மஹிந்த ராஜபக்சவை மாத்திரமே நம்புவோம். வேறு யாருடனும் பேச்சு கிடையாது. சம்பந்தன்.
இன்று காலை கொழும்பிலுள்ள ஹோட்டல் ஜானகியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தியது. மாநாட்டில் கிழக்கு மாகாணசபையில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக பேசப்படுகின்றது, இது தொடர்பில் உங்கள் பதில் என்ன எனக் கேட்கப்பட்டபோது, அரசாங்கம் எங்களுடன் பேசினால் அதுபற்றி பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் தேர்தல் முடிவடைந்து ஒருவாரம் கழித்து உங்களை சந்தித்திருக்கிறோம். இன்று பல ஊகங்கள் நிலவி வருகின்றன. அதில் ஒன்றுதான் கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுக்கள். இதுபற்றி கதைக்கும் அதிகாரம் உடையவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே. அவர் இவ்விடயம் தொடர்பில் எங்களுடன் பேசினால் அதுபற்றி நிச்சயமாக நாங்கள் தட்டிக்கழிக்காமல் பரிசீலிப்போம். ஜனாதிபதி தவிர வேறு யாராவது இதுபற்றி பேசினால் அதற்கு நாங்கள் செவிசாய்க்க மாட்டோம். ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில் இதுவரை எங்களுடன் பேசவில்லை என்றார்.
இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் நாடாளுமன்ற குழுக்களில் தலைவர் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான, சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, அரியநேத்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment