அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
அதாவுல்லாவிற்கு ஆதரவாகவும், பக்க சார்பாகவும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல செயற்பட்டு வருகின்றார் என தெரிவித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் உயர் நீதிமன்றத்தில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகலவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி, அக்கரைப்பற்று அமைப்பாளர் ஹனீபா மதனி, கிழக்கு மாகாண சபை வேட்பாளர் எம்.தவம் ஆகியோர் சார்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நிசாம் காரியப்பர், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சட்டமா அதிபர், தேர்தல் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர், மற்றும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், ஆகியோர் பிரதிவாதிகளாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரசார நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பில், பிரேமலால் ரணகல எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார் என்றும், இவரது பக்கச் சார்பான நடவடிக்கை குறித்து பல முறைப்பாடுகளை மேற்கொண்ட போதிலும், பொலிஸ் மா அதிபரினால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகானங்கள் அக்கரைப்பற்றில் வைத்து தாக்கப்பட்டமை தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவினால் விடுதலை செய்துள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி வேட்பாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க கோரியும் இதுவரை வழங்கப்பட்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment