மதுபானம் என எண்ணி பிரேத பரிசோதனைக்கு பயன்படுத்தும் திரவத்தை அருந்தியவர் மரணம்
மதுபானம் என எண்ணி பிரேத பரிசோதனைக்கு பயன்படுத்தும் திரவத்தை அருந்தியவர் ஒருவர் மரணமான சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மன்னார் வங்காலைக் கடற்கரைக்கு கடந்த புதன்கிழமை சென்றிருந்த நான்கு இளைஞர்கள் கடலில் போத்தல் ஒன்று மிதந்து வருவதை கண்டுள்ளனர்.
அவ்வாறு மிதந்துவந்த போத்தலில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானம் இருப்பதாக எண்ணி அதனை எடுத்து அருந்தியுள்ளனர். இதன்பின்னர் அந்த நான்கு இளைஞர்களும் வாந்தி எடுத்துள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமானதையடுத்து, மன்னார் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். வங்காலைக் கிரமாத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திரவத்தை அருந்திய மற்ற மூவருக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இவர்கள் அருந்தியதாகக் கூறப்படும் திரவத்தின் வெற்றுப்போத்தலை வைத்தியர் ஆராய்ந்த போது, அது மதுபானம் அல்ல எனவும், அவர்கள் அருந்திய திரவம் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும்போது பயன்படுத்தும் ஒருவகை மருந்து எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
0 comments :
Post a Comment