Wednesday, September 5, 2012

அன்று வயல் காணிகளை அபகரித்தவர்கள் இன்று விவசாயிகளுக்காக குரல் கொடுக்கின்றனர்

இன்று விவசாயிகளுக்காக குரல் கொடுப்போர், அன்று வயல் காணிகளை நிரப்பி, கைத்தொழிற்சாலைகளை நிர்மானித்ததாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் ஏமாற்றுக்காரர்களின் வலையில் சிக்கிக் கொள்ளாது, சிந்தித்து செயற்படுமாறு, ஜனாதிபதி பொலநறுவையில் மக்கள் மத்தியில் வலியுறுத்தினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நீருக்கான பிரச்சினை காணப்படுகிறது. இதனை புதிதாக நான் கூற வேண்டிய அவசியமில்லை. எமக்கு மழை பொழிவிக்க முடியுமாயின், நாம் அதனையும் செய்வோம். எமக்கு செய்ய முடியுமான சகல விடயங்களையும் நாம் செய்தோம். வறட்சியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க, சகல செயற்பாடுகளையும் மேற்கொண்டோம். முடியுமான சகல நிவாரணங்களையும் வழங்க நாம் இணங்கினோம். நாம் அதனை நிறைவேற்றுகின்றோம்.

அன்று ஐக்கிய தேசியக் கட்சியினர், விவசாயிகளை எவ்வாறு கவனித்தார்கள் என்பது தொடாபில், எமக்கு நன்றாக தெரியும். இது தொடர்பான வரலாறும் எமது நாட்டில் உள்ளது. அன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், 10 ஆயிரம் ஏக்கர் வயல் காணிகளை நிரப்பி, கைத்தொழிற்சாலைகளை நிர்மாணிக்க திட்டமிட்ட இவர்கள், இன்று விவசாயிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றனர். நாம் இந்த இடத்தையும் மீட்டெடுத்து, விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்தோம்.

நாம் எம்மால் புரிய முடியுமான சகல அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொண்டுள்ளோம். விவசாயிகள் மாத்திரமன்றி, நெடுஞ்சாலைகள், சுகாதாரம், கல்வி உட்பட அனைத்து துறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கல்வியின் பண்புசார் விருத்தியை மேம்படுத்த நாம் அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளோம். நாம் இவையனைத்தையும், எமது இளம் சந்ததியினருக்காகவே, புரிந்தோம்.

போலி பிரசாரங்களை மேற்கொண்டு, மக்களை வழிதவறச்செய்து, மாணவர்களை அச்சமூட்டக்கூடிய நிலைமை தோற்றுவிக்கப்படுகிறது. இவர்கள் சமூகத்தை பெரும் அச்சத்திற்குட்படுத்த முயற்சிக்கின்றனர். இதனால், நீங்கள் அனைவரும் சிந்தித்து, தெளிவாக செயற்பட வேண்டிய தேவையுள்ளது. உண்மையினை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். நாம் எதனை புரிகின்றோம், எதனை கூறுகின்றோம் என்பது தொடர்பில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இதற்காகவே எமக்கு அறிவு வழங்கப்பட்டுள்ளது. சிந்தித்து செயற்படுங்கள்.

வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, சகல நிவாரணங்களையும் வழங்கியதாகவும், நாட்டின் அபிவிருத்தி ஒரு துறைக்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை எனவும், விவசாயத்தினூடாக, நாட்டை தன்னிறைவடையச்செய்யும் செயற்பாடுகள் உட்பட எமது சிறார்களுக்காக கல்வித்துறையின் பண்புசார் விருத்தியினை மேற்கொள்வதற்காகவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

தேர்தல்களை நடாத்தி, அதன்மூலம் மக்கள் வழங்கும் ஆசிர்வாதத்துடன், நாட்டின் அபிவிருத்திகளை புத்தெழுச்சியுடன் முன்னெடுப்பதாக, ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மாகாண சபை தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், பொலநறுவை, மனம்பிட்டிய மைத்ரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment