Friday, September 7, 2012

பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!

யால்வாக், துருக்கி தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி குழந்தைக்குத் தாயாக்கிய நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் துருக்கியைச் சேர்ந்த ஒரு இளம் பெண். பின்னர் அந்த நபரின் தலையை வெட்டி ஊருக்கு நடுவே கொண்டு வந்து போட்டார் அவர்.

அந்தப் பெண்ணின் பெயர் நெவின் இல்திரிம். வயது 26. துருக்கியின் யால்வாக் என்ற ஊரைச் சேர்ந்தவர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து 5 மாத கர்ப்பமாக்கிய நபரைத்தான் தற்போது கொன்றுள்ளார்.

கொல்லப்பட்ட நபரின் பெயர் நுரெட்டின் கிடர். கடந்த ஜனவரி மாதம் இவர், நெவின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது நெவினின் கணவர் வீட்டில் இல்லை. இதையடுத்து நெவினை கிடர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மேலும் தொடர்ந்து சில நாட்கள் நெவின் வீட்டுக்கு வந்து கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.

துப்பாக்கி முனையில் நெவினை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனது இச்சைக்குப் பணிய மறுத்தால் உன்னையும், உனது குழந்தைகளையும் கொன்று விடுவேன் என்று அவர் மிரட்டினாராம்.

கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக இப்படியே செய்து வந்ததாக தெரிகிறது. அதாவது கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வரை இது நீடித்துள்ளது. இந்த தொடர் அட்டூழியத்தால் கர்ப்பமானார் நெவின். இதற்கு மேலும் பொறுக்க முடியாமல்தான் அவர் கிடரைக் கொலை செய்ய முடிவெடுத்தார்.

சம்பவ தினத்தன்று தனது வீட்டுக்கு கிடர் பின்பக்க சுவர் ஏறிக் குதித்து வந்தபோது அவரை துப்பாக்கியால் சுட்டார் நெவின். இதைப் பார்த்து தப்பி ஓட முயன்றார் கிடர். ஆனால் விடாமல் துரத்திச் சென்று சுட்டார். அப்போது குறி தவறியது. இதையடுத்து நெவினைப் பிடித்து இழுக்க முயன்றார் கிடர். இதையடுத்து கிடரின் ஆணுறுப்பைப் பார்த்து சுட்டுள்ளார் நெவின். அதில் கிடர் நிலை குலைந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது தலையை கத்தியால் வெறியுடன் அறுத்துத் துண்டித்தார் நெவின்.

மொத்தம் பத்து முறை கிடரை சுட்டுள்ளார் நெவின். அதில் பாதிக்கும் மேற்பட்ட குண்டுகளை கிடரின் ஆணுறுப்பில்தான் அவர் பாய்ச்சியுள்ளார். பின்னர் அறுத்த தலையுடன், ரத்தம் சொட்டச் சொட்ட ஊர் மையத்திற்கு வந்த அவர் அங்கு தலையைப் போட்டு விட்டு ஊரைக் கூட்டினார்.

அவரது கொலை வெறிக் கோலத்தைப் பார்த்து ஊர் மக்கள் பதறிப் போய் விட்டனர். அதிர்ச்சியுடன் நின்ற அவர்களைப் பார்த்து, என்னைப் பற்றி பின்னால் நின்று பேசாதீர்கள். எனது கெளரவத்தையும், மரியாதையையும் சீர்குலைத்த நபரின் தலை இங்கே உள்ளது என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார் நெவின்.

இதையடுத்து நெவின் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் நெவினின் செயலை துருக்கி பெண்கள் அமைப்பினர் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். அவரை ஒரு வீரப் பெண் என்று அவர்கள் பாராட்டியுள்ளனர். அவரது வயிற்றில் வளரும் குழந்தையை கருக்கலைப்பு செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

கொல்லப்பட்ட கிடருக்கு 35 வயதாகிறது. இரண்டு குழந்தைகளுக்கு தந்தை இவர். நெவினின் உறவுப் பெண்ணைத்தான் கிடர் திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com