புலிகளை போலவே தலைவரை இழந்த அல்-காய்தா, ஏன் காற்றில் கரையவில்லை?
நேற்றைக்கு 11 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்கா மீது அல்-காய்தா தொடுத்த செப்.11 தாக்குதல், அந்த இயக்கத்தை பல விதங்களிலும் உருக்குலை த்தது. ஒருகாலத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக அழிந்து, தற்போது பேப்பரில் மட்டும் வாழ்வதற்கு இரு தாக்குதல்கள் முக்கிய காரணமாக இருந்தன. ஒன்று முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை. மற்றையது, இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை.
இந்த இரு கொலைகளையும் செய்வது என்ற முடிவை யார் எடுத்தார்களோ, அவர்கள், விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்தை அழிப்பது என்ற முடிவையும் அறிந்தோ, அறியாமலேயே தேடிக்கொண்டார்கள். அது முடிந்து போன கதை.
அதேபோல அல்-காய்தாவும் முடிந்துபோன கதையா?
அந்த இயக்கத்தின் தலைவர் பின் லேடன் கொல்லப்பட்டபின், அல்-காய்தா இன்னமும் உயிருடன் உள்ளதா?
இந்தக் கேள்விகளுக்கு ஒரு விஷூவல் ஆன்ஸர் தருகிறது, இந்த போட்டோ எஸ்ஸே.
புலிகள் இயக்கத்துக்கும், அல்-காய்தாவுக்கும் இடையே அநேக ஒற்றுமைகள் உண்டு. அவற்றில் ஒன்று, நாம் மேலே குறிப்பிட்ட ஒற்றுமை. (குறிப்பிட்ட தாக்குதல் முடிவு, இயக்கத்தை உருக்குலைத்தது) அடுத்த ஒற்றுமை, அதே தாக்குதல், இரு இயக்கங்களின் தலைவர்களின் (பின்லேடன், பிரபாகரன்) உயிர்களையும் பறித்தது.
மற்றொரு ஒற்றுமை, அல்-காய்தா செய்த செப்.11 தாக்குதல், அந்த இயக்கத்துக்கு அழிவை கொடுத்ததுடன் நின்றுவிடவில்லை, புலிகள் இயக்கத்தின் அழிவுக்கும் மறைமுக காரணமாக இருந்தது.
அது எப்படியென்றால், செப்.11 தாக்குதலின் பின்னரே பலம் வாய்ந்த நாடுகள், ‘தற்கொலை தாக்குதல்களை’ பயங்கரவாதம் என்று சீரியசாக பார்த்தன. புலிகளின் பிரதான பாதையே, தற்கொலைத் தாக்குதல்களை வைத்தே போடப்பட்டிருந்தது.
பாதையை மாற்றிக்கொள்ள ‘பேச்சுவார்த்தை’ என்று சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. அதில் பலனில்லை என்ற முடிவை புலிகள் எடுத்தனர். அதையடுத்து, புலிகளை ஒழிப்பது என முடிவை மற்றைய நாடுகள் எடுத்தன. யாருக்கு வெற்றி என்பது, ஆளுக்கு ஆள் மாறுபடும். விரும்பிய விதத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
ஒற்றுமைகள் அவை. வேறுபாடுகள் என்ன?
புலிகள் இயக்கம், அதன் தலைமை அழிந்ததுடன் அப்படியே காற்றில் மறைந்து போனது. பின் லேடனின் மறைவுக்கு பின்னரும், அல்-காய்தா இன்னமும் இயங்குகிறது. எப்படி இயங்குகிறது என்பதே கேள்வி.
இந்த தொகுதியில் உள்ள போட்டோக்கள் 2 மாதங்களுக்கு முன் (ஜூலை) ஏமன் நாட்டில் எடுக்கப்பட்டவை. அல்-காய்தா பற்றி கூற ஏன் ஏமன் நாடு தேர்ந்தெடுக்க பட்டது? இன்றைய நிலையில் அல்-காய்தா இயக்கம் வெவ்வேறு நாடுகளில் இருந்து இயங்கினாலும், பலமாக இயங்குவது ஏமன் நாட்டில்தான்.
அதனால்தான் அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்களை வைத்து, அல்-காய்தா பற்றி கணிக்கலாம்.
போட்டோக்களை ஒவ்வொன்றாக பாருங்கள். இறுதி போட்டோவையும் பார்த்தபின், நீங்கள் நினைப்பதுடன், நாங்கள் சொல்வதை ஒப்பிட்டுப் பாருங்கள்.
இங்குள்ள அனைத்து போட்டோக்களும், ஏமன் நாட்டின் ஜிஞ்சிபார் மாகாணத்தில் எடுக்கப்பட்டவை. இந்த மாகாணத்தை தேர்ந்தெடுக்க காரணம், அல்-காய்தாவின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்து வந்த பகுதி இது. சமீபத்தில், அல்-காய்தாவின் பிடியில் இருந்து ராணுவத்தால் மீட்கப்பட்டது.
இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ‘வன்னி’ பகுதி, அரசின் கைகளுக்கு சென்றபின் காணப்பட்ட சில காட்சிகளில் சாயலையும் இவற்றின் சில போட்டோக்களில் காணலாம்.
கீழேயுள்ள போட்டோவில், ராணுவத்துக்கு ஆதரவான ‘பாபுலர் கமிட்டி’ உறுப்பினர்கள் சிலர் உள்ளனர். இவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை திருத்தும் பணியில், மதிய உணவின்பின், ‘குவத்’ மென்றபடி ஓய்வு எடுக்கிறார்கள். ‘குவத்’ என்பது, களைப்பு தெரியாமல் இருக்கவும், லேசாக போதை தரவும் மெல்லப்படும் ஒருவகை இலை. (வெற்றிலை போல மெல்லுவார்கள்)
இந்தப் பகுதி அல்-காய்தாவிடம் இருந்து கைப்பற்றப்பட்டபின், ஏமன் ராணுவத்தின் CSF (Central Security Force) படைப்பிரிவு, பாதுகாப்பை கவனிக்கிறது. கீழேயுள்ள போட்டோவில் சி.எஸ்.எஃப். காவல் அரண் ஒன்றில் இருந்து வீதியை நோட்டமிடும் ராணுவத்தினரை பாருங்கள்.
அல்-காய்தாவின் கட்டுப்பாட்டில் இந்தப் பகுதி இருந்த நாட்களில், ராணுவத்தினர் வெளியே தலை காட்டினால், உடனே சுடப்படுவார்கள். அந்த நாட்களில் ராணுவத்தினர் அதீத பாதுகாப்புடன், அணி அணியாக வருவார்கள். இப்போது, ராணுவ வீரர் ஒருவர், பாதுகாப்பு ஏதுமின்றி ஒற்றையில் திரிய முடிவதை கீழேயுள்ள போட்டோவில் பாருங்கள்.
ஜிஞ்சிபார் மாகாண தலைநகரில் உள்ள அரசு தலைமை அலுவலகம். அல்-காய்தா இருந்த காலத்தில், இதே பில்டிங்கை தமது நிர்வாக செயலகமாக வைத்திருந்தார்கள். பில்டிங் இப்போது ராணுவத்தின் கைகளில்! கீழேயுள்ள போட்டோவில், உடைந்துபோன செயற்கை நீர்வீழ்ச்சி (ஃபவுன்டன்) ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட மீன் சிலையை, ராணுவ வீரர் ஒருவர் செக் பண்ணுகிறார்.
அல்-காய்தாவுடன் நடைபெற்ற போரில், விமான தாக்குதலுக்கு உள்ளான வைத்தியசாலை ஒன்றின் பகுதிகளில், சேத மதிப்பீடு செய்கிறார் ஏமன் ராணுவத்தின் 3-ம் பிரிகேட்டைச் சேர்ந்த அதிகாரி தரிக் பிஷார்.
இந்த வைத்தியசாலையை அல்-காய்தா தமது போராளிகளுக்கு சிகிச்சை கொடுக்க பயன்படுத்தியதாகவும், அதனால், விமான குண்டு வீச்சு நடத்தப்பட்டது எனவும் ராணுவ தரப்பில் கூறப்பட்டது.
அல்-காய்தா இயக்கத்தினரின் கண்களில் கண்ணீரை வரவைக்கும் போட்டோ இது. இதில் கறுப்பாக தென்படுவதுதான் அல்-காய்தாவின் கொடி. ஒருகாலத்தில் இந்தப் பகுதியில் பட்டொளி வீசி பறந்த கொடி, இப்போது கந்தல் துணியாக காற்றில் பறக்கிறது.
இவர்கள் இருவரின் பெயர்களும், .ஃபாக் அம்தலா (22), காலித் அசீஸ் (32). அல்-காய்தாவின் கட்டுப்பாட்டில் இந்தப் பகுதி இருந்தபோது இங்கு வசித்தவர்கள். ராணுவம் கைப்பற்றிய பின்னரும் தொடர்ந்து வசிக்கிறார்கள்.
அல்-காய்தா நிர்வாகம் இங்கு நடந்தபோது, அல்-காய்தாவால் வழங்கப்பட்ட தண்டனையான, வலது கரத்தை வெட்டுதலுக்கு உள்ளானவர்கள். தண்டனை வழங்கிய அல்-காய்தா தளபதி, இவர்களது கரத்தை வாளால் வெட்டினார் எனவும், யுத்தத்தில் அந்த தளபதி கை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், வீதியில் கிடந்தார் எனவும் இவர்கள் சொல்கிறார்கள்.
யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட எந்திரத் துப்பாக்கி தோட்டாக்களின் காலி ஷெல்கள் இவை. தற்போது ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டு, ‘உலோக’ விலைக்கு விற்கப்படுகிறது. இந்த காலி ஷெல்களுக்கு உள்ளேயிருந்த தோட்டாக்கள் எத்தனை பேரின் உயிர்களை குடித்தனவோ!
யுத்தத்தில் சிதைந்துபோன பகுதி ஒன்றின் வாயிலில் உள்ள பில்டிங்கை காவல் காக்கும் ராணுவ வீரர். இந்த பகுதிக்குள் யாரையும் உள்ளே செல்ல விடாமல் காவல் காக்கிறார் இவர். காரணம், இந்தப் பகுதிக்குள் அல்-காய்தாவால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இன்னமும் முற்றாக அகற்றப்படவில்லை.
“இந்தப் பகுதியில் வசித்தவர்களை ஏன் அங்கு மீண்டும் குடியேற்றவில்லை?” என்று எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர் கோஷம் எழுப்பியபோது, ராணுவம் கொடுத்த பதில், சுவாரசியமானது.
“தாராளமாக குடியேற்றலாமே! அதற்குமுன் நீங்கள் ஒருமுறை இங்கே வாருங்கள். இந்தப் பகுதிக்குள் காலாற நடந்துவிட்டு, மக்களை அழைத்துக் கொள்ளுங்கள். குடியேற்றுங்கள். கண்ணிவெடிகள் என்றால் பயமற்ற உங்களைப்போன்ற துணிச்சல்காரர்கள்தான் எங்கள் நாட்டுக்கு தேவை”
அதன்பின் குறிப்பிட்ட அரசியல்வாதி வாய் திறந்ததில்லை.
அல்-காய்தாவின் நிர்வாக தலைமை அலுவலக பில்டிங்கை செக் பண்ணும் ராணுவத்தினர். அல்-காய்தாவினர் இங்கிருந்து ஓடியபோது, ஏராளமான ஆவணங்களை விட்டுச் சென்றிருந்தார்கள். அவற்றில் இருந்துதான் அல்-காய்தாவுக்கு உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் யார் யார் உதவினார்கள் என்ற தகவல்கள் அரசுக்கு கிட்டியது.
அல்-காய்தாவுக்கு வெளிநாடுகளில் உதவியவர்களின் லிஸ்ட், சி.ஐ.ஏ.-விடம் கொடுக்கப்பட்டு, அவர்கள் வெளிநாடுகளில் ரகசியமாக கண்காணிக்கப் படுவதாக கூறப்படுகிறது. அல்-காய்தாவினர் ஓடும்போது, இந்த ஆவணங்களை ஏன் எரிக்காமல் சென்றார்கள் என்பதுதான் யாருக்கும் புரியவில்லை.
ஜிஞ்சிபார் முன்பு அரசுக் கட்டுப்பாட்டு பகுதியாக அங்கு வசித்த பலர், அல்-காய்தா அப்பகுதியை கைப்பற்றியபோது வெளியேறினார்கள். அதன்பின் அல்-காய்தா உள்ளே இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வெளியே சென்றவர்களின் நிலங்களை அல்-காய்தா தம்வசம் எடுத்துக் கொண்டது. ராணுவம் மீண்டும் இந்த இடத்தை கைப்பற்றியபோது, பலர் அல்-காய்தாவினருடன் வெளியேறினார்கள். சிலர் தொடர்ந்தும் தங்கினார்கள்.
இப்படியே ஜனத்தொகை குறைந்துபோய் வெறிச்சோடிப்போன ஜிஞ்சிபார் நகரில், மீதம் உள்ள பிரஜைகளில் ஒருவரை கீழே போட்டோவில் பாருங்கள்.
யுத்தத்தின்போது அழிவுகள் ஏராளம். அழிவுகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்டுதானே அல்-காய்தா இந்த பகுதியை கைப்பற்றியது? இஸ்லாமிய கோட்பாட்டுக்காக போராடுகிறோம் என்று கூறி, இந்த இடத்தைக் கைப்பற்றிய அல்-காய்தாவால், இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களைகூட காப்பாற்ற முடியவில்லை. அனைத்தையும் கைவிட்டு சென்றார்கள்.
போட்டோவில் காணப்படுவது, ஹஜ்ஜார் கிராமத்தில், சிதைவடைந்த நிலையில் உள்ள பள்ளிவாசல்.
மதிய உணவுக்குப்பின், சற்று இளைப்பாறும் ராணுவத்தினர். இவர்களது வாய்களுக்குள் இருப்பது வெடிகுண்டு அல்ல.. நாம் முன்பே குறிப்பிட்ட, களைப்பு தெரியாமல் இருக்கவும், லேசாக போதை தரவும் மெல்லப்படும் குவத் இலை.
யுத்தம் முடிந்தபின், யுத்தம் புரிந்தவர்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள், தப்பியோடி இருப்பார்கள், அல்லது சிறைப்படுத்தப்பட்டு இருப்பார்கள். பொதுவாகவே எந்தவொரு தலைவனும், தம்மை நம்பிவந்த மக்களையும் போராளிகளையும் கைவிட்டு விட்டு, தப்பியோடி பதுங்குவது மிக கேவலமாக பார்க்கப்படும். எனவே, நேர்மையான தலைவனும் களமுனையில் உயிரை விட்டிருப்பான்.
இது போர் புரிந்தவர்களின் பக்கம். மறுபக்கத்தில் உள்ள மக்களின் நிலைமை?
கீழேயுள்ள போட்டோவில், யுத்தம் முடிந்த பின்னரும் அதே பகுதியில் தங்கியுள்ள ஒரு குடும்பம். இந்த வீட்டுக்குள் உள்ள பொருட்கள்தான் அவர்களது தற்போதைய சொத்துக்கள்.
கடந்த போட்டோவில், யுத்தம் முடிந்த பின்னரும் அதே பகுதியில் தங்கியுள்ள ஒரு குடும்பத்தை பார்த்தீர்கள். அவர்களுக்கு தங்குவதற்கு ஒரு வீடு உள்ளது. இந்த போட்டோவில் ஒரு குடும்பம், வீடிழந்து, அகதிகள் முகாமில் உள்ளது. ஏடன் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் உள்ளது இந்த அகதிகள் முகாம்.
அல்-காய்தா இங்கிருந்து தப்பிச் சென்றபோது கைவிட்டுச் சென்ற டாங்கி இது. தற்போது, ராணுவம் தமது யுத்த வெற்றியின் நினைவுச் சின்னமாக தெருவோரத்தில் நிறுத்தி வைத்துள்ளது. இது இயல்புதான். ஒருவேளை அல்-காய்தா ஜெயித்திருந்தால், ராணுவ டாங்கியை இங்கே கண்காட்சியாக நிறுத்தியிருப்பார்களா, இல்லையா?
இவையெல்லாம், ஜெயித்த பார்ட்டிக்கு கிடைக்கும் சில போனஸ்கள்!!
ஒரு யுத்தம் எப்படி முடிந்தது என்பதை பார்த்திருப்பீர்கள். இதில் ஜெயித்தது யார்? யாராக இருந்தாலும், நிச்சயம் மக்கள் அல்ல என்பதை உங்களில் சிலராவது புரிந்து கொண்டிருக்கலாம்.
அமெரிக்காவையே கலங்கடித்த அல்-காய்தா இயக்கம், தமது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த கடைசிப் பகுதி இது. (ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தானில் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இயக்கம் அல்-காய்தா அல்ல, தலிபான்!) தற்போது, ஏமன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மறைந்து வாழ்கின்றனர் அல்-காய்தாவினர்.
ஆனால், புலிகள் இயக்கம் நிலங்களை இழந்து, தலைமையை இழந்தபின், காற்றோடு கரைந்ததுபோல அல்-காய்தா கரைந்து போகவில்லை. இன்னமும் அச்சுறுத்தலாக உள்ளார்கள். காரணங்கள் என்ன?
1) அல்-காய்தா இயக்க தலைமை, தமது எல்லா வைரங்களையும் ஒரே ஜாடியில் போட்டிருக்கவில்லை. அதன் தளபதிகள் வெவ்வேறு நாடுகளில் இருந்தார்கள். ஒரு இடத்தில் தோல்வியடைந்தவுடன் மற்றொரு பகுதியில் துளிர்ப்பார்கள்.
2) உயிரைத் துச்சமென மதித்து போராளிகள் வந்து சேரும் எந்தவொரு விடுதலை இயக்கமும், அதன் ஆதாரமான விஷயத்திலேயே பொய் சொல்லப்பட்டால் நிலைத்ததாக சரித்திரம் இல்லை. அல்-காய்தா உயிர் வாழ்வதன் காரணமும் அதுதான்.
அல்-காய்தா தலைவர் பின்-லேடன் கொல்லப்பட்டபோது, அவரது இறந்த உடலின் போட்டோகூட வெளியே காண்பிக்கப்பட இல்லை. “அவர் இறக்கவில்லை” என்று சொல்லிக்கொண்டு காலத்தை ஓட்டியிருக்க முடியும் அந்த இயக்கம். ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. நேர்மையாக ஒப்புக்கொண்டு, அடுத்த காரியங்களில் இறங்கினார்கள்.
தமது உயிரைக் கொடுக்க தயாராக வரும் போராளிகளுக்கு, இயக்கத்தின் நேர்மை மீது நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பது முக்கியம்!
அதைப் புரிந்து கொண்ட அல்-காய்தா, இன்னமும் உயிர் வாழ்கிறது.
“பின்-லேடன் தப்பியோடி பதுங்கியிருக்கிறார். வரவேண்டிய நேரத்தில் வருவார்” என்று தமது வயிற்றுப் பிழைப்புக்காக, தலைவனை கோழையாக கேவலப்படுத்தும் ஆதரவாளர்கள் யாரும் அல்-காய்தாவில் இல்லை!
நன்றி விறுவிறுப்பு
0 comments :
Post a Comment