"அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட போது, அந்த உடலை, அவரது இளம் மனைவி தான் அடையாளம் காட்டினார்' என, அமெரிக்க கடற்படையின் மாஜி வீரர், தான் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில், குடும்பத்துடன் பதுங்கியிருந்த ஒசாமா பின்லாடனை, கடந்த ஆண்டு மே மாதம், அமெரிக்க கடற்படையின், "சீல்' படையினர் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர். இந்த படையில் இடம் பெற்ற மட் பிஸ்சோனீட், 36, "நோ ஈஸி டே' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். மார்க் ஓவென் என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய நூலில், ஒசாமாவின் இருப்பிடத்தை, "சீல்' படையினர் எவ்வாறு அடைந்தனர் என்றும், ஒசாமாவை நேருக்கு நேர் எதிர்கொண்டு துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியது குறித்தும் விரிவாக விவரித்துள்ளார்.
ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட பின், அவரின் முகத்தை படம் பிடித்து, அடையாளத்தை உறுதி செய்தது குறித்து, மார்க் ஓவென் கூறியுள்ளதாவது: இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம், ஒசாமாவின் இருப்பிடத்தை அடைந்தோம். உதவியாளர்களை கொன்ற பின், ஒசாமாவின் அறைக்கு வெளியே துப்பாக்கியுடன் காத்திருந்தேன். அடி மேல் அடி வைத்து, காதுகளை கூர்மையாக்கி நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், மற்றொரு வீரரின் துப்பாக்கி குண்டு பட்டு, ஒசாமா சரிந்தார். பின்னர், அவரின் உடலில் அசைவு அடங்கும் வரை, சரமாரியாக சுட்டோம். குண்டுகள் பாய்ந்ததில், மார்பு பிளந்து கொண்டது. ஒரு குண்டில் முகம் உருக்குலைந்து, நெற்றிப் பகுதியில் பாய்ந்த மற்றொரு குண்டில், வலது பக்க மண்டை ஓடு சிதைந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அங்கிருந்த ஓர் இளம்பெண், கொல்லப்பட்டது ஒசாமா என, அடையாளம் காட்டியதாகவும், மற்ற மனைவியர் ஒசாமாவை அடையாளம் காட்ட மறுத்து விட்டதாகவும், மார்க் ஓவென் இந்த நூலில் கூறியுள்ளார். ஒசாமா கொல்லப்பட்ட சமயத்தில், அவர் தற்காப்புக்கான எந்த ஏற்பாடுகளையும் தயாராக செய்து வைத்திருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள மார்க் ஓவென், "ஒசாமாவின் அறையில் இருந்து கைப்பற்றிய இரண்டு துப்பாக்கிகளிலும் குண்டுகள் இல்லை' எனக் கூறியுள்ளார். மார்க் ஓவென் தனது நூலின் மூலம், ராணுவ ரகசியத் தகவல்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம் என எதிர்ப்பு தெரித்துள்ள அமெரிக்க ராணுவத் துறை, அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment