Sunday, September 2, 2012

புலிவருது! புலிவருது! முடிந்த கதை. சர்வதேசம் வருது , சர்வதேசம் வருது! முடிவில்லாக்கதை..

இனவாதம் களமாடும் தளமாக கிழக்கின் தேர்தல்களம் தோற்ற மளிக்கின்றது. தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் தம்மிடையே திரைமறைவிலுள்ள அனைத்து உறவுகளையும் மூட்டையில் கட்டி மூலையில் போட்டுவிட்டு அப்பாவிகளின் வாக்குகளை அபகரிப்பதற்காக துருக்கி தொப்பிகளுடனும் வெள்ளை வேட்டிகளுடனும் இனவாதத்தை கக்கி வருகின்றனர்.

2009 மே வரை தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஆயுதமுனையில் காவுகொண்டு சுகபோகம் அனுபவித்தவர்களான தமிழ்த் தலைமைகள் எனத் தமக்கு தாமே கூறிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் (கூட்டே இல்லாத கூட்டு அது) அன்று புலிகளை காட்டி மக்களை பயமுறுத்தி வாக்குகளை பெற்று கதிரைகளைக் கைப்பற்றி தமது சுகபோக வாழ்வை அனுபவித்தனர். ஆனால் இன்று ஆயுதத்தைக் காண்பித்து வாக்கு கேட்பதற்கு புலிகள் இல்லாத பட்சத்தில் சர்வதேசம் உங்களை அவதானிக்கின்றது எங்களுக்கு நீங்கள் வாக்களிக்காவிட்டால் விளைவுகள் விபரிதமாக இருக்கும் என மிரட்டுகின்றனர்.

புலிகள் ஊசலாடும்போது தமிழ் மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளையும் சர்வதேசம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது, தமிழ் மக்கள் ரிஎன்ஏ க்கு வாக்களிக்காவிட்டால் புலிகளை தமிழ் மக்கள் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தி சர்வதேசத்திற்கு சொல்லப்படும் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு, புலிகளின் தலையில் பாலைவார்த்து, தமிழ் மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றி அவர்களை பயமுறுத்தி வாக்குகளை அபகரித்து பாராளுமன்று சென்று அதன் சிறப்பு சலுகைகளை பெற்று இலங்கை அரசுடன் ஒட்டி உறவாடி சுகபோகம் அனுபவித்து வந்தனர், வருகின்றனர். இதனூடக அவர்கள் அனுபவித்த சுகபோகங்கள மற்றும் சுருட்டியவற்றை இங்கு பட்டியலிட்டால் பக்கங்கள் நீளும்.

புலிகளைக்காட்டி தமிழ் மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்ற முடியாத கட்டத்தில் சர்வதேசத்தை காட்டி ரிஎன்ஏ தேர்தலில் மிரட்டி வாக்கு கேட்கின்றது. அண்மையில் மட்டக்களப்பில் தேர்தல் மேடை ஒன்றில் பேசிய ரிஎன்ஏ யின் தலைவர் சம்பந்தன் ..

'நடைபெறவுள்ள கிழக்கு மாகாண தமிழ் மக்கள் எந்தவிதமான தீர்ப்பை வழங்கப்போகிறார்கள் என்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த மக்கள் தங்களின் நீண்ட கால கோரிக்கைகளின் அடிப்படையில் தமக்கு  சுயாட்சி வேண்டும் இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தங்களது அரசியல், சமூக, பொருளாதார கலாசார அபிலாஷைகள் நிறைவேற்றக்கூடிய நிலையில் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் அதற்காக எமக்கு ஜனநாயகம் வேண்டும் எனக் கூறப்போகின்றார்களா? அல்லது அரசாங்கம் கூறுவது போல் அபிவிருத்தியை மட்டும் ஏற்று கிழக்கு மாகாண மக்கள் எங்களுடன் நிற்கின்றார்கள் என்று தங்கள் வாக்குகளை அரசாங்கத்திற்கு வழங்கப்போகின்றார்களா? என்பதை சர்வதேச சமூகம் உண்ணிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த கேள்விகளுக்குத்தான் நீங்கள் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் பதிலளிக்கப்போகின்றீர்கள்.' எனத்தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களிடம் சென்று வாக்குகோருவதற்கான அடிப்படைத் தகமைகளை கூட கூட்டமைப்பு இழந்து நிற்கின்றது என்பதனை சம்பந்தனின் மேற்படி மிரட்டல் தெளிவுபடுத்துகின்றது. பரிதாபநிலை யாதெனில் நாம் உங்களுக்காக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்திருக்கின்றோம், ஆரம்பித்த பணிகள் முடிவுறாமல் கிடக்கின்றது, ஆணையை தாருங்கள் அதை முடித்து உங்கள் வாழ்கையை மேம்படுத்துகின்றோம் எனச் சொல்வதற்கு வக்கற்ற நிலையில் நீங்கள் யாருக்கு வாக்களிக்கின்றீர்கள் என்பதை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது என மிரட்டுகின்றார்.

சர்வதேசம் உண்மையில் பார்த்துக்கொண்டிருக்குமானால் இன்று தமிழ் மக்கள் செய்யவேண்டியது என்ன? சர்வதேசம் ரிஎன்ஏ க்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றது என்றால் அதற்கு எதிராக வாக்களிக்கப்பதை தவிர அவர்களுக்கு எந்ததெரிவும் இருக்கக்கூடாது.

சம்பந்தன் இன்று வாக்குகளுக்காக பூச்சாண்டி காட்டுகின்ற இந்த சர்வதேச சமூகம் தமது அரசியல் நலன்களுக்காக இலங்கையினுள் நுழைகின்றதே தவிர அது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது என்றால், வன்னியிலே நடைபெற்ற விடயங்களை அது செய்மதி மூலம் பார்த்துக்கொண்டிருந்தது ஏன்? உயிர்கள் செத்து மடியும்போது, ஈராக், லிபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளுள் நுழைந்தால்போல் நுழைந்து உயிர் அழிவுகளை தடுத்திருக்வேண்டும் அல்லவா? மாறாக தொடர்ந்தும் யுத்தத்திற்கு ஆயுதங்களை அரசிற்கு வழங்கினார்கள். மேலும் புலம்பெயர் தேசம் எங்கும் தமிழ் மக்கள் சர்வதேசமே கண்திற என தெருத்தெருவாக ஆர்பாட்டங்கள் நடாத்தியபோது, சம்பந்தனின் சர்வதேசம் அவ்வார்பாட்டங்களை சட்டத்தில உள்ள நுணுக்கங்களை வைத்து ஒடுக்கியது என்ற கதை இன்று சம்பந்தன் தலைமையில் வாக்கு சூறையாடப்படவிருக்கின்ற மக்களுக்குத் தெரிந்திருக்காது. இதை நன்கு அறிந்து வைத்திருக்கும் சந்பந்தன் சர்வதேசப் பூச்சாண்டி காட்டுகின்றார் என்பதை எம்மக்கள் உணரமறுப்பதன் மர்மம் என்ன?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்ற சம்பந்தன் அங்குபேசும்போது நாம் தனிநாடு கோரவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் வாழவே விரும்புகின்றோம் என்றும் இந்திய ராஜதந்திரிகள் இங்கு வருகின்றபோதும் நாம் ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தீர்வைத்தேடுகின்றோம் என்றும் தெரிவித்திருந்தார். இருந்த போதும்,  சம்பந்தன் தேர்தல்வந்தவுடன் மீண்டும் பழையகுருடி கதவதிறவடி என்று பழைய சுயாட்சி பல்லவியைத் தூக்கிக்கொண்டு வந்து நிற்கிறார்.
 
மேலுமோர் சந்தர்ப்பத்தில் பேசிய சம்பந்தன் 'ஜெனீவாத் தீர்மானத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு அதிக பட்ச அதிகாரத்தை உள்ளடக்கிய அரசியல் தீர்வை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை வழங்க விரும்பவில்லை. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ௭டுக்கும் முடிவு சர்வதேச சமூகத்தின் ௭திர்பார்ப்பை பலவீனப்படுத்துவதாக அமைந்து விடாமல் பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடவுளினால் ௭மக்கு தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம்' எனத்தெரிவித்துள்ளார்.
 
ஜெனிவாவிலே இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, உலகின் பல பகுதிகளிலும் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கு பிரசன்னமாக வேண்டும் என்ற ஒருமித்த குரல் எழுந்திருந்தபோதும், இலங்கை பாராளுமன்றிலே ஆழும்கட்சியுடன் கிறிக்கட் விளையாடிக்கொண்டும் அரச விருந்தினர் உபசாரங்களில் உண்டு மகிழ்ந்து கொண்டுமிருந்த ரிஎன்ஏ காரர் தற்போது அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமானல் கிழக்கு மாகாண சபைக்கு வீட்டுச்சின்னத்திற்கு வாக்கு போடட்டாம் என மொட்டந்தலைக்கும் முழங்காலும்கும் முடிச்சுப்போடுகின்றனர்.
 
இவ்வாறு ஏகப்பட்ட பொய்முடிச்சுகளுடன் விளம்பரத்திற்காகவும் பிரச்சாரத்திற்காவும் லட்சக்கணக்கில் செலவிட்டு கிழக்கு மாகாண சபையினுள் நுழைய முனைவதன் நோக்கம் முற்றிலும் வேறுபட்டது. ரிஎன்ஏ இச்சபையினூடாக வடக்கு கிழக்கை இணைக்க பிரேரணை நிறைவேற்றப்போகிறோம் எனக் கூறுகின்றது.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையை கைப்பற்றி விடும் என்று எடுத்துக்கொண்டால் கிழக்கு மக்களை சனியன் பிடிக்கும் நாள் அதுவென்று எடுத்துக்கொள்ளலாம். காரணம் ரிஎன்ஏ என்பது ஒரு கூட்டே அல்ல. தமிழ் மக்களின் வாக்குகளுக்கு மாத்திரமே அவர்கள் பெயரளவில் கூட்டமைப்பு என்கின்றார்கள்.

அங்கு குத்தல்களும் குதறல்களுமே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. பதவிகளுக்கு குழிபறியல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. வேட்பாளர்களின் ஒதுக்கீடுகளின்போது ஏற்பட்ட முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. அங்குள்ள ஆயுதக்குழுக்களுக்கும் தமிழரசுக்கட்சியினருக்குமிடையே பெரும்போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒன்றுகூடி எந்த விடயத்திலும் ஒரு உடன்பாட்டை எட்டியதேயில்லை. அவர்களால் அதை செய்யவும் முடியாது. 

காரணம் அங்குள்ளவர்கள் எவருமே ஒரே கொள்கை கொண்டவர்கள் அல்லர். இந்நிலையில் தமிழ் மக்கள் இன்று இருக்கின்ற நிலையை மாற்றி அமைக்கவேண்டும் என நினைக்கின்றார்களானால், அதாவது வீட்டுக்கு புள்ளடி போட்டு உடைந்து கிடக்கின்ற வீட்டை கட்ட நினைப்பார்களானால் அது தாங்கள் இருக்கின்ற வீட்டை உடைக்க முற்படுகின்றார்கள் என்பதுதான் பொருளாக இருக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com