இலங்கையில் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதில்லை!
மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், அங்கு குற்றவாளிகள் தண்டனை இன்றி தமது நடவடிக்கைகளை தொடருவதற்கான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
தொடர்ச்சியாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை தவறியமை, அங்கு எதேச்சதிகார தடுத்து வைப்பு, சித்ரவதை, முறையற்று நடாத்துதல், காணாமல் போகச் செய்யப்படுதல், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது கொல்லப்படுதல் ஆகியவை குறித்து நடவடிக்கைகள் எதுவும் இல்லாத, ´´குற்றவாளிகள் தண்டிக்கப்படாத ஒரு நிலைமையை´´ ஏற்படுத்தியுள்ளது என்று சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இந்த மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
நூற்றுக்கணக்கான ஆட்களை குற்றம் எதுவும் சுமத்தாமல், அவர்களுக்கு எதிராக வழக்குகளை நடாத்தாமல் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் இன்னமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைப்பயன்படுத்தி, மாற்றுக்கருத்தாளர்களை வாய் மூடச் செய்து, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கும் தடை விதிக்கப்படுவதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் செயற்திட்டத்திலும் பல குறைகள் காணப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
(தமிழோசை)
0 comments :
Post a Comment