சப்ரகமுவ மாகாண தேர்தல் அண்மித்துகொண்டிருக்கின்ற இவ்வேளையில் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தமிழ் பிரதிநித்துவம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகின்றது. நீண்ட காலமாக சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இன்மையால் இம்மாகாண மலையக தமிழ் மக்கள் தங்களுடைய இன பிரதிநிதித்துவத்தை, மத்திய மாகாண நுவரெலியா மாவட்டத்தை போல் வலுவற்றவர்களாக காணப்படுகின்றனர். கடந்த தேர்தல்களில் கேகாலை மாவட்ட வாக்காளர்கள் தேசிய கட்சிகளுக்கும் மலையகத்தை சாராதவர்களுக்கும் வாக்களித்து வந்துள்ளமை தேர்தல் பெறுபேறுகளில் இருந்து தெரியவருகின்றது.
இவ்வடிப்படையில் மலையக மக்கள் சார்பாக இம்முறை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மலையக அரசியல்-தொழிற்சங்க அமைப்புகள் ஒருங்கிணைந்து கூட்டணியாக தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இதில் இ.தொ.கா, ம.ம.மு, ஜ.ம.மு என்பன ஒன்றிணைந்து இருப்பது வரவேற்கதக்கதாகும். கேகாலை மாவட்டத்திலுள்ள வாக்காளர் என்ற அடிப்படையிலும் இம்மக்கள் சார்பாக குரல்லெழுப்புகின்றவர்கள் என்ற அடிப்படையிலும் மேற்படி கூட்டணியை வரவேற்கின்ற அதேவேளை, தமிழ் பிரதிநிதித்துவம் அவசியமானது என்பதை வழியுறுத்துகின்ற அதேNளை சில கேள்விகளுக்கு விடை காண வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.
அதாவது இ.தொ.கா, ம.ம.மு என்பவை எந்த காலத்திலும் அரசியல் தேவைக்காக ஆளும் கட்சியை சார்ந்திருப்பது ஒன்றும் ஆச்சிரியமான விடயமல்ல. ஆனால் ஜ.ம.மு குறிப்பாக திரு. மனோகனேசன் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதுடன் அவற்றுக்கெதிராக செயற்படும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து செயல்படுகின்றவர் என்ற பொதுவான கருத்து காணப்படுகின்றது. ஆகவே தமிழ் பிரதிநிதி ஒருவரை நாங்கள் தெரிவு செய்தால், இப்பிரதிநிதி எந்த அணியை சார்ந்திருப்பார் என்பது எமது கேள்வியாகும். இதை அந்த சந்தர்ப்பதிலே தீர்மாணிப்போம் என அரசியல் ரீதியாக ஒரு கருத்தை முன்வைக்கலாம். ஆனால் அது எமது தலைவிதியை தீர்மாணிக்கப்போவதில்லை.
புதிய கூட்டணி, தமிழ் பிரதிநிதித்துவம் அதன் முக்கியத்துவம் பற்றி நுற்றுக்காணக்காண கட்டுரைகள் வெளிவந்துவிட்டன. ஆனால் வெற்றியடைந்த பின் என்ன செய்யபோகின்றார்கள் என்ற அரசியல் விஞ்ஞாபனமோ, அல்லது செயற்திட்டமோ இதுவரை வெளியிடப்படவில்லை. ஒரு கூட்டணி அமைப்பதற்கு முன் அதன் செயற்திட்டங்கள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். வாக்காளர்கள் என்ற அடிப்படையில் கேகாலை மாவட்டத்தில் உள்ள எங்களுக்கு இன்றுவரையும் அவ்வாறான செயற்திட்டங்கள் கிடைக்கவில்லை.
சப்ரகமுவ மாகாணத்தில் குறிப்பாக கேகாலை மாவட்டத்திலுள்ளவர்கள் அரசியல் அநாதைகள், அந்நியவர்களிடம் கையேந்துகின்றவர்கள், அபிவிருத்தியிலே பின்நிற்கின்றவர்கள், இவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும், அரசியல் சக்தியற்றவர்கள் என்றெல்லாம் கட்டுரைகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. பெரும்பாலும் நுவரெலியா மாவட்டத்தை சார்ந்த கட்டுரையாளர்கள் கேகாலை மாவட்ட மக்களை பார்த்து இவ்வாறு அழைக்கின்றனர். இங்கு அரசியல் அநாதைகள் என்பதற்கு இவர்கள் என்ன அர்த்தம் கூறுகின்றார்கள்.
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் மலையகத்தை சார்ந்த 6 உறுப்பினர்களும், ஒரு அமைச்சரும், ஒரு பிரதி அமைச்சரும் மற்றும் மாகாண சபையில் 7 உறுப்பினர்களும், பிரதேச சபைகளில் ஏறக்குறைய 30 மேற்பட்ட உறுப்பினர்களும் காணப்படுகின்றனர். ஆனால் கேகாலை மாவட்டத்தில் எந்த உறுப்பினருமே இல்லை. ஆனால் கேகாலை மாவட்ட மலையக மக்களைவிட நுவரெலியா மாவட்டத்திலுள்ள மக்கள் என்ன மேலதிகமான மனித உரிமைகளை அனுபவித்து கொண்டிருக்கின்றாகள். சலுகைகளை பெற்றுக்கொண்டிருக்கலாம் ஆனால் உரிமைகளை பெற்று வாழ்கின்றார்களா என்பது தான் கேள்வி?
தமிழ் பிரதிநிதித்துவம் முக்கியமானதுதான். அவற்றுக்காக செயற்பட வேண்டியது எமது பொறுப்புமாகும் என்பதை நாம் அறிவோம். நமது அரசியல் பலத்தை பலப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஆனால் இவை எதற்கு? தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளும் அவர்களின் தொண்டர்களின் நலன்களுக்கும், சுகபோக வாழ்க்கைக்கும், அவர்களின் அரசியலை ஸ்திரப்படுத்துகொள்வதற்காகவா அல்லது மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுத்து அவர்களை கௌரவமான பிரஜைகளாக வாழ வழி செய்வதற்காகவா?
குறிப்பாக கேகாலை மாவட்ட தமிழ் மக்கள் அந்நியர்களிடம் கையேந்தி நிற்கின்றார்கள் என்று கட்டுரைகளில் குறிப்பிடப்படுகின்றது. யார் இந்த அந்நியர்கள்? நுவரெலியா மாவட்டத்தில் ஒரே இனத்தவர்களிடம், சாதி அடிப்படையிலேயே மேலானவர்கள், மலையக மக்களை பாதுகாக்க வந்த வீரப்புருஷர்கள், அல்லது பரம்பரை பரப்பரையாக ஆண்டுக் கொண்டுயிருப்பவர்களிடம், அதே இணத்தை சேர்ந்த பாமர தோட்டத் தொழிலாளர்கள் தேர்தல் காலங்களில் சீமெந்துக்கும், தகரத்திற்கும் மற்றும் சிலர் மதுபாணத்திற்கும் ஏனைய சிறுசலுகைகளுக்காக கையேந்தி நிற்பது, அந்நியர்களிடம் கையேந்துவதில்லையா? தோட்டத்தொழிலாளர்களை இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் அந்நியர்களாகதான் பார்கிறார்கள். ஆகவே உண்மையான அபிவிருத்தி என்பது என்ன? யாரிடம் கையேந்தினாலும் அடிமை அடிமைதான்.
மேற்படி கூட்டணி புதிய மாற்றத்தை கொண்டுவரும் என எதிர்பார்தோம். ஆனால் கேகாலை மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலை பார்த்தால், அண்ணன் தங்கை, அண்ணன் தம்பி, ஒரே இடத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். இதைவிட கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே நபர்கள், ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் காணப்படுகின்றனர். இது என்ன புதிய மாற்றத்தை கொண்டுவரப் போகின்றது?
வெறுமனே தமிழ் பிரதிநிதித்துவம் என்பதல்ல, அந்த பிரதிநிதி தகுதியானவரா, தலைமைத் தாங்கக்கூடியவரா என்பதுதான் கேள்வி? கேகாலை மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் யார் என்பதில் வெளிப்படையாக தெளிவுப்படுத்தப்படவில்லை. கேகாலை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, களுத்துறை போன்ற கரையோர மலையக மாவட்டங்களில் உள்ளவர்கள் வெறுமனே சலுகைகளை எதிர்பார்த்து வாக்களிப்பதில்லை. அந்த சலுகைகளை எந்த அரசியல் கட்சிகளிடம் சென்றாலும் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் கேட்பது உரிமை ரீதியாக வென்றுகொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். ஆகக்குறைந்தது இந்த மாவட்டத்திலே வாழ்கின்ற மக்களிடம் எந்த ஆலோசனையையும் பெறவில்லை.
தமிழ் பிரதிநிதித்துவம் என்பது சப்ரகமுவ மாகாண மக்களுக்கு தெரியாத விடயமல்ல. கடந்த காலங்களில் கேகாலை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் மாகாணசபைகளுக்கு பிரதிநிதிகளை தெரிவுசெய்தேயிருந்தனர். ஆனால் அவர்கள் மக்களுக்காக எதை சாதித்திருக்கிறார்கள். எனவே அவ்வாறானவர்கள் தொடர்ந்தும் தேவையா என்பது கேள்விகுறியாக இருக்கின்றது? மறுபக்கமாக மலையக மக்களை சாராதவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் இதை சாதித்துகொள்ளலாம் என்பது அர்த்தமல்ல.
கேகாலை மாவட்டத்தை சார்ந்தவர்கள் வெறுமனே அரசியல் அநாதைகளோ அல்லது
அந்நியரிடம் கையேந்துபவர்களோ என்ற அடையாளம் வருந்ததக்கது. கட்டுரை எழுதுகின்ற அல்லது கூட்டணி அமைக்கின்ற, சமூகசேவை அலுவலர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் நுவரெலியா மாவட்டத்தில்தான் அதிகமான சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் உரிமை மீறல், சிறுவர் தொழிலாளர், நாட்டிலே அதிகமான போஷாக்கின்மை, மிக அதிகமான வறுமை, கோவில்களைவிடவும் பள்ளிகூடங்களைவிடவும் அதிகமான மதுபான சாலைகள், சனத்தொகைகேற்ற உயர்மட்ட பாடசாலைகள் இன்மை, சனத்தொகையில் அதிகமானவர்கள் மலையக தமிழர்களாக இருந்த போதும் அரச காரியாளயங்களில் மிக குறைந்தவர்கள் காணப்படுகின்றமை, தேர்தல் காலங்களிலும், தொழிற்சங்கங்களுக்கு ஆட்சேர்க்கும் காலங்களிலும் மதுபானமும், உணவும் வழங்கும் நடைமுறையும் காணப்படுகின்றது. இந்த பலவீனங்கள் முதலிலேயே மத்திய மலைநாட்டிலே கலையப்பட வேண்டும். அவ்வாறான ஒரு தலைமைத்துவமே அரசியல் அநாதைகள்பற்றியும் அவர்களை காப்பாற்றும் வழிமுறைகள்பற்றியும் கதைக்கலாம். அதற்கு தயார்செய்யாமல் வெறமனே தமிழ் பிரதிநிதித்துவம் என்பது விழழுக்கு இரைத்த நீரப்போல் ஆகிவிடும்.
கேகாலை மாவட்டத்திலிருந்து பல்கலைகழகத்திற்கு செல்லுவோர் நுவரெலியா மாவட்டத்துடன் ஒப்பீடுகையில் தொகை குறைவுதான். இங்கு விஞ்ஞான உயர்கற்கை நெறி இல்லை. என்றாலும் எமது சனத்தொகைக்கு ஏற்ப மாணவர்கள் சென்றுகொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் இவ்வளவு அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் இருந்தும் எத்தனை 1AB பாடசாலைகள் காணப்படுகின்றன? ஆக குறைந்தது கடந்த தமிழ் தினபோட்டியில் எத்தனை இடங்களை நுவரெலியா மாவட்டத்தில் உள்ளவர்கள் பெற்றுகொண்டார்கள். கல்வி மட்டுமே அரசியல் காரணியை தீர்மானிப்பதில்லை. என்றாலும் அதுவும் ஒரு காரணிதான். அரசியல் பின்புலம் இல்லாதனால் இம்மாவட்டத்தில் காலகாலம் தமிழ் மக்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று கூறப்படுகின்றது. இந்த தாக்குதல்கள் பல்வேறு காரணிகளினால் இடம்பெற்றவைகளாகும், என்றாலும் இப்பொழுதெல்லாம் இம்மக்கள் அடிவாங்கிகொண்டு ஒடுவதைவிட நீதியின்பால் எதிர்த்து நிற்க தொடங்கியுள்ளனர். அதுவும் வன்முறை வெளிப்பாட்டிற்கு ஒரு காரணமாகும்.
ஆகவே கேகாலை மாவட்ட வாக்காளர்கள் எதிர்பார்த்தது தமிழ் கூட்டணி ஒன்று மாத்திரமல்ல. இதைவிட சிறந்த வேட்பாளர்கள், ஓர் எதிர்கால அரசியல் திட்டம், திடமான ஓர் அரசியல் நிலைப்பாடு, உரிமைகளை நிலைநாட்டுவதற்கான ஓர் கொள்கைத்திட்டம். இவை இன்றுவரையும் தெளிவில்லாமலேயே இருக்கின்றது. ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற அரசியல் கட்சிகள் இதை முன்னெடுத்திருக்கலாம். தொண்டு நிறுவனங்கள் முன்னணி அமைப்பதாக கூறிக்கொண்டு மேற்படி எந்த திட்டங்களும் இல்லாமல் மக்களை திசைத்திருப்ப முயற்சிப்பது எந்த விழைவையும் கொண்டுவரப் போவதில்லை. இறுதியாக இன அடிப்படையில் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு கேகாலை மாவட்ட மக்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் காணப்பட்டாலும் மேற்படி கேள்விகளை நாங்களே கேட்டுகொள்கின்றோம்.
No comments:
Post a Comment