த.தே.கூவை இந்தியாவிற்கு அழைத்து எம் நாட்டின் இறைமைக்கு சவால் விடுக்கின்றார் மன்மோகன்
நாட்டின் இறைமைக்கு சவால் விடுக்கும் வகையில், த.தே கூட்டமைப்பை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய மத்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் அனுமதியில்லாமல், த.தே கூட்டமைப்பு எமது நாட்டு பிரச்சினை தொடர்பாக மற்ற நாடுகளுடன் பேச எந்தவித அதிகாரமும் இல்லை. எனவே அரசாங்கம் த.தே.கூட்டமைப்பின் இந்திய விஜயத்தை தடை செய்ய வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், எமது நாட்டின் பிரச்சினையை தீர்க்க இந்தியாவின் பங்களிப்பு தேவையில்லை. எம்நாட்டின் பிரச்சினைகளை எமது நாட்டு அரசாங்கம் தீர்த்துக் கொள்ளும்.அத்துடன் த.தே.கூட்டமைப்பு என்பது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி. எனவே இவ்வாறான நிலையில் மன்மோகன் த.தே.கூட்டமைப்புக்கு இந்தியா வருமாறு அழைப்பு விடுப்பதானது எம் நாட்டின் இறைமைக்கு விடுக்கும் சவால் என குணதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன், 13வது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, அதிகாரப் பரவலாக்கலை நிலைநிறுத்தி நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்கின்றது. இதற்கு அமைவாகவே இந்தியா தமது செயற்பாடுகளை நகர்த்துகின்றது. அதற்கிணங்கவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக் குழுவில் இலங்கைகெதிரான அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா ஆதரித்தது என தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கில் மாகாணசபை தேர்தலை நடத்துவதுடன், அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என அமெரிக்கா மேற்கு உலக நாடுகளிடம் தனது கருத்தை திணித்து, இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது எனவும், குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment