மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க கோரியும், சிறைக் கைதிகளுக்கு சரியாக உணவு வழங்க கோரியும், கைதிகளின் மருத்துவ விடயங்களில் முழு அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்து மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் உண்ணாவிரதத்தில் இன்று காலையிலிருந்து ஈடுபட்டுவருகின்றனர்.
சிறைச்சாலைகளில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக, சிறைச்சாலை ஆணையாளரால் சகல சிறைச்சாலைகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. இப்பணிப்புரைக்கிணங்க சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும், ஒவ்வொரு பிரிவாகச் சென்று உணவை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு மறுப்புத் தெரிவித்த மட்டக்களப்பு சிறைச்சாலை ஜி பிரிவிலுள்ள சுமார் 35 பேர், தங்களது இருப்பிடங்களுக்கு கொண்டுவந்து உணவை தரவேண்டுமெனக் கூறி நேற்று ஞாயிற்றுக்கிழமை உணவை பெற்றுக்கொள்ளவில்லை என்றும், இவர்களில் 6 பேர் இன்று காலையிலிருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலை அதிகாரிகள் சுமூகமாக பேசியும் கைதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லையென்றும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் இது சாகும் வரையிலான உண்ணாவிரதமாக தொடருமென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதியொருவர் தெரிவித்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment