Monday, September 3, 2012

கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலயத் தேர்த்திருவிழா.. வீடியோ

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்றதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை திருத் தான்தோறீஸ்வரப் பெருமான் ஆலய மஹோற்சவ தேரோட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கடந்த மாதம் 20ஆம்திகதி திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்தத்திருவிழாவின் 14ஆவது திருவிழா நாளாகும்.

இன்று தேரோட்டத்தையடுத்து திருவேட்டைத் திருவிழா மாலை 7.00மணிக்கு முனைக்காடு வைரவர் ஆலய முன்றலில் இடம்பெறுகிறது.

தொடர்ந்து தேசத்து குடிமக்களின் திருவிழாக்கள் இடம்பெற்றன. அதில், 24 ஆம் திகதி பொன்னாச்சி குடித் திருவிழாவும்,25 அம் திகதி வேடகுடித் திருவிழாவும்,26 ஆம் திகதி சஷ்டி குடித் திருவிழாவும், 27ஆம் திகதிபெத்தான் குடித் திருவிழாவும், 28 ஆம் திகதி கோப்பி குடித் திருவிழாவும், 29 ஆம் திகதி கச்சிலா குடித் திருவிழாவும், 30 ஆம் திகதி படையாட்சிகுடித் திருவிழாவும் 31 ஆம் திகதி கலிங்ககுடித் திருவிழாவும், செப்டெம்பர் 01 ஆம் திகதி உலகிப்போடிகுடித் திருவிழாவும் இடம்பெற்றதுடன் இன்று 02 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது. 

அதனையடுத்து மாலை 7.00 மணிக்கு திருவேட்டைத் திருவிழாவும் நடைபெற்று 03 ஆம் திகதி அதிகாலை தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.

திருவிழாக் காலங்களில் கலை பண்பாட்டு இசை நிகழ்வுகள் ஆண்மீகச் சொற்பொழிவுகள் மட்டக்களப்பு மரபுவழி நாட்டுக்கூத்து என்பன இரவு வேளைகளில் தினமும் இடம்பெற்றன.

இதே நேரம், பிரசித்திபெற்ற கொக்கட்டிச் சோலை தான்தோறீஸ்வரர் ஆலய தேருக்கான வடம் கன்னன்குடா மக்களால் கடந்த 24ஆம்திகதி வெள்ளிக்கிழமை தோளினால் சுமந்து செல்லப்பட்டு ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கொக்கட்டிச்சோலை தான்தோறீஸ்வரர் ஆலயத்திற்கும் கன்னன்குடா கிராமத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ள நிலையில் மரபு ரீதியாக கன்னன்குடா கிராம மக்களால் தேருக்கான வடம், தேர்அச்சி, தேர்ச் சில்லு என்பன செய்து கொடுக்கப்படுவதுடன் கொடிமரம் சீவுவதும் வழக்கமாகும்.

கடந்த 1976 ஆம் ஆண்டு தேர் வடம் திரித்து வழங்கப்பட்ட நிலையில் இவ் வருடம் மீண்டும் திரிக்கப்பட்டு  ஆலயத்திற்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com