Monday, September 3, 2012

கக்கூஸை விட செல்போனில் பத்து மடங்கு கிருமிகள் அதிகமாம்!

நாம் உபயோகிக்கும் கழிவறையை விட செல்போனில் பத்துமடங்கு அதிகம் கிருமிகள் இருக்கிறது என்று ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர். ஆடை இல்லாத மனிதன் அரைமனிதன் என்பது பிரபலமான பழமொழி. அதுபோல செல்போன் இல்லாத மனிதன் செல்லாக்காசு என்று புதுமொழி உருவாகும் அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. செல்போனை புதிது புதிதாக வாங்குவதாகட்டும். அதற்கு டாப் அப் செய்வதாகட்டும் இளசுகள் முதல் பெரிசுகள் வரை அனைவரும் அதை சரியாக செய்வார்கள். தகவல் தொடர்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு சாதனம் இன்றைக்கு பலவிதமான உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொருவரும் தங்களின் தேவைக்கேற்ப செல்போனை உபயோகப்படுத்துகின்றனர். இந்த செல்போனை நாம் உபயோகிக்கும் அளவிற்கு அதை யாரும் சுத்தமாக வைத்திருப்பதில்லை. சுத்தப்படுத்துவதும் இல்லை. விளைவு கிருமிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது செல்போன். நாம் நம்முடைய செல்போனை கண்ட இடங்களில் வைக்கின்றோம். பல சூழ்நிலைகளில் பயன்படுத்துகின்றோம். ஆனால் அதனை எப்போதும் சுத்தப்படுத்துவதில்லை அங்கு கிருமிகள் குடியேறுகின்றன.

அரிசோனா பல்கலைக்கழகத்தின் மைக்ரோபயாலஜித் துறை பேராசிரியர் சார்லஸ் கெர்பா என்பவர் நம்முடைய சுற்றுச்சூழலில் நம்முடன் வசிக்கும் கிருமிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அவர்தான் செல்போனில் கிருமிகள் வசிப்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளார்.

மனிதர்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வயிற்று உபாதை, தொற்றுநோய் பரவல், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்பட கழிவறையை விட செல்போன்களே மிக அதிக அளவில் காரணமாக இருப்பதாகவும் அவர் மேற்கொண்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான கிருமிகளைக் கொண்டிருக்கும் செல்போன் எப்போதும் நமது கையிலும், வாய்க்கு அருகேவும் இருப்பதால் பல நோய் உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று பேராசிரியர் சார்லஸ் கெர்பா தெரிவித்துள்ளார். அடுத்தமுறை செல்போன் மூலமாக காதலிக்கு முத்தம் கொடுக்கும் முன் கொஞ்சம் யோசித்துக்கொள்வது நல்லது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com