பாடசாலை மாணவர்களை அரசியலுக்குள் இழுக்காதீர்கள்!
-எதிர்க் கட்சிகளிடம் ஜனாதிபதி பகிரங்க வேண்டுகோள்-
பாடசாலை மாணவர்களை அரசியலுக்குள் இழுக்காதீர்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேகாலை நகரில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 61ஆவது வருடாந்த மாநாட்டில் எதிர்க்கட்சிகளிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். நாட்டுக்கு சேவை செய்யக் கூடியவரே முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 61வது வருடாந்த மாநாடும் பொதுக்கூட்டமும் கேகாலை நகர பொது விளையாட்டரங்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்காகவும்- நாட்டைப் பாதுகாப்பதற்காகவும் ஆரம்பகாலம் தொட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். வெள்ளையருக்கு எதிராக நடத்த போராட்டங்களில் பாரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள்.
முன்னாள் பிரதமர்களான தேசமான்ய டி.எஸ்.சேனநாயக்க- டட்லி சேனநாயக்க- சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பீ.பீ.ஜீ.களுகல்ல போன்ற சிரேஷ்ட தலைவர்களும் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே. அதேபோல் பல தொழிற்சங்கத் தலைவர்களும் இந்த மண்ணிலிருந்து உருவாகியிருக்கிறார்கள். இவ்வாறு சிறப்பு மிக்க பிரதேசத்தில் இம்மாநாடு நடத்தப்படுகிறது.
நாட்டில் சகல துறைகளிலும் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன் னெடுக்கப்பட்டுள்ளன. வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. அதிவேக நெடுஞ்சாலை கள் அமைக்கப்படுகின்றன. குளங்களையும் கால்வாய் களையும் அபிவிருத்தி செய்துள்ளோம். இவ்வாறு சகல துறைகளிலும் நாடு துரித கதியில் மேம்படுத்தப்பட்டு வரு கிறது. இருப்பினும் சிறு சிறு குறைபாடுகள் உள்ளன. அவற்றை துரிதமாக நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்கின்றன.
இந்த நாட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டுதான் நாம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். எமது வேலைத்திட்டங்களின் இலக்கும்- நோக்கும் நாட்டினதும்- நாட்டு மக்களினதும் சுபீட்சமும் மேம்பாடுமே.
நாம் வாக்குகளை இலக்குவைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பவர்கள் அல்ல. நுரைச்சோலை அனல் மின்நிலைய வேலைத்திட்டம்- மேல்கொத்மலை நீர்மின்திட்டம் என்பன பல எதிர்ப்புக்கள் காரணமாக பல காலங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த போதிலும் நாம் அந்த வேலைத்திட்டங்களை நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு ஆரம்பித்தோம். எமக்கு வாக்குகளை விடவும் மக்களினதும்- நாட்டினதும் சுபீட்சமே முக்கியம்.
யுத்தத்தின் போதும் நாட்டையும் நாட்டு மக்களையும் கருத்தில்கொண்டே முடிவுகளை எடுத்தோம். அவ்வாறான முடிவுகளை எடுப்பதற்கு நாம் ஒருபோதும் பின்நிற்பதில்லை. அன்று உணவுக்காக அரிசிக் கப்பல் வரும்வரை காத்திருந்தோம். ஆனால் இப்போது நாம் அரிசியில் தன்னிறைவு அடைந்துள்ளோம். இது நாம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் அடைந்திருக்கும் வெற்றியின் வெளிப்பாடே.
அன்று நான் இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது பாராளுமன்ற உறுப்பினர் களுகல்ல தம்மால் முடிந்தால் கேகாலைக்கு கப்பலைக் கொண்டு வருவதாகக் கூறினார். ஆனால் அதனை அவரால் செய்ய முடியவில்லை. அதனை எம்மாலும் செய்ய முடியாது என்றாலும் நாம் ஹம்பாந்தோட்டையில் சர்வதேச துறைமுகத்தை அமைத்திருக்கின்றோம். புதிய விமான நிலையமும் அங்கு அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
நாம் செல்லுமிடமெல்லாம் யார் முதலமைச்சர் என்று வினவுகின்றார்கள். நாம் நாட்டுக்கு வேலை செய்யக்கூடியவர் களையே முதலமைச்சர் பதவியில் அமர்த்துவோம்.
புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானது என்று தெரிவிக்கப்படுகின்ற புகார் குறித்து விசாரணை நடத்தி ஒருவாரத்துக்குள் அறிக்கை தருமாறு நான் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். எந்தக் குழந்தைக்கும் அநீதி இழைக்க இடமளிக்கமாட்டேன். இருந்தும் இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை எதிர்க்கட்சிகள் மேற்கொள் ளுகின்றன. இதனையிட்டு நான் பெரிதும் கவலையடைகின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சி- மக்கள் விடுதலை முன்னணி- முற்போக்கு சமத்துவக் கட்சி ஆகிய கட்சிகளிடம் நான் மூன்று பிள்ளைகளின் தந்தையென்ற ரீதியில் கேட்கின்றேன்- பாடசாலைப் பிள்ளைகளை அரசியலுக்குள் இழுக்காதீர்கள். அவர்கள் மத்தியில் பொய் வதந்திகளைப் பரப்பாதீர்கள். அவர்கள் அப்பாவிகள். உங்கள் வதந்திகளை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.
சிறு சிறு தவறுகளை பெரிது படுத்தாதீர்கள். எமது பிள்ளைகளை வீதிகளில் இறக்க முயற்சி செய்யாதீர்கள். இவ்வாறு செய்வது எமது எதிர்கால சந்ததியினரை பாரிய பாதிப்புக்கு உள்ளாக்கும். தேசிய கொடி- தேசிய கீதம் மற்றும் மன்னர்கள்- பாதுகாப்புப் படையினர் தொடர்பாக கேட்கப்பட்டிருந்த வினாக்கள்தான் எதிர்க்கட்சியினருக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது.
மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அன்றைய முற்போக்குச் சிந்தனை கொண்ட சிரேஷ்ட தலைவர்களை இணைத்துக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அமைத்து 61 வருடங்கள் ஆகிவிட்டன. கட்சி முதல் தேர்தலில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்தது. 1956ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் நாட்டின் ஆட்சிபீடமேறியது.
இந்நாட்டின் பொதுமக்களின் சுபீட்சத்துக்கும்- எதிர்கால சந்ததியினரின் மேம்பாட்டுக்கும் ஆரோக்கியம் மிக்க நாடாகவும்- அபிவிருத்தியின் கேந்திர மையமாகவும் விளங்கும் தேசமாக இந்நாட்டை நாம் கட்டியெழுப்புவோம். அதற்காக சகலரும் ஓரணியில் திரள்வோம் என்றார்.
இந்தக் கூட்டத்தில் சிரேஷ்ட அமைச்சர்களான ஏ.எச்.எம்.பெளசி- அதாவுட செனவிரட்ன- பேராசிரியர் திஸ்ஸ விதாரண- அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன- நிமல் சிறிபால டி சில்வா- விமல் வீரவன்ச- குமார வெல்கம- சுமேதா ஜீ ஜெயசேன- டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.(எம்.ரி.-977)
0 comments :
Post a Comment