காலம் பற்றி அவர்கள் எம்முடன் பேசியது எமக்கு நம்பிக்கையை தந்தது. எமது தொழில் பற்றிய அவர்களின் உறுதிமொழி எமக்கு பலத்தை தந்தது. எமது குழந்தைகளின் கல்வி பற்றிய அவர்களின் ஆர்வம் எமது குழந்தைகளின் இருண்ட வாழ்விற்கு ஒரு ஒளிகாட்டியாக இருந்தது .ஆனால் இவை அனைத்தையும் புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் போட்ட விறுவிறுப்பான செய்தி குண்டு வைத்து தகர்த்ததுள்ளது. 22 பேர் வந்தனராம் என்பது உங்களிற்கு வெறும் ஒருசெய்தி. அனால் எமக்கு அது ஒரு சிறு துளி நம்பிக்கையை நமக்கு தந்தது. ஆனால் அந்த நம்பிக்கை பூக்க முன்னரே கருக்கிவிட்டது என்பது இந்த ஊடகங்களற்கு தெரியாதா? 22பேர் வந்ததிற்கே நாம் பெருத்த ஏமாற்றம் கொண்டோம். காரணம் போர் காலத்தில் அள்ளி அள்ளி ஆயிரக்கணக்கில் வழங்கியவர்களில் ஆக 22 பேருக்;குமட்டும் தானா நம்மில் உண்மையான அக்கறை உள்ளது? ஏனையவர்கள் எங்கே? அவர்களும் ஆயிரக்கணக்கில் வந்தால் நம் ஏதிர்காலம் துளிர்ப்பதில் எமக்கும் ஒருதைரியம் வரும் நம்பிக்கைவரும். ஆனால் அந்த நம்பிக்கையில் கூட இந்த ஊடகங்கள் மண்ணை அள்ளிப்போடுகிறதே.
நாம் புலம்பெயர் சமூகத்திடம் பிச்சை கேட்கவில்லை. எமது வாழ்விற்கு நம்பிக்கை தாருங்கள், எமக்கு ஒரு சிறு தடியை தந்து அதில் எம்மை படரவிடுங்கள் என்று மட்டும் தான் கேட்கிறோம். சரி உங்களால் உதவி செய்ய முடியவில்லையா? உபத்திரமாவது கொடாமல் இருங்களேன். நீங்களும் உதவமாட்டீர்கள் உதவ வருபவர்களையும் விடமாட்டீர்கள். உளவாளி உல்லாசப் பிரயாணி என்று நீங்கள் அழகாக எழுதும் ஒவ்வரு எழுத்தும் எமது இருப்பிற்கு நீங்கள் போடும் வாய்க்கரிசி. நாம் பட்டினியால் சாவதுதான் உங்களிற்கு தேவையான செய்தி என்றால் அது மிக விரைவில் உங்களை வந்து சேரும். இங்கு அரசிற்கு உளவாளிகள் தேவையில்லை. புலம்பெயர் மண்ணில் இருந்த காசுகொடுத்தவர் இயக்கத்திற்கு ஆதரவுகொடுத்த அனைவரினதும் விண்ணப்பங்கள் படவிபரங்களுடன் அரசிடம் 2009இல் வன்னியில் இருந்து சிக்கியது உங்களுக்கு தெரியாதா? இனி உளவு சொல்ல என்ன இருக்கிறது இங்கு?
கனடா, லண்டன், சுவிஸ், அவுஸ்திரேலியா என்று ஆயிரக்கணக்கான தமிழர் உல்லாசப்பயணிகளாக வன்னியை கடந்து எம்மை திரும்பி கூட பாராது யாழ்ப்பாணத்திற்கு உல்லாசப் பயணயம் போவது உங்களிற்கு தெரியாதா? அனால் எம்மை பார்க்க வந்த 22 பேர் மட்டும் உங்களின் கண்களை உறுத்துவது ஏன்? இதில் என்ன அரசியலை நீங்கள் கண்டுபிடித்தீர்கள்? அதை விட ஆபத்தான அரசியலை உல்லாசப் பயணத்தில் வரும் உலகத் தமிழர்கள் செய்வது உங்கள் கண்களிற்கு தெரியவில்லையா?
இந்த புலம் பெயர் ஊடகங்கள் இன்று எமக்காக என்று சொல்லும் ஒவ்வரு செய்தியும் எம் வறுiமையை நீடிக்கிறது? நாம் பட்டினிசாவால் இனி காணமால் போவது என்பதுஅரசின் கெடுபிடியால் அல்ல இந்த புலம் பெயர் ஊடகங்களின் அரசியலால் தான். எமதுமரணங்கள் தான் உங்களிற்குஅரசியலா? எமதுபட்டினிதான் உங்களிற்கு இன்பமா? எமது குழந்தைகள் கல்வியைத் தொலைத்து விட்டு மீண்டும் போராடிமடிவதுதான் உங்கள் சந்தோசமா? எழுதுங்கள் இன்னும் எழுதுங்கள். துரோகி உளவாளிஎன்று இனிப்பான வார்தைகளை போட்டு உங்கள் செய்தி தளங்களிற்கு நன்றாக ஆட்சேருங்கள். நீங்களும் பிரபல கனவான்களாக மாறுங்கள். அதை நாம் சாகும் வரை செய்து கொண்டே இருங்கள். பட்டினியால் நாம் செத்த பின்னரும் எமது கல்லறையையும் விட்டுவைக்காது அதைப் பற்றியும் சுடச்சுட நீங்கள் அலுக்கும்வரை செய்திகளை எழுதுங்கள். எமது ஆத்மாவும் சாந்தியடையாது உங்கள் ஆசைக்கும் தேவைக்கும் எற்ற செய்திகளை அது தந்து கொண்டே இருக்கும்.
நன்றி
முன்னாள் போராளி என்று சொல்ல வெட்கப்படும் ஒரு தமிழன்.
1 comments :
உண்மை, நேர்மை, நீதியான சிந்தனைகள் மனிதனாக பிறந்த மக்களுக்கு வரவேண்டும்.
இதுவரைக்கும் தமிழன் பிழையான, குறுகிய மனப்பான்மையுள்ள, சுயநல தலைமைகளின் மாய ஜாலங்களில் மயங்கி சிந்தனை கெட்டு, சிரழிந்து, சிதைந்து போனது வரலாற்று பாடம். ஆரம்பம் முடிவை ஆராய்ந்தால் தமிழீழம் என்ற மாயத்தில் மயங்கிய புலம்பெயர் தமிழர்களே நமக்கு எதிரிகளும், துரோகிகளும் என்பதே உண்மை.
புலம்பெயர் சுயநல தமிழர்களுக்கும்
சிந்தனா சக்தியற்ற மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்?
Post a Comment