இந்திய இராணுவ இரகசியங்களை கொழும்புக்கு எடுத்து வந்த பாக். உளவாளி கைது. பின்னணி என்ன?
“இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து வந்த ஐ.எஸ்.ஐ. உளவாளியான அதிராம்பட்டின இளைஞரை க்யூ பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்” என்ற செய்தி மீடியாக்களில் பரபரப்பாக அடிபடுகிறது. என்ன விவகாரம் இது?
இந்திய ராணுவத்துடன் எந்த தொடர்பும் இல்லாத, அதிராம்பட்டின இளைஞர் ஒருவர், கையில் ஒரு கேமராவை மட்டும் வைத்துக் கொண்டு, இந்திய ராணுவ ரகசியங்களை, சுடசுட சீடியில் போட்டுக் கொடுக்கும் அளவுக்கு ரொம்ப ‘வீக்’கான நிலையிலா உள்ளது இந்திய ராணுவம்?
மீடியாக்களில் சொல்லப்படும் கதையை தருகிறோம். பாருங்கள்:
அதிராம்பட்டினம் ஆசாத் நகரைச் சேர்ந்தவ தமீம் அன்சாரி (35), சில வருடங்களாக இலங்கைக்கு காய்கறிகளை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார். இதற்காக தமீம் அன்சாரி வாரத்திற்கு ஒரு முறை திருச்சி விமான நிலையம் வழியாக கொழும்பு சென்று வந்தார். காய்கறி வாங்குவதாக கூறி விசாகப்பட்டினம் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களுக்கு அவர் அடிக்கடி சென்று வந்தார்.
சமீப காலமாக அன்சாரியிடம் அதிக அளவில் பணப் புழக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக நண்பர்கள் கேட்டதற்கு காய்கறி ஏற்றுமதி தொழிலில் அதிக அளவு லாபம் கிடைப்பதாக அவர் பதிலளித்தார். இருந்தபோதிலும் அவரது நடவடிக்கை அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அவர்கள் க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாக க்யூ பிரிவு டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் போலீசார் அன்சாரியை கண்காணித்து வந்தனர். காய்கறி வாங்குவதாக கூறி அன்சாரி விசாகப்பட்டினம் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களுக்கு சென்று வந்ததும், அங்கு சில இளைஞர்களை அவர் சந்தித்தது பேசுவதும் தெரியவந்தது.
இந்நிலையில் கொழும்புவுக்கு விமானம் ஏற அதிராம்பட்டினத்தில் இருந்து திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் கிளம்பிய அன்சாரியை, திருச்சி டோல்கேட்டில் வழிமறித்து க்யூ பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அவரிடம் இருந்து ஏராளமான சிடிக்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றை சோதனை செய்து பார்த்த போது, அதில் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படைத் தளம் மற்றும் அமைப்பு, அங்கு நிறுத்தப்பட்டுள்ள போர் கப்பல்கள் பற்றிய விவரம், ஊட்டியில் உள்ள ராணுவ முகாமின் அமைப்பு மற்றும் அவற்றில் நடைபெறும் பணிகள் பற்றிய விவரங்கள் இருந்தன.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த க்யூ பிரிவு போலீசார் அன்சாரியை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த சில வருடங்களாக இலங்கையில் உள்ள ஐ.எஸ்.ஐ. அதிகாரி ஒருவருடன் தமீம் அன்சாரி நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஐ.எஸ்.ஐ. அதிகாரியின் உளவாளியாக அன்சாரி செயல்பட்டு வந்துள்ளார். இங்கிருந்து இந்திய ராணுவ ரகசியங்களை ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுக்கு கொடுத்து வந்துள்ளார். இதற்காக அவர் லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
ராணுவ தளவாட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் கண்டோன்மெண்ட் பகுதியில் ராணுவ முகாம் ஆகியவை திருச்சியில் உள்ளன. தமீம் அன்சாரியிடம் தென்னிந்தியாவின் ராணுவ ரகசியங்களை சேகரித்து கொடுக்குமாறு ஐ.எஸ்.ஐ. உத்தரவிட்டிருந்த நிலையில் திருச்சியைப் பற்றிய ரகசியங்களையும் தமீம் அன்சாரி சேகரித்து கொடுத்தாரா?
இது குறித்து விசாரணையில் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என க்யூ பிரிவு போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் மாதம் ஒரு முறை தமீம் அன்சாரி கொழும்பு சென்று வந்துள்ளார். காய்கறி வியாபாரம் என்ற போர்வையில் சென்ற போதெல்லாம் பென் டிரைவ்களாகவும், சிடிக்களாகவும் இந்தியா பற்றிய ரகசியங்களை அவர் கொழும்பு சென்று கொடுத்த தகவலும் க்யூ பிரிவு போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இவைதான் மீடியாக்களில் வெளியான தகவல்கள்.
இப்படியான விஷயம் ஒன்றில், மத்திய அரசின் சென்ட்ரல் மிலிட்டரி இன்டெலிஜென்ஸ் ஏஜென்சிக்கள் ஏதும் தொடர்பு படாமல், நம்ம தமிழக கியூ பிராஞ்ச் போலீஸ் வீர சாகசம் செய்வது சாத்தியமா? (ஐ.பி.க்கு (IB) இதில் லேசான தொடர்பு உள்ளதாக இப்போது சொல்கிறார்கள்)
Military HUMINT விவகாரங்களில் கியூ பிராஞ்ச் எப்போதிலிருந்து டீல் பண்ண தொடங்கியது? டில்லியில் இயங்கும் DIA (Defence Intelligence Agency) அலுவலகத்துக்கு சும்மா டீ சாப்பிட கூட கியூ பிராஞ்ச் ஆட்கள் சென்றதில்லையே!
சினிமாவில் ராணுவ ரகசியங்களை பிரீஃப் கேசில் போட்டு கடத்தும் வில்லனை விஜயகாந்த் பிரீஃ கேஸூம் கையுமாக பிடிப்பதுபோல, திருச்சி டோல்கேட் ஜங்ஷனில் வைத்து, ராணுவ ரகசிய சி.டி.களுடன் பிடித்தார்களா?
எமக்கு புரிந்த விதத்தில், இந்த விவகாரம் வேறு. நிஜக் கதை, இவர்கள் வெளியே மீடியாவில் சொல்லும் கதை அல்ல!
இவர்கள் எதையோ டிஸ்ட்ராக்ட் பண்ணுகிறார்கள்.
இவர்களிடம் ஏதோ சிக்கியிருக்கிறது. ஆனால், அது நிச்சயமாக மேலேயுள்ள ‘ராணுவ ரகசியம் லபக்’ கதை அல்ல!.
0 comments :
Post a Comment