Tuesday, September 4, 2012

துமிந்தவை கைது செய்ய பிடியாணை வழங்கவேண்டிய அவசியமில்லை – நீதிமன்றம்

பாரத லக்ஷ்மன் உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான, பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான துமிந்த சில்வாவை கைது செய்வதற்கு பிடியாணை வழங்க வேண்டிய அவசியமில்லை என கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் திறந்த மன்றில் தெரிவித்துள்ளார்.

பாரத லக்ஷ்மன் உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பேதே நீதவான் இதனைக் குறிப்பிட்டார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, துமிந்த சில்வாவிற்கு சுயநினைவு இல்லாமற்போனமை தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியங்களையோ அல்லது மருத்துவ அறிக்கைகளையோ இரகசிய பொலிஸார் நீதிமன்றில் முன்வைக்கவில்லை என்றும், அதன் காரணமாக சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து, துமிந்த சில்வாவிற்கு சுயநினைவு இல்லாமற்போனமை தொடர்பிலான தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், துமிந்த சில்வா சிகிச்சைபெறும் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் கீத் நோவினால் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான துமிந்த சில்வாவின் ஆதரவாளரான பிரியந்த ஜனக்க பண்டார என்பவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும், அவர் ஆயுதக்குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு ள்ளதாகவும், நவகம பொலிஸார் தமக்குத் தெரிவித்துள்ளதாக கநீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதேவேளை துமிந்த சில்வாவிற்கு மேற்கொள்ளப் படவேண்டிய இறுதி சத்திரசிகிச்சையை மேற்கொண்ட பின்னர் வைத்தியர்களின் ஆலோசனைப்படி அவரை இலங்கைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும் என அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய குறிப்பிட்டார்.

குறித்த விடயங்களை ஆராய்ந்து கொழும்பு மேலதிக நீதவான் இலங்கைப் பொலிஸாரின் வேண்டுகோளுக்கமைய சர்வதேச பொலிஸாரின் ஊடாக துமிந்த சில்வாவை கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்க முடியும் எனவும் அதற்கான அவசியம் தற்போது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com